ஆர்.எம்.எஸ்.ஏ., நிதியில் அதிகாரிகள் தலையீடு : அதிருப்தியில் தலைமையாசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

ஆர்.எம்.எஸ்.ஏ., நிதியில் அதிகாரிகள் தலையீடு : அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்.


தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் வழங்கப்பட்ட மத்திய அரசு நிதியை செலவிடுவதில்,
அதிகாரிகள் தலையிடுவதாகசர்ச்சை எழுந்துள்ளது.இத்திட்டம் மூலம் அரசு பள்ளிகள் வளர்ச்சிக்காக மத்திய அரசு, ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இதில், 25 ஆயிரம் ரூபாய்க்கு, பள்ளி ஆய்வகத்திற்குத் தேவையான அறிவியல் உபகரணங்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கு, நாளிதழ்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்குவது, ரூ.15 ஆயிரம் ரூபாயை, கணினி பராமரிப்பு, தொலைபேசி மற்றும் மின் கட்டணம் உட்பட இதர செலவினங்களுக்கு பயன்படுத்தலாம். இந்தாண்டுக்கான ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதி தற்போது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, தலைமையாசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் ஓர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன்படி, 'ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட விலைப் புள்ளிப்பட்டியலை (கொட்டேஷன்) அனுப்பி வைத்து, அறிவியல் உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான தொகையை, 'டிடி' எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு என்ன வகையான உபகரணங்கள் தேவை என்பது தலைமையாசிரியர்களுக்கு தான் தெரியும். ஆனால், அதிகாரிகள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து மட்டும் உபகரணங்கள் வாங்க வற்புறுத்துகின்றனர்.

அதேபோல், நூலகத்திற்கும், கேள்விப்படாத,மாணவர்களுக்கு பயன்படாத புத்தகங்களை வாங்க உத்தரவிடுகின்றனர். இதனால், ஏதோ ஒருசில தனியார் நிறுவனங்கள் பயனடைகின்றன. இது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். முதல்வர் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும், என்றனர். எஸ்.எஸ்.ஏ., நிதியைமீட்ட 'தினமலர்': கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், இதுபோன்ற சர்ச்சை எழுந்தது. மைசூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு, கற்றல் கற்பித்தல் 'மெட்டீரியல்ஸ்' வாங்க, ரூ.2 ஆயிரம் 'டிடி' எடுத்து அனுப்ப,தலைமையாசிரியர்களுக்கு அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டனர்.

என்ன 'மெட்டீரியல்ஸ்' என தெரியாமலே பல பள்ளிகள், அந்த நிறுவனத்திற்கு "டிடி' அனுப்பின. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் விளைவாக, அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட 'டிடி'க்கள், மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கும் அதே சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி