புதிய பாடத்திட்ட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு: 11-ம் வகுப்பில் கடினமான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு: 11-ம் வகுப்பில் கடினமான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்


10, 12-ம் வகுப்பு போன்ற முக்கிய வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டப் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

11-ம் வகுப்பில் கூடுதலான மற்றும் கடினமான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 14 ஆண்டுகளாகவும், 1 முதல்10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 10 ஆண்டுகளாகவும்சமச்சீர் பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்தன. இதை மாற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலதரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.இதையேற்று ஒன்று முதல் 12-ம்வகுப்பு வரை பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை 2017 மே 22-ம் தேதி வெளியானது. தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலில் பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமானது.மீதமுள்ள வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளன.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த சூழலில் 10, 12-ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் புதிய பாடத்திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org இணையதளத்தில் இப்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக 10, 12 போன்ற முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப்புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதர வகுப்புகளுக்கான பாடப்புத்தங்கள் படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் சிறந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் 2, 7,10, 12-ம் வகுப்புகளுக்கு 2019-20-ம் ஆண்டிலும், 3, 4, 5, 8-ம்வகுப்புகளுக்கு 2020-21-ம் ஆண்டிலும்புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவானது.ஆனால், திட்டமிட்டதைவிட ஓராண்டு முன்கூட்டியே பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டதால் எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த 8 வகுப்புகளுக்கு 230-க்கும்அதிகமான பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 12-ம் வகுப்பில் தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு மாணவர்கள் சிந்தனை திறனை மேம்படுத்தும் விதமாக பாடப்பகுதிகள் இருக்கும். மேலும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக முன்கூட்டியே புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் 9-ம் வகுப்புக்குமுப்பருவ கல்வி முறை மாற்றப்பட்டுள்ளதால் புத்தகங்கள் ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளன. இதுதவிர கடந்த ஆண்டு 11-ம் வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டம் அதிகமாகவும், கடினமாகவும் இருப்பதாக பரவலாக கருத்துகள் வந்தன. அதைஏற்று கலை, தொழில் பிரிவுகளில் சில கூடுதல் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.11-ம் வகுப்பு தமிழில் இருந்த9 பாடங்கள் 8-ஆக குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒன்றாம் வகுப்பில் முதல் 2 தொகுதிகள் மற்றும் 6-ம் வகுப்பில் 2-வது தொகுதி புத்தகங்களின் சில பகுதிகளில் இருந்த பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.3 கோடி புத்தகங்கள் பாடநுால் கழகம் மூலம் அச்சிடும் பணிகள் முடிந்துவிட்டன. அவற்றை இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு பாடநூல்கள் பிரித்து அனுப்பப்படும். கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளிகள் திறக்கப்படும்போது எல்லா மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி