எந்த இடத்தில் கிணறு தோண்டலாம்? நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்த முறை.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

எந்த இடத்தில் கிணறு தோண்டலாம்? நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்த முறை....


தொள்ளாயிரம் அடி போர் போட்டோம்.... ஆயிரம் அடி போர் போட்டோம்... ஆனா, தண்ணி கிடைக்கலை’ங்கறதுதான் எங்க பார்த்தாலும் பேச்சா இருக்கு. ஆனா, 'கிணறு வெட்டினோம். தண்ணி இல்லை’னு சொல்றதைக் கேட்கறது அரிதா இருக்கும். காரணம், போர் போடற மாதிரி, கிணறு வெட்டுற சமாச்சாரம் அத்தனை ஈஸியா இருக்காது. கிணறு வெட்டுற வேலை ஒரு கூட்டுமுயற்சி. மாசக்கணக்குல வேலை செய்யணும். பத்து பேருக்கு மேல வேலை செய்யணும். சின்ன தவறு நடந்தாலும், ஒட்டுமொத்த வேலையும், வீணாகிடும். அதனால, கிணறு வெட்டுறதுக்கு முன்ன பல முன்னேற்பாடுங்க நடக்கும்.


நம்ம முன்னோருங்க அதுக்கு பல சூத்திரங்களைச் சொல்லி வெச்சிருக்காங்க. அந்த சூத்திரப்படி கவனிச்சி கிணறு தோண்டினா... நிச்சயம் நல்ல கிணறு அமையும்னு சொல்றாங்க. இந்த வறட்சியான நேரத்துல, இப்படி ஒரு விஷயத்தை எல்லாரும் தெரிஞ்சி வெச்சிக்கிறது நல்லதுதானே!

கிணறு தோண்டறதுக்காக நீங்க தேர்வு செய்திருக்கிற இடத்துல பல வகையான பசுமையான புல்லுங்க முளைச்சிருந்தா... அந்த இடத்தை விட்டுப்புடாதீங்க. அதுதான் சரியான இடம். ஏன்னா, இப்படி பசுமையான புல் உள்ள இடத்துல குறைந்த ஆழத்துல தண்ணி கிடைக்குமாம். சரி, தண்ணி கிடைச்சிருது. நல்ல சுவையான தண்ணியா இருந்தாத்தானே, பயிரும் நல்லா வளரும். ஆடு, மாடுங்களுக்கும், மனுஷன்களுக்கும் தாகத்தைத் தணிக்கும்.
ஆக, 'சுவையான தண்ணி அந்த இடத்துல கிடைக்குமா?’னு பார்க்க அடுத்த கட்டமா ஒரு வேலை செய்யுங்க. அரை கிலோ நவதானியத்தை ரவை மாதிரி உடைச்சி, கிணறு தோண்டப்போற இடத்துல முதல் நாள் சாயங்காலம் தூவி விடுங்க. மறுநாள் காலையில பார்த்தா, அந்த இடத்துல எறும்புங்க மொய்ச்சிட்டு இருக்கும். அங்க சுவையான தண்ணி இருந்தா, எல்லா எறும்புகளும் அங்கயே புத்து உருவாக்கி, உள்ள போய் தானியத்தை சேகரிக்கும். அந்த இடத்துல கிணறு தோண்டிட வேண்டியதுதான். அங்க நல்ல தண்ணி இல்லைனா... நவதானிய ரவையை எடுத்துக்கிட்டு, தண்ணி இருக்கற இடம் நோக்கி, எறும்புங்க பயணம் செய்யும். அந்த இடத்தைக் கண்டுபிடிச்சி, அங்க கிணறு வெட்டலாம். இதெல்லாம் நம்ம முன்னோருங்க கடைப்பிடிச்ச தொழில்நுட்பங்கள்தான்.

சரி, நல்லத் தண்ணி கிடைச்சிடுச்சி, கோடை காலத்துலகூட வற்றாத தண்ணி அங்க கிடைக்குமா?

கிணறு தோண்ட முடிவு செஞ்ச இடத்துல பால் மாட்டை மேய விடுங்க. மாடு வெளியே வராதபடி, சுத்திலும் அடைச்சிடுங்க. கொஞ்ச நேரம் புல்லை மேஞ்சிட்டு, ஒரு இடத்துல படுத்து ஓய்வு எடுக்கும். எந்த இடத்துல, குளிர் நீரோட்டம் இருக்கோ, அங்கதான் மாடுங்க படுக்கும். மனுஷனைவிட மாடுங்களுக்கு இயற்கையைப் புரிஞ்சி நடக்குற பழக்கம் உண்டு. இப்படி ஐந்து நாளைக்கு தினமும், ஒரே இடத்துல பால் மாடு படுத்து, அசை போட்டுச்சினா... அந்த இடத்தைக் குறிச்சி வெச்சிடுங்க. அங்க கோடையிலும்கூட குறைவில்லாம தண்ணி கிடைக்குமாம்!

இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சி செய்தா, நிச்சயம் வற்றாத நீருற்று உள்ள கிணறு அமைக்க முடியும்.

ஆடு, மாடுங்ககிட்ட இருந்து மனுஷங்க படிக்க வேண்டிய பாடம்... எவ்வளவோ இருக்கு. பெரிய பெரிய ஞானிங்கள்லாம்கூட இப்படி பாடம்படிச்சிதான் உருவாகியிருக்காங்க. ஒரு தடவை, இமயமலை அடிவாரத்துல இருக்கிற, ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். சகல வசதியோட இருந்த அந்த ஆசிரமத்துல, சுவையான உணவுகள இலையில பரிமாறியிருந்தாங்க. சாதாரண சாப்பாடு இல்ல... அறுசுவை விருந்து. அந்த ஆசிரம வழக்கப்படி, தலைமைச் சாமியார் வந்து சாப்பிட்ட பிறகுதான், எல்லாரும் சாப்பிடணும்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல வந்து சேர்ந்த சாமியார், 'இப்போது எல்லோரும், மனிதர்களைப் போல சாப்பிட போகிறீர்களா... அல்லது ஆடு, மாடுகளைப் போல சாப்பிட போகிறீர்களா?’னு கேட்டாரு.

பந்தியில இருந்த ஒருத்தர் எழுந்து, 'மனுஷங்க மாதிரிதானே சாப்பிடுவோம் சாமீ... இதுல கேக்கறதுக்கு என்ன இருக்கு?’னு சொன்னாரு.

'விஷயம் இருக்கிறது'னு சொன்ன சாமியார், 'ஆடு, மாடு... போன்ற விலங்குகள் எப்போதும் அளவுக்கு மீறி உண்பதில்லை. சுவையான மக்காச்சோளம் இருக்கிறது, அருமையான பசுந்தீவனம் இருக்கிறது என்று அவை ஒரு போதும், கூடுதலாக ஒருவாய்கூட சாப்பிடுவதில்லை. அதனால்தான், அவற்றுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு..... என்று எந்த நோய் நொடியும் வருவதில்லை. ஆகையால், நாம் எல்லோரும் ஆடு, மாடுகளைப் போல சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம்’னு அருமையான வாழ்க்கைப் பாடத்தைச் சுட்டிக்காட்டினாரு.
-விகடன்..

4 comments:

  1. . நன்றி ஸ்ரீ அவர்களே. இது போன்ற செய்திகள் ஏற்கனவே தெரிந்திருந்த போதும் என்னைப் போன்ற பலருக்கு எடுத்துறைப்பதில் சிரமம் உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி