கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுதலை; 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுதலை; 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு.


கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 21 பேரில் 11 பேரை விடுதலை செய்துள்ளது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். 2004 ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தீவிபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி முகமது அலி கூறியுள்ளார்.இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, 2006 ஆம் ஆண்டு தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 232 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் முடிந்தன.

விடுதலையான 11 பேர் விவரம்:

தீவிபத்து வழக்கில் தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி விடுவிக்கப்பட்டுள்ளார். அப்போதைய தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன், பாலகிருஷ்ணன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தியும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

10 பேர் குற்றவாளிகள்:

பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியைசாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலக உதவியாளர் சிவப்பிரகாரம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரமுக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்

வழக்கு விவரம்:

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 469 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டு, 60 முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2006ஆம் ஆண்டு தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு துரிதமாக நடைபெறவில்லை என்று குழந்தைகளை இழந்த பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீ விபத்து வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது.இதனிடையே இந்த வழக்கிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதுவரை 232 பேரிடம் விசாரிக்கப்பட்டு, கடந்த 17ம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வுநீதிபதி முகமது அலி தெரிவித்திருந்தார்.

2 comments:

  1. 4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளிலே இன்னும் கட்டிட வசதி , குடிநீர் வசதி பற்றாக்குறையாக தான் உள்ளது. 60 - 70 மாணவர்களுக்கு ஒரே கட்டடத்தில் தான் வகுப்புகள் நடைபெறுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி