277 போலி இன்ஜினியரிங் கல்லூரிகள் - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2018

277 போலி இன்ஜினியரிங் கல்லூரிகள் - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தகவல்!

நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் 277 போலியானவை என்றும், அதில் டெல்லியில் அதிகபட்சமாக 66 கல்லூரிகளும், தமிழகத்தில் 11 கல்லூரிகளும் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் கூறியதாவது: நாட்டில் 277 போலி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்படுகின்றன. போலி இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகபட்சமாக டெல்லியில்தான் உள்ளன. அதாவது 4ல் ஒரு பங்கு போலி கல்லூரிகள் இங்குதான் செயல்கின்றன. டெல்லியில் 66 போலி இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. போலி கல்லூரிகள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 35 கல்லூரிகளுடன் இரண்டாமிடத்தில் தெலங்கானாவும், 27 கல்லூரிகளுடன் மூன்றாமிடத்தில் மேற்குவங்கமும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என நாட்டின் 17 பகுதிகளில் போலி இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்குகின்றன.

அதில் தமிழகத்தில் 11 போலி இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலி கல்லூரிகளில், அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெறாத பாடத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி பெறாத பாடங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என பொது அறிவிப்பு மற்றும் தனிப்பட்ட முறையில் மாநிலங்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தும் பல கல்வி நிறுவனங்களில் அதனைப் பொருட்படுத்தாமல், அனுமதிக்கப்படாத பாடப் பிரிவுகளிலும் வகுப்பு நடத்தப்படுகிறது. இதுபோன்ற போலி நிறுவனங்களை இழுத்து மூடக் கூறியுள்ளோம்.

பல்கலைக்கழக நிதி ஆணையத்தின் (யுஜிசி) இணையதளத்திலும் 24 போலி கல்வி நிறுவனங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. புதிதாக துவங்கும் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் அதில் எந்தெந்த வகுப்புகளுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் வரண்முறை செய்தல் போன்றவைகளுக்காக ஏஐசிடிஇயின் சட்டப் பிரிவுகளுடன் வேறொரு பிரத்யேக சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டது. புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பதாக இருந்தால் அது பற்றி ஏஐசிடியில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலி கல்லூரிகள் என உறுதி செய்யப்பட்டால், உடனடியாக இழுத்து மூடும்படி அந்தந்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

டெல்லி போலி பல்கலைக்கழகங்கள்
டெல்லியில் கமர்ஷியல் பல்கலைக்கழகம், யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், வொகேஷனல் பல்கலைக்கழகம்,  ஏடிஆர் - சென்ட்ரிக் ஜூடிஷியல் பல்கலைக்கழகம், இன்டியன் இன்ஸ்ட்டிடியூட் அப் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், விஸ்வகர்மா ஓப்பன் பல்கலைக்கழகம், அத்யாத்மிக் விஷ்வவித்யாலயா, வாரனேசிய சன்ஸ்கிரிட் விஷ்வவித்யாலயா ஆகியவை போலி கல்வி நிறுவனங்கள் என யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி