புத்தகம் தூக்க வேண்டிய கைகளில் ஆயுதங்களை மாணவர்கள் தூக்கிச் செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது - முதல்வர் கே.பழனிசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

புத்தகம் தூக்க வேண்டிய கைகளில் ஆயுதங்களை மாணவர்கள் தூக்கிச் செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது - முதல்வர் கே.பழனிசாமி

புத்தகம் தூக்க வேண்டிய கைகளில் ஆயுதங்களை மாணவர்கள் தூக்கிச் செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் கே.பழனிசாமி கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-ஆம் ஆண்டு நிறைவு (நூற்றாண்டு கடந்த வைர விழா ஆண்டு நிறைவு விழா) விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் பேராசிரியர்களுக்கும் விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-"நமது நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில்உள்ளது. நம்மை சுற்றிலும் பல சமூகப் பிரச்னைகள்இருக்கின்றன. அவற்றை உணர்வுப்பூர்வமாக அணுகாமல் அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும். மாணவர்கள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கவேண்டும். ஆனால், சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது.

வன்முறையைத் தவிர்க்க வேண்டும்:

 வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும். சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். பொது அறிவையும், சமயோசித அறிவையும் வளர்த்துக் கொண்டால்தான் வாழ்க்கையில் உண்மையிலேயே வெற்றிபெற முடியும். இதற்கு மாணவர்களிடையே சுயசிந்தனையைத் தூண்டும் செயலை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.அரிய பருவம்: கல்லூரிப் பருவம் என்பது கிடைத்தற்கரிய ஒரு பருவம். அந்தக் கல்லூரி வாழ்க்கையில்தான் ஒரு மாற்றம் ஏற்படும். பல்வேறு பிரிவினர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து படிக்கும்போது பலருடைய நட்பு கிடைக்கிறது. அவர்களுடைய அறிவு, பண்பு அனைத்தும் கிடைக்கின்றன. இத்தனையும் கிடைப்பதற்கு கல்லூரிதான் மையமாக விளங்குகிறது.எனவே, மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய வாழ்க்கை சிறக்கும், செழிக்கும். மாணவர்களின் கல்வி மேம்பட தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், எதிர்கால தலைமுறையினரும் பேசக் கூடிய வகையில் நீடித்த சீர்திருத்தங்கள்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படும்'' என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணாக, உயர் கல்வி சேர்க்கை விகிதத்தில் இந்திய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.உயர் கல்வித் துறையின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமாயின், உலக நாடுகளைக் கடந்து அறிவுலக வளர்ச்சியை நமது மாணவர்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகம் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.உயர் கல்வியில் உலக நாடுகளுக்கிடையேயான கூட்டு முயற்சியை தமிழக அரசு எப்போதும் ஊக்குவித்து வருகிறது. நமது கல்லூரி மாணவர்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் கணிசமான நிதியைஅரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.இதன் மூலம் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு சென்று பயனடைந்து வருகின்றனர்.பல வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சி நீடித்து நிலைப் பெற, பல்கலைக்கழகங்கள் மாணவர்களை செயல் திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும் இந்த சீரிய பணிக்காக தமிழக அரசு எப்போதும் உதவிகளைச் செய்துகொடுக்கும் என்றார் அவர்.விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,தலைமைச் செயலர் கிரிஜை வைத்தியநாதன், உயர் கல்வித் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மா, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ப.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.ரூ. 5 கோடியில் ஆய்வு மையம்சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்தவைர விழா ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி பல்கலைக்கழகத்துக்கு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரூ. 5 கோடியில் ஆய்வு மையம்:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிடஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டன. அந்த வகையில், இந்தப் பல்கலைக் கழகத்தின் 160-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ரூ. 5 கோடியில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் ஒன்று நிறுவப்படும். இந்தமையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடிதிட்டங்களான சத்துணவுத் திட்டம், கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கட்டடங்களைப் புதுப்பிக்க ரூ.5 கோடி:

 மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகக் கட்டடம், மணிக்கூண்டு கட்டடம், ஓரியண்டல் கல்வி நிறுவன கட்டடம் மற்றும் நூற்றாண்டு கட்டடம் ஆகிய புராதன கட்டடங்களின் தொன்மையைப் பாதுகாத்து பழுது பார்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றார் முதல்வர் பழனிசாமி

2 comments:

  1. சட்டங்களும் தண்டனைகளும் கடுமையானால் அனைத்தும் சரியாகும், மாணவர்களை கெஞ்சிகொண்டும் கொஞ்சிகொண்டும் இருந்தால் சரி வராது,

    ReplyDelete
  2. பிரம்பு சொல்கிறது.....
    எனது தேவையை எப்பொழுது ஆசிரியர்கள் குறைத்தார்களோ அன்றிலிருந்து நான் அதிகம் தேவைப்பட்டேன் காவல்துறைக்கு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி