உதயகீர்த்திகாவின் விண்வெளி ஆய்வு பயிற்சிக்காக விஜய் சேதுபதி 8 லட்சம் ரூபாய் நிதியுதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2019

உதயகீர்த்திகாவின் விண்வெளி ஆய்வு பயிற்சிக்காக விஜய் சேதுபதி 8 லட்சம் ரூபாய் நிதியுதவி


திரைப்படக் கலைஞர் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள், உதயகீர்த்திகாவின் விண்வெளி ஆய்வு பயிற்சிக்காக எட்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்.

இப்பயிற்சிக்கு, நிச்சயமாக, 10 இலட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிற நிலையில், பெரும் தவிப்பில் பணத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த எங்களுக்கு,  இந்தப் பேருதவி, நிம்மதியைத் தந்துள்ளது. எங்களுக்குச் சொந்தமாய் வீடுகூடக் கிடையாது.

10 முதல் 12 இலட்சம் ரூபாய் வரையில் தேவைப்படும் நிலையில் என்ன செய்ய முடியும்?  தனது இலக்கை அடைய போராடும்பொருளாதார அளவில் எந்த உதவியும் செய்ய முடியாத ஒரு ஏழைத் தகப்பனாக, பணத் தேவை பற்றிய சிந்தனையே தினம் தினம் என்னை இரவெல்லாம் உறங்க விடவில்லை. தோல்வியை எனது இதயம் ஏற்றுக் கொள்ளவில்லை. பயிற்சிக்குச் செல்வதற்காக மிகக் குறைந்த நாட்களே உள்ள நிலையிலும், "உதயகீர்த்திகாவுக்கு குவியும் உதவிகள்" என சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருந்த வதந்திகளால், கிடைக்கவிருந்த சிறு சிறு உதவிகளையும் தடுப்பதுபோலச் ஆகிவிட்ட இக்கெட்டிலும் சோர்ந்து போகாமல் எனது அசையும் சொத்தும், அசையாச் சொத்துமாகிய "தன்னம்பிக்கை"  ஒன்றை மட்டுமே மூலதனமாக்கி இடைவிடாது இறங்கினேன். முற்போக்கு சிந்தனையாளரும், சிறந்த எழுத்தாளரும், பிரபல திரைப்பட இயக்குநருமான எனதுஅருமை நண்பர் ஒருவர் எங்களது போராட்டம் பற்றி, திரு. விஜய் சேதுபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல,  இரண்டு தினங்களுக்கு முன் வெளி மாநிலத்தில் படப்பிடிப்பிலிந்தவாறு "சார், நான் விஜய் சேதுபதி பேசுறேன். ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம். ஒங்க பொண்ண நல்லபடியாக அந்தப் பயிற்சிக்கு அனுப்பிறலாம். எங்க ஆபீஸ்லருந்து ஒங்களுக்கு கூப்டுவாங்க. போயி உதவியை வாங்கிக்கங்க.." என்றார்.

பேரானந்தத்தில் எனது கண்கள் கலங்கி விட்டன. உதயகீர்த்திகாவிடமும் பேசி தைரியம் தந்தார்.சென்னைக்குப் போய் உதவியைப் பெற்றுக் கொண்டு, இன்று இரவு பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும்போது கூட, "சார்.. பத்திரமா ஊருக்குப் போய்ட்டு வாங்க. ஏதாச்சும் ஒண்ணுன்னாஒடனே போன் பண்ணுங்க." என அவரது அலுவலக ஊழியர்கள் இருவர் அக்கறையுடன் சொன்ன வண்ணமிருந்தனர்."திண்ணை" யின் அடையாள வார்த்தையான 'மனமே அன்பு செய்" என்பதே இப்போது எமது நெஞ்செல்லாம் பூத்துக் குலுங்குகிறது.

பேரன்புடன்..
அல்லிநகரம் தாமோதரன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி