பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் இல்லை -கடை கடையாக அலையும் பெற்றோர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2018

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் இல்லை -கடை கடையாக அலையும் பெற்றோர்


பிளஸ் 1 வகுப்புக்கான 2ம் தொகுதி பாடப்புத்தகம்கிடைக்காததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில்  கடைகடையாக ஏறி இறங்குவதாக மாணவர்களின்பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 12 ஆயிரம்உள்ளது.

இந்த பள்ளிகளில் லட்சுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படவேண்டும். ஆனால், 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். அதன்படி, 1,6, 9, 11 ஆகிய வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றமைப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு புது சீருடை, 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், இவைகள் முழுவதுமாக அமல்படுத்தவில்லை என்பதுதான் மாணவர்கள்  மற்றும் பெற்றோர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது.காரணம், பொதுத்தேர்வுக்கான போதிய பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படாததும், பொதுத்தேர்வை எதிர்கொள்ள உரிய ஆலோசனை வழங்காததும்தான். இதனால், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர். கடந்தாண்டு 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வுநடந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டது. இதில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் இரண்டாம் தாள் நீக்கப்பட்டு, ஒரே தாளாக தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏற்ப சில வசதிகளை பள்ளி கல்வித்துறை செய்தாலும், இந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க முனைப்பு காட்டவில்லை என்பது அவர்களின் செயல் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பாடப்புத்தகங்கள் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடங்களை புரிந்து கொள்வதில் மாணவர்கள் இடையே சிரமம் இருக்கிறது.

கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்து பிளஸ் 1 பாடத்திட்டத்தில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 2 தொகுதிகளாக புத்தகங்கள் அச்சிட்டு வழங்கினர். கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து பாடப்பிரிவுகளுக்கான புத்தகங்கள் முழுமையாக வழங்கிவிடுவார்கள். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட சில மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகளுக்கு பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களில் முதல் தொகுதி மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.2வது தொகுதி, காலாண்டு தேர்வு முடிந்த பின்னர், வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்கள் ஆகி உள்ள நிலையில், 2வது தொகுதி இதுவரை கிடைக்கவில்லை. இதனால், ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். தாமதமாக புத்தகங்கள் கிடைத்தால் பொதுத் தேர்வுக்கு தயாராவது மிகவும் கடினம். இதனால், சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், இணையதளத்தில் இருந்து புத்தகங்களை பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுத்து, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர். எனவே, பிளஸ் 1 வகுப்புக்கான 2வது தொகுதியை வழங்கி, பாடங்களை நடத்த வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கல்வி துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்,‘‘தற்போது மாணவர்களின் கல்வி என்பது, குழப்பமான முறையில் இருக்கிறது. காரணம், முதலில் பிளஸ் 1 பொதுத்தேர்வாக மாற்றினார்கள். 1200 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. பின்னர், 600 ஆக மாற்றினார்கள். தமிழ், ஆங்கிலம் ஒரே தாள் என்று சொன்னார்கள், சில நாட்களில் பிளஸ் 1 மதிப்பெண்கள் கல்லுரி சேர்க்கையில் அங்கீகரிக்கப்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு புதிய பாடத்திட்டத்தை மாற்றினால், அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்திருக்க வேண்டும். எல்லாம் தயார் நிலையில் இருந்தபின்பு தான் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும். நாங்கள் புதிய பாடத்திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மாணவர்களின் கல்வியை உரிய தரத்துடன் அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசோ ஒரு குழப்பான கல்வியைதான் மாணவர்களுக்கு அளித்து வருகிறது.

இவ்வாறு சென்றால், அரசு பள்ளிகளின் நிலைமை கேள்விக்குறியாக தான் இருக்கும். சிபிஎஸ்இக்கு இணையாக அரசு பள்ளிகளில்கல்வித்தரம் உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் அரசு ஈடுபடுகிறதா என்றே தெரியவில்லை. பிளஸ் 1 பாடத்திட்டத்தில், புதிய பாடங்களை கொண்டு வந்துள்ளனர். இதில், தெளிவில்லாத பாட தொகுப்புகள் உள்ளன. இதனால், மாணவர்கள் சரிவர படிக்க முடியவில்லை. சில மாணவர்களின் பெற்றோர் கடையில் வாங்க சென்றாலும் பாட புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை.

இணையதளத்தில் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது. இதனால், கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் உயர்மா என்ற சந்தேகம் உள்ளது’’ என்றனர். 2வது தொகுதி, காலாண்டுதேர்வு முடிந்த பின்னர், வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் வழங்கப்படவில்லை

1 comment:

  1. விலை இல்லா மடிக்கணினி குடுக்குறோம்ல, அதுல டவுன்லோட் பண்ணி படிக்கலாமே, ஏன் படம் மட்டும் தான் பாக்கணுமா அதுல??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி