பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்  ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மறைந்த கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அங்கிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

95 வயதான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாநிதி காலமானார். 25ம் தேதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.

கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கலைஞர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.



அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வலியுறுத்தல்:

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். துயரமான தருணத்தில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும் என கூறியுள்ளார். கலைஞருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. 5 முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதே பொருத்தமானது என வலியுறுத்துகின்றனர். மெரினாவில் இடம் தர அரசு மறுத்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று தெரிவித்தனர்.

அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. மேலும் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசுக்கு, கி.வீரமணி, ராமதாஸ், திருநாவுக்கரசர், வைகோ, விஜயகாந்த், முத்தரசன், பாலகிருஷ்ணன், குலாம்நபி ஆசாத், வைரமுத்து உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க ஹஜ் கமிட்டி வலியுறுத்தியது. சிறுபான்மையினரின் பாதுகாவலர் கலைஞர் என ஹஜ் கமிட்டி புகழாரம் சூட்டியது. கலைஞர் உடலை அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை ரஜினிகாந்த் கூறியுள்ளார். அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம்! சட்டமும் அரசும் தயவு கூர்ந்து அண்ணா சமாதி அருகே இடம் கொடுத்தல் நலம் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழை செம்மொழி ஆக்கி வள்ளுவனுக்கு கோட்டமும் சிலையும், தமிழ் மேதைகள் அனைவருக்கும் மெரினாவில் சிலை வைத்தவர் அன்றோ என்றும் நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெரினாவில் இடம் வேண்டும் என்று திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மெரினாவில் இடம் வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேண்டும் வேண்டும் கலைஞருக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கம் எழுப்பி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தருவது அந்த மாபெரும் தலைவருக்கு
நாம் செய்யும் மரியாதை, கடமை என்று நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார். அரசியல் காழ்புணர்ச்சிக்கு இது நேரம் அல்ல என்று நடிகை விஜய் சேதுபதி கூறியுள்ளார். 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு பணியாற்றிய கலைஞருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிறப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை:

திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக ஜூன் 3-ம் தேதி 1924-ம் ஆண்டு பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அவர் தன்னுடைய 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் கருணாநிதி தன் அரசியலில் தீவிரத்தைக் காட்டினார்.

தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கியவர் கருணாநிதி ஆவார். தன் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். பின்னர் குளித்தலையில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் திமுக அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. கருணாநிதி பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார். மேலும் தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்திருந்தார். ஒரு கட்சியின் தலைவாரக 50 ஆணடு தொடர்வது என்பது மிக பெரிய சாதனையாகும். அதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி நிகழ்த்தியுள்ளார். திமுக தலைவர் 50-ம் ஆண்டு பொன் விழாவை கடந்த மாதம் 27 ம் தேதி கொண்டாடினார்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலை குறித்து தொலைபேசியல்  பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆகியோர் நேரில் சென்று ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வெளி மாநில முதல்வர்கள் , நடிகர்கள் ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தனர். இந்நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.



கருணாநிதியின் தீராத தமிழ் காதல்:

கலை மற்றும் இலக்கிய துறைகளில் இடைவிடா எழுத்து பணியை தொடர்ந்தார். அவர் எழுதிய உடன் பிறப்புக்கு கடிதம் என்ற தொடர் உலகின் நீண்ட தொடர்களில் ஒன்றாகும். கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை தூத்துமேடை நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா சூட்டினார். அந்த கலைஞர் என்ற பட்டம் இன்று வரை அழைக்கப்படுகிறது. அவருக்கு முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்கள் உள்ளது. ஆனால், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். இதை தோடர்ந்து முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942-ம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, முரசொலி என்ற மாத இதழைத் தொடங்கினார்.

அதில் சேரன் என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார். திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதினார். அதை தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். கடைசியாக அவர் கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர் மற்றும் தொலைக்காட்சி தொடர் ராமானுஜர் ஆகியவையாகும்.

கருணாநிதியின் ஆட்சி காலங்கள்:

* 1969-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை (கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின்) முதல் முறை ஆட்சி செய்தார்.
* 1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஆட்சி செய்தார்.
* 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை  (எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின்) மூன்றாம் முறை ஆட்சி செய்தார்.
* 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நான்காம் முறை ஆட்சி செய்தார்.
* 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஐந்தாம் முறை ஆட்சி செய்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி