சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளர்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளர்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேட்டி


சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன. தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டியது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்களை பொறுத்தவரை 3ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 17பி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் தொடருவதால் தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. நேற்று ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடங்களை காலி பணியிடமாக அறிவித்து அதில் வேறு ஆசிரியர்களை நியமிக்கப்படுவார்கள் என இறுதி கெடு விதித்து ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளையும் பள்ளி கல்வித் துறை செய்து வருகிறது. அவர்களுக்கான சம்பளம் ரூ.10ஆயிரம் என அறிவித்துள்ளதால், வேலை இல்லாமல் இருக்கும் ஆசிரியர்கள் இப்பணிகளுக்கு ஆர்வமுடன் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் பணிக்கு மீண்டும் திரும்பினால் ஏற்கனவே பணியிடங்களை வழங்காமல் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றவும் முடிவு செய்திருப்பதாக பள்ளி கல்வித் துறை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் அரசின் மிரட்டலுக்கு பயந்து நேற்று காலை முதல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களில் 45 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 50 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வந்து உள்ளே செல்லாமல் வெளியில் நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு நேர் எதிராக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 100 சதவீதம் பேர் பணிகளை புறக்கணித்து போராட்ட களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வரை பள்ளிக்கு திரும்பாத தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய ஆசிரியர்களை தங்களுடைய பள்ளிக்கு மீண்டும் திரும்ப தகவல் தெரிவித்ததாகவும், எனவே அவர்கள் வரக்கூடிய நிலையில் இருந்தால் தொலைபேசி மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதே நேரத்தில் பள்ளிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் இருக்க கூடிய ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் தங்களுடைய பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 400 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 602 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என்றும் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பள்ளிக்கு திரும்வில்லை, பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி