வாகனங்களுக்கு புதிய இன்சூரன்ஸ் இன்று முதல் அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

வாகனங்களுக்கு புதிய இன்சூரன்ஸ் இன்று முதல் அமல்!

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் இன்று முதல் அமலாகிறது.
இதனால் புதிய கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமிய தொகை உயர்கிறது. மேலும் கார், மோட்டார் சைக்கிள் விலை உயருகிறது. கார், மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது ஒன்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. அதன்பின் அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால் பலர் புதுப்பிப்பது இல்லை. இந்த நிலையில் நீண்டகால காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு நீண்டகால இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது. மேலும் கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் இன்சூரன்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  இந்த புதிய முறையை அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது நேற்று வரை விற்ற இரு சக்கர வாகனங்களுக்கு 75 சிசி மற்றும் அதற்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு வருட பாலிசி கட்டணம் ரூ.427 என்று இருந்தது. இது தற்போது 5 வருட பாலிசி என்பதால் ரூ.1,045 என்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாலிசிக்காக கூடுதலாக ரூ.618 செலுத்த வேண்டும். 75 முதல் 150 சிசி இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் ரூ.720 என்று இருந்தது. இது தற்போது 5 வருட பாலிசியால் ரூ.3285 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.2,565 கட்ட வேண்டும்.

150 சிசி முதல் 350 சிசி வரை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.980 என்பது, தற்போது ரூ.5,453 ஆக இன்சூரன்ஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. கூடுதலாக ரூ.4,473 செலுத்த வேண்டும். 350 சிசிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2323 வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.13,034 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொகை ரூ.10,711 செலுத்த வேண்டும். கார்களுக்கு இன்ஜின் 1000 சிசிசி வரை ஒரு வருட பாலிசி ரூ.1850 ஆக இருந்தது. இது மூன்று வருட பாலிசியாவதால் ரூ.5,286 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.3,436 கூடுதலாக வழங்க வேண்டும். 1,000 சிசிக்கு மேல் 1,500 சிசிக்குள் உள்ள கார்களுக்கு ஒருவருட பாலிசி ரூ.2863. இது மூன்று வருட வருட பாலிசி என்பதால் ரூ.9,534 கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது கூடுதலாக ரூ.6,671 கட்டணம் செலுத்த வேண்டும். 1500 சிசிக்கு மேல் வரை ஒரு வருட பாலிசி ரூ.7,890 என்று கட்டணம் இருந்தது. இது தற்போது மூன்று வருட பாலிசி என்பதால் ரூ.24,305 செலுத்த வேண்டும். கூடுதலாக ரூ.16,415 செலுத்த வேண்டும்.

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டத்தால் கார், மோட்டார் சைக்கிள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது கார் விலை ரூ.5 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் விலையும் ரூ.1000 முதல் ரூ.13 ஆயிரம் வரை வாகனங்களின் இன்ஜின் ஆற்றலுக்கு ஏற்ப விலை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. அதே போல 1000 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மற்றும் 75 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதாவது, ஒரே நேரத்தில் இவ்வளவு தொகை கட்ட வேண்டுமா? என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  எனவே. பழைய முறைப்படியே இன்சூரன்ஸ் வசூலிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் ஆண்டு தோறும் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு தவிர்க்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி