ஜாக்டோ-ஜியோ குழுவினரை அழைத்து முதல்வர் பேச வேண்டும்: ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

ஜாக்டோ-ஜியோ குழுவினரை அழைத்து முதல்வர் பேச வேண்டும்: ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்


காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது அடக்கு முறைகளை கையாளுவது நல்ல அல்ல என்று அரசை திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பழனிசாமி கவுரவம் பார்க்காமல் இறங்கி வந்து, அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, மிரட்டுவது போன்றவை போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் கேடுதரும் வழிகள் என்று கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல காலமாக தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், இந்த அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது. நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்காமல், விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதுடன், எச்சரிக்கை விடுவதில் மட்டும் தலைமைச் செயலர் கவனம் செலுத்துவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை விடுவிப்பதுடன், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அரசை எச்சரித்துள்ளார்.

அராஜக போக்கை கையாண்டால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ போராட்ட குழுவினரை உடனடியாக விடுவிக்குமாறு இந்திய கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் வலியுறுத்தியுள்ளார். தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் அலட்சியம் காட்டாமல் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி