RTE -திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

RTE -திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி டி.ராஜூ, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அவரது மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்க்க அவர்களது பெற்றோர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது என நாளிதழ்களில் செய்தி வெளியானது. மேலும், இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தவிர புத்தகம், சீருடை உள்ளிட்ட செலவினங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இதனால் ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இலவச கல்வித் திட்டத்தில் சேருபவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்திற்கு எதிரானது. இலவச கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இலவச கல்வித் திட்டத்தில் சேரும் மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இலவச கட்டாயக் கல்வித் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்வது அவசியம். இதில் முறைகேடுகள் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி