Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு : குழந்தைகளை வதைக்காதீர்!!!


நடிகர் சந்திரபாபு ‘புதையல்’ என்ற திரைப்படத்தில் பாடி நடித்த பாடல், ‘உனக்காக எல்லாம் உனக்காக’. அப்பாடலில், துள்ளிவரும் காவிரியாற்றில் குளிப்பதற்கு இணையாக ஒப்பிடப்பட்ட விஷயம் பள்ளியிலே இன்னுமொரு முறை படிப்பது. பள்ளியில் படிப்பதே அவ்வளவு கஷ்டம் என்றால், தேர்வு எழுதுவது என்பது? பள்ளிக் கல்வி முறை தொடங்கிய காலந்தொட்டே தேர்வு பயத்திலிருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை.

இந்தியாவில் நியமிக்கப்பட்ட கல்விக் குழுக்களுக்கும் குறைவில்லை. அதுபோலவே அக்குழுக்களின் ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் குறைவில்லை. பலரது கருத்துகளுக்கு இடம்கொடுத்து உருவாக்கப்பட்ட அருமையான ஆவணம் 2005-ல் வெளிவந்த ‘தேசியக் கலைத் திட்டம்’. அருமையான இந்த ஆவணத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களைச் சற்றே கவனிப்போம்.

தம்மைச் சுற்றியுள்ள மற்றும் வகுப்பறைக்கு வெளியே உள்ள அறிவோடு இணைத்தல், கற்றலை மனன முறையிலிருந்து மாற்றுதல், பாடப்புத்தகம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உகந்ததாகக் கலைத் திட்டத்தை வலுப்படுத்துதல், தேர்வுகளை நெகிழ்வானதாக நடத்துதல், நாட்டின் ஜனநாயகப் பன்முகத் தன்மைக்குள் புறந்தள்ளாமல் தனித்துவத்தை வளர்த்தல் என்பது போன்ற தேசியக் கலைத் திட்டத்தின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டே கல்வி உரிமைச் சட்டம், 2009-ல் கொண்டுவரப்பட்டது.

பள்ளிக்கு வரும் முதல் தலைமுறை

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக விவாதித்துக் கொண்டுவரப்பட்ட தேசியக் கலைத் திட்டத்தில் குழந்தைகளின் தேர்வுபற்றிய பயத்தை நீக்கும் பொருட்டு 6 முதல் 14 வயது வரை கட்டாயத் தேர்ச்சி என்ற நெறிமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இப்படி கட்டாயத் தேர்ச்சி என்ற நடைமுறையில், ஆசிரியர்கள் அந்தந்த வகுப்புக்குரிய திறன்களைச் சரியாக அடையச் செய்வதில்லை; குழந்தைகள் விரும்பத்தக்க அடைவுத் திறன் இல்லாமல் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்கின்றனர், எனவே, கல்வித் தரம் பாதிக்கிறது என்ற அடிப்படையில், தற்போது இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக இத்தேர்வுகளை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.

இதில் ஆசிரியர்கள் - மாணவர்கள் இரண்டு தரப்பு குறித்தும் யோசிக்க வேண்டும். நடுத்தர அல்லது மாத வருமானம் உறுதிப்படுத்தப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான சட்டமும் இல்லாமல், கற்றல் அடைவுகளை அடைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளியையே நம்பிவரும் ஏழை எளிய மக்களில் பலரும் முதல் தலைமுறையாகக் கல்வி பெற வருவோரே. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கும் சரி, அவர்களது பெற்றோர்களுக்கும் சரி, பள்ளிக் கல்வி முறையே புதிதாக அறிமுகமாகும் ஒன்று. பல பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதே பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நோக்கத்தில்தான். இவ்வாறான நடைமுறை உண்மைகளையும் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்கான பொதுத் தேர்வுகளை யோசிக்க வேண்டும்.

ஒருபக்கம் மாணவர் நிலை இது என்றால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபமானது. வீட்டில், சாம்பார் தயார் செய்யச் சொல்லிவிட்டுக் காத்திருந்தால் சாம்பார் கிடைக்கும். அதேநேரம், சாம்பார் தயாரிப்போரையே ஒவ்வொரு செயலும் செய்து முடித்துவிட்டு, ஒரு பதிவேட்டில் பதியச் சொன்னால் எப்படி இருக்கும்? அதாவது அடுப்பு பற்றவைத்தேன், தண்ணீர் ஊற்றினேன், காய்கறிகளை அரிந்தேன் என்று எழுதச் சொன்னால். இப்படியாகத்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பல தேவையற்ற பதிவேடுகளைப் பராமரித்துக்கொண்டிருக்கின்றனர். ஆசிரியர்களை நம்பாமல் அவர்களைக் கண்காணிக்க பின்பற்றப்பட்ட பிரிட்டிஷ் கால நடைமுறைகள் பலவும் இன்றும் தொடர்கின்றன. இதனிடையே, வாக்காளர் சேர்க்கை - நீக்கம், சுகாதாரத் துறைப் பணிகள் என கல்விசாராப் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியர்கள் கற்றல் - கற்பித்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் சூழல் உண்டானால் மட்டுமே அவர்கள் முழு மனதோடு கல்விப் பணியில் ஈடுபடும் சூழல் உருவாகும்.

முழுத் தேர்ச்சி வீதம் இன்னும் சாத்தியமாகவில்லை

பத்தாம் வகுப்பு கல்விச் சான்றிதழைக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும். இடைநிலைப் பள்ளியை விட்டு மேனிலைக் கல்விக்குச் செல்லும் சான்றிதழ் அது. இச்சான்றில் எங்கும் ‘தேர்ச்சி’ என்ற சொல்லாடல் வராமை தெரியாமல் விட்டதல்ல. அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடையட்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்நிலையை உருவாக்கவே பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் கவனம் குவிக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி சதவீதம் உயர்த்த முயற்சிக்கப்படுகிறது. இதிலும் பல விமர்சனங்கள் உண்டு என்றாலும், ஒருவகையில் இவ்வயதை நெருங்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தற்போது அதுகுறித்த ஒரு புரிதல் மேம்பட்டுள்ளது.

தற்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்துவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று பலரும் விவாதிப்பது காதில் கேட்கிறது. சமூக, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ளோரின் முதலும் கடைசியுமான புகலிடமாக அரசுப் பள்ளிகளே உள்ளன. இந்நிலையில், கல்விக் குழுக்கள், அறிக்கைகளின் பரிந்துரைகள் பற்றிய அறிமுகங்களெல்லாம் இன்னும்கூட பெற்றோர்களுக்கு முழுமையாகச் சென்றுசேரவில்லை. எனவே, பெற்றோர்களுக்கும் சேர்த்து, ஆசிரியர்களே அந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய தயாரிப்புக்கு ஏதுவான சூழலை அரசு முதலில் உருவாக்க வேண்டும். ஆசிரியர்களும் தொழில்சார் அறம் நிறைந்தோராய்ப் பரிணமிக்க வேண்டும். இந்தத் தயாரிப்புக்கான கால அவகாசத்தை அளிக்காமல் தேர்வு என்னும் பெயரில் குழந்தைகளுக்குக் கல்வி குறித்த அச்சம் கூட்டும் செயலைச் செய்வது சரியாக இருக்காது.

இன்னும் குழந்தைகளைப் பள்ளிக்கு வரச்செய்வதே சவாலாக இருக்கும் சூழலில், ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வைத் திணிக்கக் கூடாது. பள்ளிக் கல்வியில் தோல்வி என்று பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் குத்தும் முத்திரையை முன்கூட்டியே கையிலெடுக்க வேண்டாமே.

- என்.மாதவன்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,

தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

8 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. மாணவர்களுக்கு சரியாக படம் நடந்த வழி செய்யும்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. அரசு பள்ளிகளை ஒழிக்க கொண்டுவரும் நடவடிக்கை

  ReplyDelete
 5. அரசு பள்ளிகளை ஒழிக்க கொண்டுவரும் நடவடிக்கை

  ReplyDelete
 6. அரசு பள்ளிகளை ஒழிக்க கொண்டுவரும் நடவடிக்கை

  ReplyDelete
 7. அனைவருக்கும் இலவச கல்வி, அரசு கொடுக்க வேண்டும், தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம், மாலை 5 மணிக்கு பிறகு கொடுக்கும் தேவையற்ற பயிற்சியை தடை செய்வது, coaching tuition செண்டர்களை தடை செய்வது, நீட் jee போன்ற தேர்வுகளுக்கு ஏற்ற கல்வி முறை மாற்றம், சிறப்பு பயிற்சி எடுத்து 10 12 பாஸ் செய்யும் மாணவர்களால் நாட்டுக்கு என்ன பயன், வெளி உலகம் தெரியாத மாணவர்களை உருவாக்குகிறோம், அடிமை வேலை செய்ய மாணவர்களை தயார் படுத்துகிறோம், மாணவர்களுக்கு தேசப்பற்று வரவில்லை, இராணுவத்தில் சேர மனமில்லை, ஆராய்ச்சி செய்ய மனமில்லை, டாக்டர் என்ஜினீயர் ஆக மட்டுமே விருப்பம், என்ஜினீயர் படித்தவன் அந்த வேலைக்கு செல்ல விருப்பம் மற்றும் தகுதி ரெண்டுமே இல்லை,
  எங்கு செல்கிறது நமது கல்வி முறை...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives