கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2017

கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்


இன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும்,
மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை
செய்பவள் தேவியே.
முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே!

அம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியிலும் வரும் நவராத்திரியில், அவளை வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது.



அலங்காரம்

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக, சித்திதாத்ரியாக வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவற்றை தரித்த கோலத்தில், அம்பிகையை பூஜிக்க வேண்டும். சிவசக்தி வடிவமாகிய காமேஸ்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றம். அன்ன வாகனத்தில் இருப்பவள்; வாக்கிற்கு அதிபதியானவள்; ஞான சொரூபமானவள். கல்விச்செல்வம் பெற, அன்னையின் அருள் அவசியம்.

கடைசி நாளான இன்று, எட்டு சித்திகளையும் உள்ளடக்கி, சித்திதாத்ரி விளங்குகிறாள் எனக் கூறப்படுகிறது. தாமரை மீது வசிக்கும் இவளை, சாதுக்கள், யோகிகள், சித்தர்கள் வணங்குகின்றனர்.



அலங்கார காரணம்

சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சக்தியையும் தருபவள் என்று பொருள். இவளை வழிபாடு செய்த சிவன், அனைத்து சித்திகளையும் பெற்று, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என, தேவி புராணம் கூறுகிறது
அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால், வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். இவற்றைப் பயிற்றுவிக்கும் குருவுக்கும் மரியாதை செய்வர். ஆகவே, ஆயுத பூஜை
தினம் என்று, இதற்குப் பெயர் வந்தது.

அதனால் தான் தாமரை மலரில் அமர்ந்து, இடது இரண்டு கரங்களில், கதை, சக்கரமும்,
வலது இரண்டு கரங்களில், தாமரை, சங்கு ஏந்தியவளாகவும் காட்சி தருகிறாள்.



வழிபாடு

படிக்கும் புத்தகங்களை அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்துப் பூஜிப்பது வழக்கம். இன்று வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும், சந்தனம், குங்குமம் இடுவது வழக்கம்.

கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, அவசியம், சரஸ்வதி பூஜை செய்ய வேண்டும். வண்டி வாகனங்களைத் துடைத்து பொட்டு வைத்து பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்துவது வழக்கமாக உள்ளது.



கோலம்

பச்சைக் கற்பூரம் கொண்டு, ஆயுத கோலம் போடுவது சிறப்பு.



மலர்கள்

மல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை, அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.

பாசிப் பயறு சுண்டல், கல்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு, உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறி வகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம்.

இந்தளவிற்கு விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்த்தித்து, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைப் பூஜிக்கலாம்.பூஜை முடிவில், யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தருவது நல்லது. பக்தி ஒன்றே,அம்பிகையிடம் நாம் வேண்டுவது; ஆடம்பர அலங்கார செலவினங்களை அல்ல.

மகாகவி பாரதியார், நவராத்திரி பாடல்கள் மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார்.
அதில் நமக்கான ஒரு செய்தியாக...'இந்த நவராத்திரி பூஜைகளின் நோக்கம், உலக நன்மை மட்டுமே. நவராத்திரி காலத்தில் யோக மாயை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு துஷ்டரை அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைக்கிறது.

'அந்த சக்தியால் தான் உலகம் வாழ்கிறது. நாம் வளமான இன்பமான வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் அந்த பராசக்தியை வேண்டுகிறோம்' என்று அருமையாக பாடி விட்டுச் சென்றுள்ளார்.

'நவராத்திரி நாயகியரை வணங்கிப் போற்றி, நாளும் நாளும் உயர்வோர், நன்மையைப்
பெறுவரே' என்ற ஞானசம்பந்தர் சொற்படி, நவராத்திரி விரதங்கள், பூஜைகள் கடைபிடித்து,
நல்பலன்களை பெறுவோம்.சண்டி தேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை
முடித்த பின், பூசணிக்காயினுள் குங்குமம் வைத்து, வாசலில் உடைக்க வேண்டும்.
அதை அப்படியே, நடு சாலையில் விட்டு விடாமல், சிறிது நேரத்திற்குப் பின், சுத்தம் செய்து விடுவது நல்லது.

வரம் தரும் நவராத்திரி

சரஸ்வதி பூஜை வழிபாடு

வீட்டிலுள்ள நிலை, கதவு,ஜன்னல் எல்லாவற்றையும் துாய்மை செய்து அவற்றிற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜையிட்டு பட்டுத்துணி விரித்து, புத்தகம், பேனா, பணப்பெட்டி முதலியவற்றை வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன் மீது வீட்டில் உபயோகிக்கும் அரிவாள்மனை, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கழுவி வைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக் கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே கழுவி வைத்து அலங்கரிக்கலாம்.

மாடு, கன்றுகளை தொழுவத்தில் குளிப்பாட்டி சந்தனம், குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களை அவ்வாறே துாய்மை செய்து அலங்கரிக்கவும்.



பூஜை பொருட்கள்

குங்குமம், சந்தனம், விபூதி, உதிரிப்பூக்கள், பூச்சரங்கள், மாலைகள், பொரிகடலை, சர்க்கரை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, சூடம், பத்தி, சாம்பிராணி, குத்துவிளக்குகள், கைமணி தீர்த்த பாத்திரம் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும்.
விளக்கேற்றிய பின் மணியடித்து பூஜையைத் துவக்கவும்.

மஞ்சள் பொடி அல்லது பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல்லால்,
'ஓம் கணபதயே நமஹ' என்று அர்ச்சனை செய்து துாபம் காட்டி பழம், வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும். குழந்தைகளுக்கு படிப்பு, தொழில், வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்கிறோம் என விநாயகரிடம் வழிபட வேண்டும்.

புத்தகங்களை பூக்களால், 'ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவ்யை நமஹ' என்று அர்ச்சிக்கவும். பேனா, பென்சில்களில், 'ஓம் லேகினீ சக்தயே நமஹ' என்றும், அரிவாள், அரிவாள்மனை, கத்திஇவற்றை,
'ஓம் கட்கினீ சக்தயே நமஹ' என்றும்,மண்வெட்டியில்,'ஓம் குந்தாளி சக்தயே நமஹ' என்றும்,
ஏர்கலப்பையில், 'ஓம் ஹலாயுத சக்தயே நமஹ' என்றும், பசுமாட்டை, 'ஓம் கோமாதா தேவ்யை நமஹ' என்றும், காளையை, 'ஓம் ரிஷபதேவாய நமஹ' என்றும், இரு சச்கர, நான்கு சக்கர மற்றும் மாட்டுவண்டிகளை,'ஓம் த்வரிதா சக்தயே நமஹ' ஓம் சகட தேவதாயை நமஹ என்றும் வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எங்கும்,'ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ' என்றும்,
இயந்திரங்கள், மோட்டார்கள் எல்லாவற்றிலும்,'ஓம் ஸ்ரீதுர்க்காதேவ்யை நமஹ' என்றும்
அர்ச்சனை செய்து மணியடித்தவாறு சாம்பிராணி துாபம் எல்லாவற்றிற்கும் காட்டவும்.

ஒரு பாத்திரத்தில் நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு, பூஜை நடத்திய இடங்களுக்கு மணியடித்தபடியே சென்று, நீரால் மூன்று முறை சுற்றி நிவேதனம் செய்து வழிபடவும்.
தேங்காய் உடைத்த பின், சூடம் ஏற்றி மணியடித்தபடி புத்தகம் முதல் எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும். பிறகு, குடும்பத்தினர் கையில் உதிரிப்பூக்கள் கொடுத்து சரஸ்வதி பாதத்தில் துாவச் சொல்லி வழிபடவும். விபூதி, குங்குமம், பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லாருக்கும் வழங்கிய பின் ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

மயிலாடுதுறை



பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து
உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே!

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி