பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2019

பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா



புதுக்கோட்டை,மார்ச்.29: பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நிறைவேற்றியதால் அப்பள்ளி ஆசிரியர்களும் ,குழந்தைகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறையுடையோர்களுக்கான அரசுப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 43 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா சென்றுள்ளார்.அப்பொழுது அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளார் .அப்பொழுது அக்குழந்தைகள் தாங்கள் கல்வி கற்க ஏதுவாக கணினி வாங்கி கொடுங்கள் அம்மா என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.உடனே அவர்களது கோரிக்கையை ஏற்று இன்று அக்குழந்தைகளுக்கு தன் சொந்த பணத்தில் கணினி வாங்கி கொடுத்ததோடு  மட்டுமல்லாமல் அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார்.பின்னர் சிறிது நேரம் அவர் கணினி வழிக் கல்வி கற்கும் முறை குறித்து  ஆசிரியர்களிடமும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது: நாம் அனைவரும்  நமக்கு பார்வை இருப்பதால் இந்த உலகத்தை பார்த்து வருகிறோம்.ஆனால் பார்வை இல்லாத குழந்தைகள் பார்வை இல்லாமலேயே இந்த உலகத்தை பார்த்து வருகிறார்கள் .ஒரு முறை இங்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துரையாடும் போது அக்குழந்தைகள் என்னிடம் கணினி வேண்டும் என கேட்டனர்.அவர்களது ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று கணினி வாங்கி வந்து கொடுத்துள்ளேன்...தற்பொழுது எனக்கு அவர்கள் ஆசையை நிறைவேற்றியதை நினைக்கும் பொழுது என் மனம் மகிழ்வாக உள்ளது என்றார்.

பள்ளியின் ஆசிரியர் சரவண மணிகண்டன் கூறியதாவது: பார்வை உள்ளவர்கள் பார்வை அற்றவர்களோடு தொடர்பு கொள்ள உதவும் மிகப்பெரிய சாதனம் கணினி.எம் பள்ளியில் பார்வையற்ற குழந்தைகளுக்கு இடைநிலைக் கல்வி திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது்.எனவே இப்பயிற்சிக்கு தேவைப்படும் கணினி ஒன்றை எம் குழந்தைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களிடம் கேட்டிருந்தார்கள்.அவர்களும் மனமுவந்து வந்து எங்களுக்கு வாங்கி தந்து மாணவர்களுடைய நலனில் பெரிதும் அக்கறை கொண்ட நிகழ்வை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றார்.

பார்வையற்ற 7 ஆம் வகுப்பு  மாணவன்  ஹரிஹரன் கூறியதாவது: ஒரு முறை எங்கள் பள்ளிக்கு சி.இ.ஓ அம்மா வந்தாங்க.நாங்கள் ஏற்கனவே பழுதான கம்யூட்டரை சரிபார்த்து தான் கணினி கற்று வந்தோம்.அதனால் சி.இ.ஓ  அம்மாவிடம் கணினி கேட்டோம்.அவர்களும் எங்களுக்கு இப்போ புது கம்யூட்டர் வாங்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இனிப்புகள் வழங்கி உங்களோடு பேசியதை நினைக்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.அவர்களுக்கு பார்வையற்ற குழந்தைகள் சார்பில் நன்றி என்றான்.


நிகழ்வின் போது மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,தலைமை ஆசிரியை விசித்ரா,ஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி