Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

School Morning Prayer Activities - 01.02.2019 ( Kalviseithi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

பழமொழி:

Grasp all, lose all

பேராசை பெரு நட்டம்

பொன்மொழி:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
மக்ரானா.

2) பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
க்ரயோ பைட்ஸ்

நீதிக்கதை :

பயமா, அன்பா?

அடர்ந்த சமோன் காட்டில் ஒரு சிங்கராஜா வாழ்ந்துவந்தது. அதுக்குத் தன்னைப் பற்றிய பெருமை அதிகம். தான் வலிமையானவன் மட்டுமில்லை, மிகவும் நல்லவன், அதனால்தான் தன்னைக் காட்டு விலங்குகள் மதிக்கின்றன என்ற எண்ணமும் அதுக்கு இருந்தது.

இப்படித் தன்னை நினைத்து சிங்கராஜா பெருமிதம் அடைந்துகொண்டிருந்தபோது, நரி வந்தது.

“என்ன ராஜா, ஒரே சிந்தனை?”

“நான் எவ்வளவு நல்லவன் என்று யோசித்துப் பார்த்தேன். என்னாலேயே அதைத் தாங்கிக்க முடியலை.”

என்னாலும் தாங்கிக்க முடியவில்லை என்று நினைத்த நரி, ”எதை வைத்து அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டது.

“நான் செல்லும் இடங்களில் எல்லாம் எல்லோரும் எவ்வளவு மரியாதை தருகிறார்கள் என்பது உனக்கே தெரியுமே! இதுக்கு மேல் வேறு என்ன வேண்டும்?’’

“ராஜா, உங்கள் மேல் உள்ள பயத்த்தினால்தான் மரியாதையே தவிர, அன்பால் யாரும் மரியாதை கொடுக்கவில்லை.”

நரி சொன்ன உடன் சிங்கராஜாவின் முகமே மாறிவிட்டது. கோபத்தில் கர்ஜித்தது. பயத்தில் தலைதெறிக்க ஓடிவிட்டது நரி.


மகிழ்ச்சியாக இருந்த சிங்கராஜாவின் மனம், கல் எறிந்த குளம்போல் கலங்கிவிட்டது. ’உண்மையிலேயே இந்தக் காட்டில் வசிக்கும் விலங்குகள் எல்லாம் என் மீது அன்பால் மரியாதை செலுத்தவில்லையா?’

நரி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். தானே இதை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தது சிங்கராஜா.

அடுத்த நாளே, தான் வசித்த குகையை விட்டு வெளியேறி,  தலைமறைவாக வாழ ஆரம்பித்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு, ஒளிந்திருந்து விலங்குகளைக் கண்காணிக்கத் தொடங்கியது.

சிங்கராஜா இல்லை என்ற செய்தி காடு முழுவதும் பரவிவிட்டதால், விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தன. இதைக் கண்டதும் சிங்கத்தின் மனம் வருந்தியது.

“நான் இல்லை என்ற வருத்தம் ஒருவருக்கும் இருப்பதுபோல் தெரியவில்லையே… நான் மீண்டும் வந்துவிடுவேனோ என்ற பயம் மட்டும் சிலரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது” என்று தனக்குள் நினைத்துக்கொண்ட சிங்கராஜா, மேலும் நடந்தது.

அப்போது ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த இரண்டு மான்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டது.

“எதுக்கு சோகமா இருக்கே?”

“நம்ம சிங்கராஜா காணாமல் போய் ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. எங்க போனார், என்ன ஆனார் என்று தெரியலை” என்றது ஆண் மான்.

அடடா! நம் மீது அன்பு செலுத்த ஒரு ஜீவன் இருக்கிறதே என்று மகிழ்ந்தது சிங்கராஜா.

”அட, இதுக்கா இவ்வளவு சோகம்? நல்ல விஷயம் தானே?”


“என்ன சொல்ற?”

“சிங்கராஜா நமக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? நம்ம இனம் என்றால் அவருக்குக் கொண்டாட்டம். மான்களைத்தான் அதிகமா வேட்டையாடினார். நீயும் நானும் அவரைப் பார்க்கப் போனால் விருந்தா வைப்பார்? நம்மை விருந்தாக்கிக்கொள்வார். இனியாவது நிம்மதியா இருப்போம்” என்றது பெண் மான்.

இதுக்கு மேல் எதுவும் கேட்கும் மனநிலையில் சிங்கராஜா இல்லை. வருத்தத்துடன் நடக்க ஆரம்பித்தது. திடீரென்று  நரியின் அழுகை கேட்டது. சட்டென்று சிங்கம் மரத்துக்குப் பின்னால் ஒளிந்து, கவனிக்க ஆரம்பித்தது.

அங்கு வந்த இன்னொரு நரி காரணம் கேட்டது.

“நம் சிங்கராஜா காணாமல் போயிட்டாரே” என்று தேம்பி அழுதது அந்த நரி.

”ஆஹா! இறுதியில் என் மீது அன்பு வைத்திருக்கும் ஒரு நரியையாவது கண்டுகொண்டேன்” என்று மகிழ்ந்தது சிங்கராஜா.

“அவர் இல்லை என்றால் உனக்கு என்ன நஷ்டம்?”

“என்ன இப்படிச் சொல்லிட்ட? அவரிடம் எனக்கு நெருக்கம் அதிகம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தேன். அதனால் மற்ற விலங்குகளை மிரட்டி, எனக்கு வேண்டிய காரியங்களை எல்லாம் செய்துகொண்டேன். ஒரு நாளும் உணவு தேடி அலைந்ததில்லை. சிங்கராஜாவுக்கு என்று சொல்லி, உணவை வாங்கிச் சாப்பிட்டேன். நானே ஒரு ராஜா மாதிரி இருந்தேன். இப்ப எல்லாமே என்னை விட்டுப் போய்விட்டதே” என்று அழுதது அந்த நரி.

இதைக் கேட்டதும் சிங்கராஜாவின் மனம் இரண்டாவது முறையாக நொறுங்கியது.


பயத்தால் கிடைக்கிற மரியாதை நீர்க்குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும். அன்பால் கிடைக்கிற மரியாதைதான் கல்வெட்டு மாதிரி காலத்துக்கும் அழியாமல்  நிற்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சிங்கராஜா, அன்று முதல் அன்பாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தது.


இன்றைய செய்தி துளிகள் : 

1) மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள்அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம் என செங்கோட்டையன் தகவல்

2) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு

3) இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன்

4) மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

5) இந்தியாவிற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives