NEET - நீட் பயிற்சி : ஆசிரியர்கள் புலம்பல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

NEET - நீட் பயிற்சி : ஆசிரியர்கள் புலம்பல்!


வெள்ளிக்கிழமை   மதியம் +1மாணவர்களை  திங்கள்கிழமைக்கான வேதியியல் தேர்வுக்கு தயார் செய்வது முக்கியமா? அல்லது NEET பயிற்சிக்கு செல்வது முக்கியமா? இப்படி எதை முதலில் செய்யவேண்டும், எதை அடுத்து செய்யவேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாது தானும் குழம்பி ஆசிரியர்களையும் சரியான வழியில் செயல்படவிடாமல் இப்படி NEET NEET என்று பைத்தியம் பிடிக்காத குறையாக செயல்படும் பள்ளிக்கல்வித்துறை கனவான்களே, மாணவனை தேர்வு நேரத்தில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் அருகில் இருந்து கவனித்தாலே அவன் சரியாக படிப்பதில்லை.  இந்த லட்சணத்தில் தேர்வு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாட ஆசிரியர் மாணவரை கவனிக்கமுடியாத வகையில் தொடர்ந்து NEET பயிற்சி என்ற பெயரில் ஆசிரியர்களை படுத்தி எடுத்தால் மாணவன் தேர்வில் தோல்வி அடைவது உறுதி! பிறகு  Result analysis எல்லாம் கேடடு எங்களை மேலும் வெறுப்பேற்ற வேண்டாம் என்பதையும் இப்பொழுதே சொல்லிவிடுகிறோம்.

ஐயா பள்ளிக்கல்வித்துறை பகலவன்களே!  முதலில் சரியாக தேர்வுக்குரிய பாடம் (portion) சொல்லி தேர்வு நடத்த முயற்சி செய்யுங்கள்!

பள்ளிகளில் முதலில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குங்கள்.   சுவரே இல்லாமல் சித்திரம் எப்படி வரையமுடியும்? Smart classroom இருந்தால்தான் QR code உபயோகப்படுத்தி பாடம் நடத்த முடியும்.    7000 smartclass வருதுங்கோ....16000 வரப்போகுதுங்கோ... என்று பத்திரிக்கைக்காரர்களை பார்த்தாலே உங்கள் எண்ணங்களை கூறி மட்டும் கொண்டிருப்பதை முதலில் நிறுத்திவிட்டு அவைகளை செயல்படுத்த முழு முயற்சி எடுங்கள்.

எத்தனையோ பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் அடிப்படையான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை.  அவைகளை ஏற்படுத்தித்தர முதலில் முயற்சி செய்யுங்கள்.

எத்தனையோ பள்ளிகளில் ஆய்வகங்களோ, ஆய்வகங்கள் இருந்தால் தேவையான பொருட்களோ இல்லை.  அதை முதலில் சரி செய்யலாமே!

முதலில் +1 மாணவர்களுக்கு இரண்டாம் தொகுதி புத்தகங்கள் தயார் செய்து விட்டீர்களா என்று பாருங்கள்!  முதல் தொகுதி பள்ளி திறந்து ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து கிடைத்தது.  இரண்டாம் தொகுதி எப்பொழுது கிடைக்குமோ?

எத்தனையோ பள்ளிகளில் பாடங்களை நடத்த ஆசிரியர்களே இல்லை அல்லது போதுமான ஆசிரியர்களே இல்லை.  அதை முதலில் சரி செய்யுங்கள்.  மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

நாம் ஒன்றாவது வகுப்பிலிருந்து ஒன்பதாவது வகுப்பு வரை மாணவரை கட்டாயமாக தேர்ச்சி பெற வைத்துவிட்டு தட்டுத்தடுமாறி ஆசிரியர்களின் கடும் உழைப்பால் தேர்ச்சி பெற்று வரும் மாணவரை NEET தேர்வில் தேர்ச்சி பெற ஆசைப்படுவது உங்கள் விருப்பமாக இருக்கலாம்.  ஆனால் இங்கு தேர்ச்சி பெறவைக்கும் அடிப்படையே தவறாக இருக்கும்போது நமது செயல்கள் அந்த அடிப்படைகளை சரிசெய்ய நினைக்காமல், அடிப்படை அறிவே இல்லாத (என்று சொல்வதை விட இல்லாது நம் தேர்வுமுறைகளால் ஆக்கப்பட்ட என்பதே சரியாக இருக்கும்)  மாணவன் NEET தேர்வில் தேர்ச்சி பெற ஆசைப்படுவது  முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதாகாதா?

முதலில் ஆரம்பப்பள்ளியிலிருந்து தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வாருங்கள்.  பிறகு நடப்பதைப் பாருங்கள்!

என்றைக்கு படிப்பைவிட மாணவரின் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து,  மாணவரின் ஒழுக்கத்தைப் பேணுவதே ஆசிரியரின் முதல் கடமை என அரசு மாணவரின் ஒழுக்கத்தைப் பேணுவதில் ஆசிரியருக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறதோ
பிறகு பாருங்கள் மாணவரின் தரம் எப்படி உயர்கிறது என்று?

100 சதவீத தேர்ச்சி...100 சதவீத தேர்ச்சி என்று புலம்புவதை முதலில் நிறுத்துங்கள்.  100 சதவீத தேர்ச்சி அடைந்து எதை சாதிக்கப் போகிறீர்கள்?

+2 தேர்வில் படுதோல்வி அடைபவனுக்கு எதற்காக  இலவச laptop கொடுக்கிறீர்கள்? அதற்கு பதில் +2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 60 சதவீத மதிப்பெண் எடுப்பவருக்கு மட்டுமே இனி இலவச laptop என அறிவித்து அதன்படி கொடுத்துப்பாருங்கள் மாணவரின் தரமும் தேர்ச்சி சதவீதமும் தானாக உயர்வதை!  இப்படி ஊதாரித்தனமாக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதை முதலில் நிறுத்துங்கள்!  இந்த பணத்தை உழைக்கும் ஆசிரியருக்கு மனமுவந்து கொடுங்கள்.  நீதிமன்றம் தலையிடும் நிலை தவிருங்கள்!

நாட்டில் சம்பளத்தை விட பலமடங்கு கிம்பளம் வாங்கும் எத்தனையோ அரசுத் துறை, அரசு ஊழியர் இருக்க நல் எதிர்கால சமூகத்துக்கான குடிமக்களை, இன்றைய மாணவ சமுதாயத்தை உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியப்பெருமக்கள் பெறும் ஊதிபத்தைப சுட்டிக்காட்டி  கண்ணியமற்று பேசும் ஒரு முதல்வர் தலைமையில் இ ந்த மாற்றங்களெல்லாம் எங்களது பகல் கனவுதான்!  இது போல இன்னும் எத்தனையோ நல் மாற்றங்களை எதிர்நோக்கி.....

---ஆசிரிய சமுதாயம்.

2 comments:

  1. நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை,சத்தியம்.10 to 12 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களின் பணி மிக மிக கடிணம், பாராட்டதக்கது. இங்கணம் ஆசிரியர் அல்ல, நான் பெற்றோர் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி