3000 பள்ளிகள் தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மூடப்படுகிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

3000 பள்ளிகள் தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மூடப்படுகிறது?


தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி மற்றும் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மாணவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி வழங்குவது தான் அரசின் கடமை எனும் நிலையில், அக்கடமையை செய்யாமல்  பள்ளிகளை இழுத்து மூட தமிழக பினாமி ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 810 அரசு பள்ளிகளை மூடுவதற்கு கடந்த  ஆண்டே தமிழக அரசு தீர்மானித்திருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கடும்  எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது. எனினும், 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், அப்பள்ளிகளை மூடி விட்டு அதில் தற்போது பயின்று வரும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. புதுதில்லியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகக் கூட்டத்தில் தமிழக அரசின் இம்முடிவை மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் முறைப்படி தெரிவித்து விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதவிர 15-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 1950 பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி  செய்வதை நிறுத்திவிட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளுக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் 9 முதல் 12 வரை உள்ள  பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இப்போது இரு திட்டங்களையும் இணைத்துள்ள மத்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க முடியாது என்று கூறிவிட்டது. அதனால் அந்த பள்ளிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தும்படி மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு 1053 பள்ளிகளும் பிற பள்ளிகளுடன் இணைக்கப் படவுள்ளன. அதேபோல், நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 1950 பள்ளிகளையும் நடத்த முடியாத நிலை விரைவில் ஏற்படும். அதனால் அந்த பள்ளிகளும் மூடப்படுவது உறுதியாகி விட்டதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதாக தொடர்ந்து பெருமை பேசி வரும் பினாமி அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிக் கூடங்களை மூடுவது மிகப்பெரிய அவமானமாகும்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி பள்ளிக்கூடங்களை மூடுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்களில் சேரும் மாணவர்கள்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளும்  சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு  பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கும் மேல் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து அரசு பள்ளிகளில் குறைந்தால் அதற்கான காரணங்கள் என்னென்ன?  என்பதை கண்டறிந்து, அவற்றை சரி செய்வது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். ஆனால்,  தமிழக அரசோ, அதை செய்யாமல் மிகவும் எளிதாக பள்ளிகளை மூடி பொறுப்பை கை கழுவுகிறது.

2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது. அதற்காக அந்த மதுக்கடைகளை அரசு மூடிவிடவில்லை. மாறாக, மது விற்பனை குறைந்ததற்கான காரணங்களை கண்டறிவதற்காக  SWOT (Strengths, Weaknesses Opportunities, Threats) ஆய்வை அரசு மேற்கொண்டது. அதில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு மது வணிகத்தை தமிழக அரசு அதிகரிக்கச் செய்தது. நாட்டை சீரழிக்கும் மது வணிகம் குறைந்தவுடன், அதை சரி செய்வதற்காக ஸ்வாட் ஆய்வை மேற்கொண்ட அரசு, நாட்டின் முன்னேற்றத்திற்கான கல்வி வளர்ச்சிக்கு அத்தகைய ஆய்வு எதையும் செய்யாமல் பள்ளிக்கூடங்களை மூடத் துடிக்கிறது. தமிழக அரசு படிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது... குடிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் காமராசர் முதலமைச்சராக இருந்த போது 16,000 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இப்போது  மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அது அப்பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமையும். ஒரு காலத்தில் ஆயிரம் அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு தனியார் பள்ளி இருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இது தான் 50 ஆண்டு திராவிடக் கட்சிகளின் சாதனை ஆகும். தனியார் பள்ளிகள் தழைத்தோங்குவதற்காகவே பினாமி அரசு இவ்வாறு செய்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தி அவற்றை தொடர்ந்து நடத்த பினாமி அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என எச்சரிக்கிறேன்.

28 comments:

  1. Hi this Saravanan, Palligalil maanavar yennikkai kuraivadharku mukkiya kaaranam petrorgal thangaladhu kulandhaigalai perumaiku thaniyar palligalil serpathum oru kaaranam. Arasidam irukka vendiya kalthurai indru private kaiyil irupadhu miga mukkiya karanam.

    ReplyDelete
  2. குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அருகில் அதிக மாணவர்கள் உள்ள பள்ளியில் இருந்து 20% மாணவர்களை ,குறைந் தமாணவர்கள் உள்ள பள்ளிக்கு அனுப்பி பள்ளியை நிலை நிருத்தி வரும் காலங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. இந்த Lkg,ukg ஐ மூடப்போகும் பள்ளிகளில் ஆரம்பித்தால் strength may increase

      Delete
  3. மூடாதே!மூடாதே!
    இலவசமாக கல்வி வழங்கும் அரசு ப்பள்ளியியை மூடாதே!
    மூடு!மூடு!
    தெருவிற்குத் தெருவிற்கு திறந்துள்ளது உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடு!
    மத்திய,மாநில அரசே!
    கல்வி அடிப்படை உரிமை.
    அதை வழங்கும் கடமையைச் செய்ய முடியவில்லையேல் ஆட்சி செய்யும் திறனற்ற வர்கள் ஆவீர்கள்..
    இருக்கின்ற கல்விச் சூழலை முன்னேற்றமுடியவில்லையென்றாலும் பராபராவாயில்
    ஆனால்
    இருக்கும் கொஞ்சநஞ்ச கல்விச்சூழலைஅழிக்கும் படுமோசமான வேலையைச் செய்ய எதற்கு உங்களுக்கு அரசப்பதவி, மக்களின் வரிப் பணத்தில் சம்பளம்??????????????
    இது மோசமான பாதையை நோக்கி தமிழகத்தின் கல்வித்தரத்தை க்ரீ குறைப்பதற்கு மத்திய அரசின் சதிக்கு செத்த மாநில அரசு அடிமையைவிடமோசமான கொலைகாரச்செயலை முன்நின்று நடத்துவது போல் உள்ளது....
    முதலில் அரசுத்துறைமாணவர்களும்,
    அரசு ஊழியர்களும்,
    பொதுமக்களும் சேர்ந்து இதற்கு தீர்வு காண போராடினோம் அல்லது
    அனைத்து தரப்பினருக்கும் நிலையினை உணர்த்தி ஒன்றுசேர்ந்து கைகோர்த்து ஒன்றைக் குரலாக ஒலிக்கச் செய்யும்....

    ReplyDelete
  4. சாராய கடையின் விற்பனை குறைந்த போது அதனை களைய குழு அமைத்து முன்னேற்றம் கண்ட இந்த அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறி அந்த பள்ளிகளை மூடுவதாக அறிவித்திருத்திருப்பது கேள்வி பட்டு மனம் துடித்து போனேன்.ஆள தகுதி இல்லாத அரசை தூக்கி எறிய வலிமை இல்லாமல் இந்த உலகில் வாழ்வதே வீண் என்று மனம் நொந்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  5. தாத்தா காந்தியும்,மாமா நேருவும் தேடிய செல்வங்களை உருவாக்கும் கல்விக்கூடங்களை தயவு செய்து மூடாதீர்கள். மாநில அரசே மடிப்பிச்சை ஏந்தி மன்றாடி வேண்டுகிறோம்.

    ReplyDelete
  6. தநியார் பள்ளிகளை மூடுங்கள் மடயர்களே.காமராஜர் கொண்டு வந்த திட்டத்தை ஏன் அழிக்கிரீர்கள் நயவஞ்சகர்களே.

    ReplyDelete
  7. Thamila erundakalam...edapadi kalam.

    ReplyDelete
  8. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொறுத்தும் அல்லது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 50 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    ReplyDelete
  9. Vote vanguvadharkaga teacher sambalam palamadangu uyarthapatta podhu nidhi nerukadiyai patri yosika theriyala.

    ReplyDelete
  10. தனியார் பள்ளிகள் 3 வயது குழந்தைகளுக்கு வந்த உடனே விடுமுறை நாட்களில் பெற்றோரிடத்தில் கேன்வாஸ் செய்து தங்களின் பள்ளிகளுக்கு மாணவர்களை இழுத்துக்கொள்கின்றனர்.அதே போன்று பெற்றோரும் அரசு பள்ளிகளில் சேர்க்க 5 வயது வரை காத்திருப்பதில்லை. அரசு உடனடியாக அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் LKG,UKG வகுப்புகளை உடனடியாக தொடங்கி LKG முதல் +2 வரை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் அரசு கல்லூரிகளில் 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இப்படி செய்தால் அரசு பள்ளிகளில் தானாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

    ReplyDelete
  11. Private schools limit pannunga sir.Eligibility staff appointment pannunga.TET compulsory pass nu sollunga.Appa paarunga private school irukkathu

    ReplyDelete
  12. மக்கள் வரிப்பனம் நியாயமாகப் பயன்படுத்தவேண்டும்

    ReplyDelete
  13. 20 பிள்ளைகளுக்கு ஒரு பள்ளி என்றால் கூட ஆசிரியர் சம்பளம், இலவசம் எல்லாம் கணக்கிட்டால் ஒரு மாணவருக்கு வருடம் ஒரு லட்சம் ஆகிறது மக்கள் வரிப்பணம்

    ReplyDelete
  14. ஆசிரியர் பிள்ளைகள் காமராசர் காலத்தில் எங்கு படித்தார்கள்?

    ReplyDelete
  15. போரட்டம் நடத்துவோம் என்று சொல்பவர்களுடய குழந்தை, பேரக்குழதைகள் எங்கு படிக்கின்றனர்?

    ReplyDelete
  16. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் மத்தியில் முன்பு போல், ,,,,

    ReplyDelete
  17. தனியார் பள்ளியில் சேர சொல்வதே அரசு பள்ளி ஆசிரியர்கள்தான்( மறைமுகமாக)

    ReplyDelete
  18. கல்வி புரட்சியில் இந்தியாவிலேயே. தமிழகம் முதலிடம் இதுதான்

    ReplyDelete
  19. அரசு பள்ளிகளில் குறைந்த அளவும் தனியார் பள்ளிகளில் அதிக அளவும் உண்டாவதற்கு காரணம் மக்களின் ஆங்கில ஆசை தான். அரசு பள்ளிகளை முடக்குவதற்கு பதிலாக தனியார் பள்ளிகளை மூடலாம்... என்றைக்கு கல்வி வியாபாரம் ஆனதோ அன்றே அரசு பள்ளிகள் நிற்கதியாகிவிட்டது...

    ReplyDelete
  20. அரசு பள்ளிகளில் குறைந்த அளவும் தனியார் பள்ளிகளில் அதிக அளவும் உண்டாவதற்கு காரணம் மக்களின் ஆங்கில ஆசை தான். அரசு பள்ளிகளை முடக்குவதற்கு பதிலாக தனியார் பள்ளிகளை மூடலாம்... என்றைக்கு கல்வி வியாபாரம் ஆனதோ அன்றே அரசு பள்ளிகள் நிற்கதியாகிவிட்டது...

    ReplyDelete
  21. இந்தி வேண்டாம் OKஆங்கிலமும் வேண்டாமா

    ReplyDelete
  22. தனியார் பள்ளியில் இடஒதுக்கீடு கிடையாது( ஆசிரியர் வேலைக்கு) 9 மாத விடுப்பு இல்லை( பென் ஆசிரியர்) தனியார் துறை எல்லாவற்றையும் மூடச்சொல்ல முடியுமா

    ReplyDelete
  23. ivanunga kudika mattum than wineshop thorappanunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி