ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவு


மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 25) பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் கோகுல் தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 6-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும், மார்ச் 14-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்க உள்ளன.இந்த பொதுத் தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.

இந்த நிலையில், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களால் பொதுத் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியாத நிலை ஏற்படும்.எனவே, இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, தான் கொடுத்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும்பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நவீன்குமார் மூர்த்தி, 10, 11-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வும், மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வும் நடைபெற உள்ளன.

இந்தச் சூழலில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகளுக்கு தேவையான மதிப்பெண்கள் பெற முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதுடன், அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். எனவே, ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார்.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் மற்றும் அரசு வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 39.7 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சட்டப்பூர்வ வழிகள் இருந்தும், போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. அதே ஓய்வூதியத் திட்டம் வேண்டுமெனில் அவர்கள் உச்சநீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகுறித்து பரிசீலிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என வாதிட்டனர்.அப்போது ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கிறது.

மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் ஆசிரியர்களின் குடும்ப நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆசிரியர்களின் போராட்டத்துக்குத் தடை விதித்தனர். மேலும், மாணவர்களின் நலன் கருதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வெள்ளிக்கிழமைக்குள் (ஜன. 25) பணிக்குத் திரும்பவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

1 comment:

  1. Neenga enna kathunalum velaiku vara porathu illa. pesama velaya vittu thookirunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி