இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2018

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்!


ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் கேட்டு 3-வது நாளாக தொடர் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களில் இதுவரை 102 பேர் மயக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது  ஊதியக் குழுவின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில், இடைநிலை ஆசிரியர்களில் இரு வேறு ஊதிய வேறுபாடு உள்ளது.

 2009ம் ஆண்டு மே 31ம் தேதிவரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அடுத்த நாள் 1.6.2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தேதி பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200  என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் ஊதியத்தில் ரூ.3,170 வேறுபாடு உள்ளது. அதனால், ஒரு கல்வித்தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் நிர்ணயம்  செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அரசுத் தரப்பில் இதுதொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்காத நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய  ஊதியத்தை நிர்ணயம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை அளித்தது. ஆனால் பரிந்துரையின்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 23ம் தேதி தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக  பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து அன்று மாலை சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில்  முற்றுகையிட்டு  நீர் அருந்தா உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். இருப்பினும், ஆசிரியர்கள் ஸ்டேடியத்துக்குள்ளே நீர் அருந்தா உண்ணா  விரதத்தை தொடர்ந்தனர்.

இதனால் போராட்டத்தின் 2வது நாளான நேற்று காலை, இரண்டு பெண் ஆசிரியைகள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நேற்று ஒரே  நாளில் 20 ஆசிரியர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2வது நாளாக கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று  அறிவித்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆசிரியர்களை நேற்று மாலை போலீசார் வெளியேற்றினர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்திற்கு நடந்தே வந்தனர். அப்போது 2 நாட்களாக உணவு சாப்பிடாததால் வரும் வழியிலேயே 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். டிபிஐ வளாகத்தில் நுழைந்த ஆசிரியர்கள் நேற்று இரவு முதல், அங்கு போராட்டத்தை தொடர்கின்றனர்.போராட்டம் நடத்தும் இடத்திலேயே ஆசிரியர்கள் இரவில் உறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர்  இன்று மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மற்றவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனை தொடர்ந்து இன்று இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை  நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். இந்நிலையில் போராட்டத்தின் போது இதுவரை 102 ஆசிரியர்கள்  மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த ஆசிரியர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் செல்வநாகரத்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி