அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவு இடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2019

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவு இடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு


அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆரம்பப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் சேர பிளஸ் 2 முடித்திருந்தால் போதும் என்பதால் ஆரம்ப காலத்தில் இந்த படிப்பில் சேர கடுமையான போட்டி நிலவியது. ஆனால், தற்போது இடைநிலை ஆசிரியர் பணிக்கு போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாததால் இப்படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தில் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 2,650 இடங்கள் இருந்தன. இதேபோல், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்கள், மத்திய அரசு நிதியுதவியில் இயங்கும் 6 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 300 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3,430 இடங்களுக்கு 2017-ல் 1,226 பேர் மட்டும் சேர்ந்தனர். இதையடுத்து 2018 முதல் 20 மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அரசு நிறுத்திவிட்டது. இடங்களின் எண் ணிக்கையும் 1,050-ஆக குறைக்கப் பட்டது.

இதனால் அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில் இருந்த இடங்கள் 3,430-ல் இருந்து 1,830-ஆக சரிந்துவிட்டது. இந்த இடங்களில் கடந்த ஆண்டு 821 மாணவர்களே சேர்ந்தனர். 2019-20-ம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்ட யப் படிப்பு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவு ஜூன் 10-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்த முள்ள 1,830 இடங்களுக்கு வெறும் 392 மாணவர்களே விண் ணப்பித்துள்ளனர். போதுமான வேலைவாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் கூறிய தாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவதால் ஆசிரியர்களின் தேவை குறைந்து வருகிறது. இதுதவிர பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய தகுதித்தேர் வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின் அரசு நடத் தும் போட்டித்தேர்வில் வெற்றி அடைந்தால் மட்டுமே பணிவாய்ப்பு கிடைக்கும். இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து சுருக்கப்படுகின்றன. இதனால் இந்த படிப்புகளில் சேர இளைஞர் களிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. தொடர்ந்து மாணவர் சேர்க்கை சரிவதால் ஆசிரியர் பயிற்சி படிப் புக்கான இடங்களின் எண்ணிக் கையை குறைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒருபோதும் மூடப் படாது. ஆசிரியர்களுக்கு பணி யிடை பயிற்சி உட்பட இதர பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்படும். மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்தால் ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் மீண்டும் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மூடப்படும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில் 70 சதவீத பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவாகவே உள்ளன.

இதில் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்துக்குகீழ் குறைந்த பயிற்சி நிறுவனங்களை மூடிவிட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 380 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டும் 21 தனியார் நிறுவனங்கள் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி