வால்
நட்சத்திரத்தைத் துரத்திச் செல்லும் விண்கலம்
ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய
விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி
கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வால் நட்சத்திரம் ஒன்றை எட்டிப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச்
சென்று கொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தின்
பெயர் ரோசட்டா
.
ரோசட்டா விண்கலம் அந்த வால்
நட்சத்திரத்தை அடுத்த சில மாதங்களில் எட்டிப் பிடிப்பதுடன் நில்லாமல் அதைச் சுற்றி
வர ஆரம்பிக்கும். இரண்டு மாத காலம்
இப்படிச் சுற்றி வந்து வால் நட்சத்திரத்தை நோட்டம் விடும்.
பிறகு அந்த விண்கலத்திலிருந்து துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள் மோப்பக் கருவி சகிதம் பிலே என்னும் பெயர் கொண்ட இறங்கு
கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் இறங்கி துளை போட்டு வால் நட்சத்திரத்தை ஆராயப்
போகிறது.
விண்வெளி வரலாற்றில் வால் நட்சத்திரம்
ஒன்று இவ்விதம் ஆராயப்படுவது இதுவே முதல் தடவையாகும்..இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. அந்த
வால் நட்சத்திரம் மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதில் 27 கிலோ கிராம் எடை கொண்ட இறங்கு கலம் இறங்கப் போகிறது.
|
ரோசட்டா
விண்கலத்தின் மாடல்
|
நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று
கொண்டிருக்கும் ஒரு லாரியின் திறந்த பின்புறத்தில் வானில் பறந்து கொண்டிருக்கிற
ஹெலிகாப்டரிலிருந்து ஒருவர் குதிப்பது என்பது மிக சிரமமான பணியே. சினிமாப் படமாக
இருந்தால் தந்திரக் காட்சி மூலம் அல்லது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் இதைக்
காட்டி விடுவார்கள்.
ஆனால் ரோசட்டாவிலிருந்து இறங்குகலம் மிகச் சரியாக அந்த வால்
நட்சத்திரத்தில் இறங்கியாக வேண்டும். அது எளிய விஷயமல்ல
ஆகவேதான் உலகின்
விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை மிக ஆவலாக எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் வால் நட்சத்திரத்தைக்
கண்டு மன்னர்களும் சரி, மக்களும் சரி
அஞ்சினார்கள்.. வானில் வால் நட்சத்திரம் தோன்றினால்
மன்னருக்கு ஆபத்து என்று அஞ்சப்பட்டது. அத்துடன் மக்களை
பஞ்சம், நோய் ஆகியவை தாக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால் இன்றோ வால் நட்சத்திரம் தான் மனிதனைக் கண்டு
பயப்படவேண்டும்.
ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை
என்று சொல்வார்கள். அந்த மாதிரியில் வால்
நட்சத்திரம் ஒன்று இரவு வானில் நீண்ட வாலுடன் பிரமிப்பூட்டும் காட்சியாக
விளங்கலாம். ஆனால் பூமி, செவ்வாய்
போன்ற கிரகங்களுடன் ஒப்பிட்டால் வால் நட்சத்திரம் வெறும் சுண்டைக்காய்.
ஒன்று அல்லது இரண்டு பெரிய பாறைகள், கல் மற்றும் மண், உறைந்த
நிலையிலான பலவகை வாயுக்கள், நிறைய பனிக்கட்டி இவற்றையெல்லாம்
மொத்தையாக உருட்டி வைத்தது தான் வால் நட்சத்திரம்
|
ஒரு வால் நட்சத்திரத்தின் படம்..ஆனால் இது ரோசட்டா துரத்திச்
செல்லும் வால் நட்சத்திரம் அல்ல
|
ஒரு வால் நட்சத்திரத்தின் தலையும் அது
தான். வால் என்பது தூசு
அல்லது வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தள்ளப்படும் வாயுக்களே.. ஒரு வால்
நட்சத்திரத்தின் வால் பல லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருக்கலாம்.
சூரிய ஒளி படுவதால் வால் ஒளிருகிறது. பூமியானது
ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வால் நட்சத்திரத்தின் வால் வழியே சென்றுள்ளது.
ஒரு வால் நட்சத்திரத்தின் தலை மிஞ்சிப் போனால் 30 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட்தாக
இருக்கலாம்..ஆதி காலத்தில் ஏதோ விஷயம் புரியாமல் வால்
நட்சத்திரம் என்று பெயர் வைத்து விட்டார்களே தவிர, நட்சத்திரத்துக்கும்
வால் நட்சத்திரத்துக்கும் எந்தவித ஒற்றுமையும் கிடையாது.
ரோசட்டா இப்போது துரத்தும் வால்
நட்சத்திரத்துக்கு வருவோம். அது சுமார் ஐந்து
கிலோ மீட்டர் நீளமும் மூன்று கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.
அந்த வால் நட்சத்திரத்தின் பெயர். 67-பி /
சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ என்பதாகும்.
1969 ஆம் ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த இருவரின்
பெயர் அதற்கு வைக்கப்பட்டது. இவர்களில் ஜெராசிமெங்கோ பெண்
விஞ்ஞானி. இருவருமே ரஷியாவைச் சேர்ந்தவர்கள்.
|
படத்தில்
இடது புறம் சுரியுமோவ்.வலது புறம்
இருப்பவர் ஜெராசிமெங்கோ
|
இந்த வால் நட்சத்திரம் சுமார் ஏழு
ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி விட்டுச் செல்கிறது. ஏதாவது ஒரு வால் நட்சத்திரத்துக்கு ஒரு
விண்கலத்தை அனுப்பி அந்த வால் நட்சத்திரத்தில் பள்ளம் தோண்டி ஆராய்ச்சி நடத்துவது
என்று முடிவு செய்த ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இந்த வால் நட்சத்திரத்தைத்
தேர்ந்தெடுத்தது.
இந்த முடிவைத் தொடர்ந்து ரோசட்டா
விண்கலம் 2004 ஆண்டு மார்ச்
மாதம் உயரே செலுத்தப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் இப்போது
தான் வால் நட்சத்திரத்தைப் பின்புறத்திலிருந்து துரத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் ஆவானேன் ?
இதற்கு
67 பி வால் நட்சத்திரத்தின் நீள் வட்ட சுற்றுப்பாதை ஒரு காரணம்.
எந்த ஒரு வால் நட்சத்திரமாக இருந்தாலும் அது சூரியனை நீள்
வட்டப்பாதையில் சுற்றும். சூரியனை சுற்றி முடித்த பின்னர்
மிகத் தொலைவுக்குச் சென்று விடும். 67 பி வால் நட்சத்திரம்
சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது சுமார் 85 கோடி
கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். பிறகு அங்கிருந்து தொடங்கி
சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும்.
அந்தக் கட்டத்தில் அதாவது சூரியனை
நோக்கி அந்த வால் நட்சத்திரம் வர ஆரம்பிக்கும் போது ரோசட்டா அதைத் துரத்த வேண்டும்
என்று முடிவு செய்யப்பட்டது.
நீங்கள் ஒரு பஸ்ஸைத் துரத்திப்
பிடிக்க வேண்டுமானால் பஸ்ஸின் பின்புறமாக அதைத் துரத்தினால்தான் பஸ்ஸைப் பிடிக்க
முடியும். ஆகவே ரோசட்டா 85
கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றால் தான் அங்கிருந்து அது வால்
நட்சத்திரத்தைத் துரத்த முடியும்.
ரோசட்டா 2004 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்ட போது அந்த
விண்கலத்துக்கு அவ்வளவு தூரம் செல்வதற்கான வேகம் கிடையாது. ஆகவே
ரோசட்டாவுக்கு மேலும் மேலும் வேகம் கிடைத்தாக வேண்டும். அவ்விதம்
கூடுதல் வேகம் பெற வழி உண்டு.
|
ரோசட்டா
விண்கலம் பின்பற்றிச் சென்ற பாதை
|
ரோசட்டா மூன்று தடவை பூமியைச் சுற்றியது. ஒரு தடவை செவ்வாய் கிரகத்தைச் சுற்றியது.
ஒரு விண்கலம் தொலைவிலிருந்து வந்து பூமியை ஒரு தடவை சுற்றிச்
சென்றால் பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக அந்த விண்கலத்துக்கு இயல்பாக வேகம்
அதிகரிக்கும். இது இயற்கை நியதி. ரோசட்டா
ஏற்கெனவே கூறியபடி பூமியை மூன்று தடவையும் செவ்வாயை ஒரு தடவையும் சுற்றியபோது அதன்
வேகம் அதிகரித்த்து.
இதன் பலனாக அது 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல
முடிந்த்து. பத்து ஆண்டுகள் ஆனதற்கு இது தான் காரணம்.
ரோசட்டா இப்படி சுற்றிச் சுற்றி வந்த
காலகட்டத்தில் அது ஸ்டெயின்ஸ், மற்றும் லூடேஷியா ஆகிய விண்கற்களை நெருங்கி ஆராய்ந்து தகவல் அனுப்பியது.
ரோசட்டா பூமியிலிருந்து 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த போது
அதாவது 2011 ஆம் ஆண்டு வாக்கில் அந்த விண்கலத்தில் இருந்த
கருவிகள் செயல்படுவதை நிறுத்தி ரோசட்டாவை நீள் உறக்கத்தில் இருக்கும்படி
செய்தார்கள். நிபுணர்கள் ஒரு காரணமாகத் தான் இதைச் செய்தனர்.
ரோசட்டாவில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை.
ஆகவேதான் சூரிய
ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென ரோசட்டாவின் இரு புறங்களிலும் தலா 14 மீட்டர் நீளத்துக்கு சோலார் செல் எனப்படும்
மின் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியானது சூரியனிலிருந்து
சுமார் 15 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. இந்த அளவு தூரத்தில் இருந்தால் மின் பலகைகள் மூலம் நிறைய மின்சாரம்
கிடைக்கும்.
ஆனால் சூரியனிலிருந்து 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது
அந்த மின் பலகைகள் மீது அற்ப அளவுக்கே சூரிய ஒளி விழும். ஆகவே
போதுமான மின்சாரம் உற்பத்தியாகாது. இதை மனதில் கொண்டே
ரோசட்டாவை நீள் உறக்கத்தில் ஆழ்த்தினர். அதே நேரத்தில்
அவ்வளவு தொலைவிலிருந்து மறுபடி சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும் கட்டத்தில் ரோசட்டா
விழித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்ட்து. அதாவது ரோசட்டாவில்
உள்ள கம்ப்யூட்டர் விழித்துக் கொண்டு பூமிக்குத் தகவல் கொடுக்க ஏற்பாடு
செய்யப்பட்டது. இது கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்கு ஒப்பானது 
|
ரோசட்டா
விழித்துக் கொண்டவுடன் மகிழ்ச்சியில்
மூழ்கிய விஞ்ஞானிகல்
|
சுமார்
31 மாத காலம் உறக்கத்தில் இருந்த ரோசட்டா கடந்த ஜனவரி 20 ஆம் தேதி விழித்துக் கொண்டு சிக்னல் அனுப்பியது. இந்த
சிக்னல் பூமிக்கு வந்து சேர 45 நிமிஷங்கள் ஆகின. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் தலைமைக் கேந்திரத்தில் வயிற்றில் நெருப்பைக்
கட்டிக் கொண்டு கவலையுடன் காத்திருந்த விஞ்ஞானிகள் இந்த சிக்னல் கிடைத்தவுடன்
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
ரோசட்டாவின் கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டு அந்த விண்கலம் விழித்துக் கொள்ளாமல்
போயிருந்தால் எல்லாம் பாழ். எதுவும் செய்திருக்க
முடியாது. இப்போது ரோசட்டா சுமார் 67 கோடி
கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
|
ரோசட்டாவிலிருந்து
பிலே கீழே வால் நட்சத்திரத்தில்
இவ்விதமாகத்தான் இறங்கும். இது வரை
படம்
|
வருகிற மே மாத வாக்கில் தகுந்த ஆணைகள்
மூலம் ரோசட்டாவின் வேகம் குறைக்கப்படும். அது வால் நட்சத்திரத்தை மெல்ல நெருங்கி ஆகஸ்ட் மாத வாக்கில் வால்
நட்சத்திரத்தை சுற்றிச் சுற்றி வர ஆரம்பிக்கும். நவம்பர்
11 ஆம் தேதி பிலே இறங்கு கலம் வால் நட்சத்திரத்தில் மெதுவாக இறங்கி
ஆய்வுப் பணிகளைத் தொடங்கும்.
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு. பத்து வருஷக் காத்திருப்பு. இவ்வளவு கஷ்டப்பட்டு சின்னஞ்சிறிய வால் நட்சத்திரம் ஒன்றை ஆராய்வானேன்?
சூரியன் தோன்றிய போது பூமி, செவ்வாய் முதலான கிரகங்களும் தோன்றின. தயிர் கடையும் போது வெண்ணெய் ஒதுங்குவது போல சூரிய மண்டலத்தின் கிரகங்கள்
தோன்றிய போது மிஞ்சிய பொருட்கள் சூரிய ம்ண்டல எல்லைக்கு அப்பால் ஒதுங்கின.
இப்படி ஒதுங்கியவை தான் வால் நட்சத்திரங்கள். எனவே வால் நட்சத்திரங்களை – ஏதேனும் ஒரு வால் நட்சத்திரத்தை ஆராய்ந்தால் சூரிய மண்டலம் தோன்றிய போது
இருந்த நிலைமைகளை அறிய முடியும். சூரிய மண்டலத் தோற்றம்
பற்றி மேலும் தெரிந்து கொள்ள இயலும். இந்த நோக்கில் தான்
ரோசட்டாவில் 12 கருவிகளும் கீழே இறங்கும் பிலேவில் 9 கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.
வருகிற ஆகஸ்டில் தொடங்கி அடுத்த வருட டிசம்பர் வரை
ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தை சுற்றியபடி தொடர்ந்து வந்து
கொண்டிருக்கும். வால்
நட்சத்திரம் அடுத்த வருட ஆகஸ்டில் சூரியனுக்கு நெருக்கமாக இருந்து விட்டு அதாவது
சூரியனைச் சுற்றி விட்டு டிசம்பர் வாக்கில் வந்த வழியே செல்ல முற்படும்.. அத்துடன் ரோசட்டாவின் பணி முடிந்து விடும்.
Great Information
ReplyDeleteGreat Great,
ReplyDeleteGreat information......
ReplyDeletewow what an explanation!!! hats off to u sir!
ReplyDeleteManiyarasan u r a good teacher all t best for u r feture
ReplyDeleteSuperb
ReplyDeleteVERY INTERESTING MANIYARASAN SIR., KEEP IT UP...
ReplyDeletemani sir innoum thakavalakal koutounka
ReplyDeletenalla thakavalkalai sirapaka vilaki kooriyadharku nandri
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete