காகிதத்தில் காத்திருக்கும் கலவை சாதத்திட்டம்: மாணவர்கள் சத்துக்களை பெறுவது எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

காகிதத்தில் காத்திருக்கும் கலவை சாதத்திட்டம்: மாணவர்கள் சத்துக்களை பெறுவது எப்போது?


அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டாலும், அது செயல்பாட்டிற்கே வராதது தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களும் கல்வி வசதி பெறும் வகையில் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாகஇருக்கக்கூடாது என்பதால், அரசு சீருடை முதல் புத்தகப்பை வரை அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் கல்வித்தரம் மேம்படுத்தும் வகையில், கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதுடன்,கல்வி கற்பிக்கும் முறையில் பல்வேறு புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. ஆங்கிலவழிக்கல்வி போன்ற திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.அதில் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் கலவை சாதம் திட்டம் மற்றும் அட்சய பாத்திரம் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியது. அதில் கலவை சாதம் திட்டத்தின் படி ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்களில் திங்கள் கிழமையில் வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டையும்; செவ்வாய்க்கிழமையில் கொண்டைக்கடலை புலவு, தக்காளி முட்டை மசாலா, புதன் கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக் கிழமையில், சாதம், சாம்பார், வேகவைத்த மூட்டை, வெள்ளிக்கிழமையில், கருவேப்பிலை அல்லது கீரை சாதம், மசாலா முட்டை, வறுத்த உருளைக்கிழங்கும் வழங்க வேண்டும்.இரண்டு மற்றும் நான்கவாது வாரங்களில் திங்கள் கிழமை சாம்பார் சாதம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய் கிழமைகளில் காய்கறி சாதம், மிளகு முட்டை; புதன் கிழமையில், புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழன் எலுமிச்சை சாதம், சுண்டல், தக்காளி முட்டையும்; வெள்ளிக்கிழமையில் சாதம், சாப்பாடு, வேக வைத்த முட்டை, வறுத்த உருளை போன்றவை வழங்க வேண்டும் என திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது; மாதிரி பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டன.மாணவர்களின் கல்வித்தரத்தோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை அரசு அறிவித்து சில ஆண்டிற்கு மேலாகியும் இதுவரை இதனை பள்ளிகளில் அமல்படுத்த எவ்வித நடவடிக்கையுமில்லை. பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அட்டைகள் மட்டும் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. மாணவர்கள் பசியினை போக்கவும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் ஏன் செயல்பாட்டிற்கு வராதது கேள்விக்குறியாக உள்ளது.

அட்சய பாத்திரம்

பள்ளிகளில் அட்சய பாத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தினமும் ஒரு காய் கொண்டு வந்து அந்த பாத்திரத்தில் போட வேண்டும். மாணவர்கள் பங்களிப்புடன் கொண்டு வரப்பட்ட திட்டம் போதிய ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், இதுவும் காணாமல் போயுள்ளது.

எரிவாயு எங்கே?

பள்ளி மாணவர்களுக்கு சமைப்பதற்காக காஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பள்ளிகளில் தனியாக மேடைகளும் அமைக்கப்பட்டன. அறிவிப்போடு நின்று போன திட்டங்களில் இதுவும் சேர்ந்துள்ளது. இதுவரை பள்ளிகளுக்கு காஸ் அடுப்பு வழங்கப்படவில்லை. இதனால் புகை அதிகளவு வெளி வரும் விறகு அடுப்புகளிலேயே சமையல் பணிகள் தொடர்கிறது.சமையல் பணிகளுக்கு உதவியாக மிக்சி, கிரைண்டர் போன்றவை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மின்சார வசதி ஏற்படுத்தப்படாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று அரசு அறிவித்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அறிவிப்போடு நின்று போய் விட்டது. அறிவிப்போடு நிறுத்தாமல், அரசு அத்திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இது குறித்து மக்களின் கருத்து

ஜெயபிரதாப், விவசாயி, பொள்ளாச்சி:இன்றைய சூழலில் ஏழைக்குழந்தைகள் மட்டுமே கற்கும் இடமாக அரசு பள்ளிகள் மாறிப்போயுள்ளன. குடும்பத்தில் போதுமான பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில், அடிப்படை கல்வியையும், மதிய உணவையும் உறுதிப்படுத்த வேண்டியே பல ஏழை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளியில் சேர்க்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நலனுக்காகவும், போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யவும், மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. தினசரி பலவகை கலவை சாதம், விதவிதமானகூடுதல் உணவுகள் வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது ஏழை குழந்தைகள் மனதில் ஆசையுடன் கூடிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை.அறிவிப்போடு நின்றுவிட்ட இது போன்ற திட்டங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவித்ததை நடைமுறைக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டும்.

சோமசுந்தரம், பொள்ளாச்சி:ஏழைக்குழந்தைகள் நலனை பேணும் நல்ல நோக்கில், அட்சய பாத்திரம் மற்றும் கலவை சாதம் உள்ளிட்ட திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டன. ஏனோஅவை நடைமுறைக்கு வரவில்லை. அந்த நல்ல திட்டங்களை செயல்படுத்த தடையாக உள்ள சிக்கல்களை ஆராய்ந்து கண்டறிந்து, அவற்றை களைய வேண்டும்; ஆரோக்கியமான இளைய தலைமுறையை உருவாக்கும் திட்டத்தை கூடிய விரைவில் செயல்படுத்த, ஆளும் மாநில அரசுதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களை போன்றவர்கள் எதிர்பார்க்கிறோம்.அரசு நடைமுறை சிக்கல்களை ஆராயாமல் அவசரப்பட்டு அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்கலாமே.

அமிர்தவள்ளி, உடுமலை:கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள்கல்வி பெற மதிய உணவுத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டம் மேம்படும் வகையில் அரசு அறிவித்த கலவை சாத திட்டம், மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இத்தகைய திட்டங்கள் முறையாக அமலுக்கு வருவதால் உடல் நலமும், மனநலமும் மாணவர்களுக்கு மேம்படும்.பள்ளிகளில் கலவை சாத திட்டத்திற்கு இடையூறாக உள்ள நடைமுறைகள் குறித்து அரசு ஆய்வு நடத்தி உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதற்கான முயற்சிகளை கல்வித்துறையும் உடனடியாக வழங்குவது அவசியம்.

கார்த்திகா, உடுமலை:கலவை சாதம் உட்பட மதிய உணவுத்திட்டத்தில் கொண்டு வரப்படும்மாற்றங்களுக்கேற்ப சத்துணவு மைய கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும். சத்துணவுப்பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் குறிப்பாக, காஸ் அடுப்பு போன்ற சாதனங்களை அரசு வழங்க வேண்டும். இதனால் அப்பணியாளர்கள், எளிதாக ஊட்டச்சத்து மிகுந்த பல்வேறு உணவுகள் மற்றும் அரசு அறிவிக்கும் புதுவகையான உணவுகளை விரைவிலும், தரமாகவும் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க முடியும். இழுபறியாக இருக்கும் நல்ல திட்டமான கலவை சாதம் உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் கிடைக்க அரசு உத்தரவிட வேண்டும்.

திவாகர், பெத்தநாயக்கனூர்:இன்னும் சில இடங்களில் பல சத்துணவு மையங்களில் மரத்தடியில் சத்துணவு சமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் சத்துணவின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முட்டை, கீரை வகைகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது சத்துணவின் தரத்தை மேம்படுத்த கலவை சாதம் திட்டத்தை கொண்டு வந்தது. ஒரு சில இடங்களில் செயல்படுத்தி பார்த்ததோடு, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உன்னதமான நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மீண்டும் செயலாக்கத்துக்குகொண்டு வரவேண்டும்.

சுதாராணி, வாழைக்கொம்பு நாகூர்:சத்தான உணவும், தரமான கல்வியும் குழந்தைகளுக்குகிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு கொண்டுவந்த கலவை சாதம் மற்றும் அட்சய பாத்திரம் திட்டங்கள் என்ன காரணத்தால் நடைமுறைக்கு வரவில்லை என தெரியவில்லை. பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களின் தரம் உயர வேண்டும் என்பதற்காக, காஸ் அடுப்புகளை தந்த தமிழக அரசு, கலவை சாதம் மற்றும் அட்சய பாத்திரம் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாசன், வால்பாறை: வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சத்துணவு கலவை சாதம் நடைமுறைக்கு வராமல் உள்ளது.நாள் தோறும் பல்வேறு கலவை சாதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தை, வால்பாறை மலைப்பகுதியில் உள்ள 93 சத்துணவு மையங்களிலும் கொண்டு வர வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி