மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதிலும் 39 மையங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதிலும் 39 மையங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.


பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் இன்று 39 மையங்களில் நடைபெற்றது.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இத்தேர்விற்காக, விரிவான சிறப்பு ஏற்பாடுகளை, தமிழக அரசு மேற்கொண்டிருந்தது.தமிழகத்தில் பார்வைத்திறன் குன்றியவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கு என, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். மேலும், முதலமைச்சர் உத்தரவுபடி, பார்வைத்திறன் குன்றியவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக, கட்டணமில்லாமல் 40 நாட்கள் சிறப்பு பயிற்சியும், பயிற்சி வழங்கப்பட்ட காலங்கட்டங்களில் அவர்களுக்கு மதிய உணவும், தேநீரும் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை, திருச்சி, மதுரை, நாகர்கோவில், விழுப்புரம் உட்பட மாநிலம் முழுவதும் 39 மையங்களில், பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வு இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வினை ஆயிரத்து 216 பார்வைத்திறன் குன்றியவர்களும், 3,477 மாற்றுத்திறனாளிகளும் எழுதினர். தேர்வு எழுத வந்த பார்வைத்திறன் குன்றியவர்களுக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, பள்ளி நுழைவு வாயிலிலிருந்து தேர்வுகூடத்திற்கு அழைத்து சென்று அமர வைக்கும் பணியும் அரசு சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித சிரமம் இல்லாத வகையில், தரை தளத்திலேயே தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 6 மையங்களில் நடைபெறும் தேர்வில், சுமார் 500 பேர் தேர்வு எழுதினர். சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வினை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் திரு. விபு நய்யர் பார்வையிட்டார். பார்வைத்திறன் குன்றியோர், கைகள் குறைபாடு உடையோருக்கு தேர்வெழுத உதவியாளர் நியமிக்கப்பட்டதோடு, தேர்வெழுத கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாச சலுகையும் வழங்கப்பட்டது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தேர்வர்கள், தங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

9 comments:

  1. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரத்தில் வெளியிட ஏற்பாடு
    ‘கீ ஆன்சர்’ அடுத்த வாரம் வெளியாகும்
    ---- தி இந்து நாளேடு

    சென்னை
    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரங்களில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
    பார்வை இல்லாத மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பி.எட். பட்டதாரிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் 39 மையங்களில் புதன்கிழமை நடந்தது.

    தேர்வுக்கு விண்ணப்பித்த 4,694 பேரில் 4,476 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். இவர்களில் 3,301 பேர் உடல் ஊனமுற்றவர்கள். எஞ்சிய 1,175 பேர் பார்வையற்ற வர்கள். அவர்களின் உதவியா ளர்கள் கேள்வியைப் படித்து சொன்னார்கள். பார்வையற்ற வர்கள் தெரிவிக்கும் பதில்களை உதவியாளர்கள் விடைத்தாளில் குறித்தனர்.

    தேர்வு நேரம் அதிகரிப்பு

    சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி, என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்த வக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் 488 பேர் தேர்வெழுதினர். இந்த மையங்க ளில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார், உறுப்பினர் கே.அறிவொளி ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

    வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு நேரத்தை காட்டிலும் (3 மணி நேரம்) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித்தேர்வு என்பதால், இத்தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் அளிக்கப்பட்டது. அதோடு, அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வு மையங்களில் தரை தளங்களிலேயே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால். உடல் ஊனமுற்ற, பார்வையில்லாத ஆசிரியர்கள் தங்கள் தேர்வறைக்கு எளிதாக செல்ல முடிந்தது.

    2 வாரத்தில் தேர்வு முடிவு

    தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மதிப்பீட்டு பணிகளை விரைந்து முடித்துவிட முடியும்.
    தேர்வுக்கான கீ ஆன்சர் (விடைக்குறிப்பு) அடுத்த வாரம் வெளியிடப்படும். அதுதொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க ஒரு வாரம் காலஅவகாசம் கொடுக்கப்படும். எனவே, 2 வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

    ReplyDelete
  2. ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்து
    தகுதித் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி
    ---- தி இந்து நாளேடு
    அப்துல்கலாம் சொன்னதால் விடா முயற்சி


    திருச்சி
    இரு கைகளை இழந்த நிலையிலும் ஆசிரியராகும் உறுதியுடன், தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து தகுதித் தேர்வுகளை எழுதி வருகிறார் மாற்றுத்திறனாளி ரங்கசாமி.
    திண்டுக்கல் அருகே அய்யலூரில் சலூன் கடை வைத்திருக்கும் முருகேசனின் ஐந்தாவது மகன் ரங்கசாமி. இவர் தன் 4வது வயதில் சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். 5 வயதில் காரைக்குடியில் ஒரு ஊனமுற்றோர் பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை படித்தார். திடீரென அப் பள்ளியை மூடிவிட்டனர்.
    எனவே தனது சொந்த ஊரில் மீண்டும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளார். ‘எப்படி எழுதுவே?’ என ஆசிரியர் கேட்டபோது நசுங்கிய கைகளின் எஞ்சிய பகுதியை பயன்படுத்தி எழுதுவேன் என்று கூறிய அவர், அதன்படி எழுதிக்காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன் பின் படிப்பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. தேர்வு எழுதும்போது மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி உண்டாம். அப்படியே பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, எம்.ஏ., பி.எட், வரை முடித்துவிட்டார்.
    திருச்சி இ.ஆர். பள்ளியில் புதன்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிவிட்டு வந்த ரங்கசாமியிடம் பேசியபோது: எங்கள் வீட்டில் முதல் பட்டதாரி நான்தான். அண்ணன்கள் இருவருமே முடிதிருத்தும் தொழில் செய்கின்றனர். 2 அக்காள்களுக்கும் திருமணமாகிவிட்டது. பத்தாம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கவில்லை. பஸ் விபத்தில் இரண்டு கைகளும் நசுங்கியபோது எனக்கு பெரிதாக விவரம் தெரியாது. ஆரம்ப காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போது என்னை எல்லோரும் பரிதாபமாக பார்த்தார்கள். எழுதுவதற்கு உதவிக்கு யாரையாவது வைத்துக்கொள் என கூறினார்கள்.
    நானாக செயல்படுவது என முடிவெடுத்த பின் முதலில் கால்களால் எழுதிப் பழகினேன். சரிவரவில்லை. அடுத்து வாயால் எழுதினேன். அதில் வேகமாக எழுத முடியவில்லை. பின்னர் நசுங்கிய கையின் எஞ்சிய பாகத்தில் எழுத பயிற்சி எடுத்தேன். தற்போது மற்றவர்களுக்கு இணையாக என்னாலும் எழுத முடியும்.
    பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத் தேர்வில் கூடுதல் நேரத்துக்கு அனுமதி பெற்று எழுதினேன். கல்லூரியில் எல்லா தேர்வுகளையும் குறித்த நேரத்திலேயே எழுதி முடித்துவிட்டேன்.
    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2010-ம் ஆண்டு கோவைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். என்னிடம் சிறிது நேரம் பேசிய அவர் எனது விவரங்களை கேட்டு “நீ ஆசிரியர் ஆக முயற்சி செய்; உன்னால் ஏராளமான தன்னம்பிக்கையுடைய மாணவர்களை உருவாக்க முடியும்” என்றார்.
    அப்போது முதல் நான் பி.எட்., முடித்து ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்கிறேன். கடந்த 3 முறை நடந்த தகுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளேன். வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வையும் எழுதியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் ஆசிரியர் ஆகியே தீருவேன் என்றார்.
    ரங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க அனைவரும் வாழ்த்தலாமே..!
    தேர்வெழுதும் ரங்கசாமி

    ReplyDelete
  3. சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு
    ---- தினமலர் நாளேடு
    தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக, கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில், பார்வையற்றவர்கள், 1,175 பேரும், இதர குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், 3,301 பேரும் பங்கேற்றனர். தேர்வெழுத பதிவு செய்தவர்களில், 218 பேர், "ஆப்சென்ட்.' தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். சமூக அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட, 94வது கேள்வி மட்டும், பாடத்திற்கு சம்பந்தம் இல்லாததாக இருந்தது என, சிலர் தெரிவித்தனர். நான்கு வகை குறியீடுகளை கொடுத்து, அதை, நான்கு விடைகளுடன் பொருத்துமாறு, கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்வி, பாடத்தில் வரவில்லை என, பார்வையற்ற தேர்வர்கள் தெரிவித்தனர். விடைத்தாள் திருத்துவதற்கு முன், இந்த விவகாரம் குறித்து, ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

    ReplyDelete
  4. Thanks for the news updates bharathi sir..

    ReplyDelete
  5. let today be a sweet turn in our one year pain .
    let god shown a ray of light in our future sleeping in darkness
    good and confident morning to all

    ReplyDelete
  6. No sweet turn, no ray of life. G.O will be released after special tet result.

    ReplyDelete
  7. G.O eppa vanthu namba eppa velaiku pogurathu??????????????????????????????

    ReplyDelete
  8. trb pls understand our situation. g.o and selection list entha month kulla vidunga. select agalana nanga enga velaiya parpom. dont play game on our life. pls consider.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி