ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது


தமிழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள், பொறியியல் கல்லூரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும், போலியாக தயாரித்து, ஒரு செட், 2,000 ரூபாய் என விற்றுவந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 52; ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, இவரும், வியாசர்பாடி பி.எஸ்.என்.எல்., குடியிருப்பைச் சேர்ந்த தேவராஜ் என்பவரும், வியாசர்பாடி, ஏ.ஏ., சாலையில் நடந்து சென்றனர். இவர்கள் மீது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களிடம் விசாரித்தனர். போலீசார் சற்று திரும்பிய சமயம் பார்த்து, மூர்த்தி, தன் கையில்இருந்த பையை, காலுக்கு அடியில் போட்டு மூடினார். போலீசார் அதை எடுத்து பார்த்தபோது, கல்வித் துறை சார்ந்த முத்திரைகள் இருந்தன.

சுற்றி வளைப்பு:

அதுபற்றி கேட்டபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, இவர்கள், போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் அளித்த தகவலின்படி, இந்த கும்பலின் தலைவன், சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கருணாஎன்கிற கருணாகரனை, 43, போலீசார் சுற்றி வளைத்தனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், கள்ள நோட்டுகள் தயாரித்து, தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்த, சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், பழனி ஆகியோரின் கூட்டாளி கருணாகரன். மியான்மரில் இருந்து தாயகம் திரும்பிய இவர் மீது, 1999ல், சி.பி.சி.ஐ.டி., போலீசார், கள்ள நோட்டு வழக்கு பதிவு செய்தனர். பின், 2001ல் போலீசில் சிக்கி, சிறை சென்ற அவர், ஜாமினில் வெளிவந்தார். அதன் பின், ஒன்பது ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர், தேவராஜ், மூர்த்தி, ராஜேஷ், ராஜேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து, போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்தார். சில ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலையில், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்ட வழக்கில், இவரது கூட்டாளிகள் சிக்கினர்; கருணாகரன் தலைமறைவானார். அதன் பின்னும், தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களின் மதிப்பெண் சான்றிதழ், பட்டமளிப்பு சான்றிதழ்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, போலியாக தயாரித்து விற்பனைசெய்து வந்துள்ளது தெரியவந்தது.

போலீசார் மலைப்பு:

இவர்களிடம், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட முத்திரைகள், சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை பார்த்து போலீசார் மலைத்துப் போயினர். இது தவிர, ஜாதி சான்று, வருமானம், இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என, அரசு துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும், போலியாக தயாரித்து, ஒரு செட், 2,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இவர்களிடம் போலி சான்றிதழ்கள் பெற்றவர்கள், வெளிநாடு மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில், உயர் அதிகாரிகளாக உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அவர்கள் பற்றிய விவரங்களையும் தோண்டினால், இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என, போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த கும்பலைச் சேர்ந்த ராஜேஷ், ராஜேந்திரனையும் தேடி வருகின்றனர்.

வழக்கறிஞர்; வணிகவரி இயக்குனர்:

கைது செய்யப்பட்டுள்ள கருணாகரன், மூர்த்தி, தேவராஜ் ஆகியோர், தங்களை, வழக்கறிஞர், வணிக வரித்துறை துணை இயக்குனர் எனக் கூறியபடி, வலம் வந்துள்ளனர். மூர்த்தியின் மகன் வழக்கறிஞருக்கு படிக்கிறார்; அவரது மகள் பொறியாளர். அதுபோல், கருணாகரன், தேவராஜின் மகன்கள், பொறியாளர் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.இந்த மோசடி கும்பலின் பட்டியல் மிகவும் நீளமானது என, போலீசார் தெரிவித்தனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி