பள்ளி வளாகங்களில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2025

பள்ளி வளாகங்களில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நிகழாதவாறு, அது தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தொகுக்கவும், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சிகள் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘மாணவர் மனசு ’பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.


மேலும், பாதுகாப்புக் குழுவுக்கு பொறுப்பான பெண் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை நியமித்து மாணவர் பாதுகாப்பு சார்ந்து விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில், மேலும் அதிகளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இந்த பதாகைகளில் குழந்தைகள் உதவி மைய எண் 1098, பள்ளிக் கல்வித் துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் எழுதி வைக்கப்பட வேண்டும்.


பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.


புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக்கூடாது என்பது முக்கியம். எனவே அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது. சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்தப்பணிகளை ஏதேனும் ஓர் பெண் ஆசிரியரிடம் ஒப்படைக்காமல் சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால், மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றும் உங்களுடைய ஆட்சியில் இன்னும் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் இல்லை. எல்லா வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் சொன்னதைச் செய்வோம் என்று கூறும் இவர்கள் எதையும் செய்ய வில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி