ஆசிரியர் தகுதித் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிருநாளில் தொடங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக்கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு:

விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு,தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.அதன் பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 வாரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு:

முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை1.60 லட்சம்பேர் எழுதினர்.முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.இது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

உதவிப் பேராசிரியர் நியமனம்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

தேர்வர்கள் ஏமாற வேண்டாம்:

ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையான முறையில், தகுதியின் அடிப்படையில்மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப்பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி