மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி இழப்பு, தமிழக கல்வித் துறையில் பரபரப்பு ஏற்படுத்தும் தகவலாகும்.
பல்கலைக் கழக மானியக்குழுவின் சட்ட திட்டங்களின் படி, அவர் இப்பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
பல்கலைக் கழக மானியக்குழுவின், சட்ட திட்டங்கள் 2010ன் படி, 10ஆண்டுகள், பேராசிரி யராக முறைப்படி பணியாற்றியதுடன், உரிய கல்வித் தகுதிகள் கொண்டவரை, பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும். மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தராக பணியாற்றிய கல்யாணி, இப்பதவிக்கு விண்ணப்பித்த போது, பேராசிரியர் பதவி வகித்ததாக கூறிய தகவலை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த இவ்வழக்கை, நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி விசாரித்து, இம்முடிவை அறிவித்திருக்கின்றனர். தமிழகத்தில், துணைவேந்தர் ஒருவரை பதவியில் இருந்து அகற்ற, வழக்கு காரணமாக அமைந்தது, இதுவே முதல்முறை. அதே சமயம், தேர்வுக் குழுவை இப்புகாரில் இருந்து விடுவித்தனர். கல்யாணி மதிவாணன் உரிய கல்வித் தகுதி கொண்டவர் என்ற விளக்கத்தை ஏற்றால், பல்கலை மானியக்குழு விதிகள் செல்லாததாகி விடும் என, நீதிபதி வி.ராமசுப்ரமணியன்குறிப்பிட்டு, அவரது நியமனத்தை ஏற்கவில்லை. அதைவிட இந்திய பல்கலைக் கழகங்களில், தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட, துணைவேந்தர் ஆக முடியாதுஎன்றும், அவர் குறிப்பிட்டது, இப்பிரச்னையின் பரிமாணத்தை உணர்த்துகிறது.
சென்னை பல்கலையின், சர் ஏ.லட்சுமணசாமி முதலியார், 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து, அப்பதவிக்கு புகழ் சேர்த்தார். மேலும், மால்கம் ஆதிசேஷய்யா உட்பட, பலர் இப்பெருமை மிகு பதவியை சிறப்பித்த வரலாறு உண்டு. கடந்த பல ஆண்டுகளாகவே, இம்மாதிரி மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பவர்கள், பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டங்களில், கருத்து முரண்பாடுகளை சந்தித்தது உண்டு. தற்போது, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனங்கள், முழுத்தகுதி அல்லது திறமை என்பதை விட, விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலை தான் உள்ளது. சற்று கவுரவமாக, கல்விப்பணியில் கழித்த பல துணைவேந்தர்கள், 'கல்வியில் அரசியல் நுழைந்ததால் தான் இந்த விபரீதங்கள்' என்று முணுமுணுத்தாலும், அதைக் கேட்டு சீராக்க, காலம் இன்னும் கனியவில்லை. கல்வி சிறக்க, பல ஆயிரம் கோடிகள் அரசால் செலவழிக்கப்படும் போது, பல்கலைக் கழக நெறி முறைகள் தவறும்போது, தீர்ப்புகள் இவைகளை சுட்டிக்காட்ட நேரிடுகிறது. அதனால், பொதுமக்களுக்கு பல விஷயங்கள் தெளிவாகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி பற்றி அலசப்பட்டது.
பிரதமர் தன் தனிப்பட்ட அதிகாரப் பொறுப்பில், மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அமைச்சர்களை நியமிப்பதால், ஸ்மிருதி இரானி பற்றிய பரபரப்பு அடங்கியது. அதே மாதிரி அணுகுமுறைகள், கல்வி நிலையங்களில் தலைமை வகிப்போருக்கு உள்ள அளவுகோல் அல்ல. தமிழ் இலக்கியத்தில், நிறைய கல்வி கேள்வி களில் சிறந்தவர்களை, 'சான்றோர்' என அழைப்பர். கல்வியில் தலைசிறந்த, இளைய தலைமுறையை வழிநடத்தும் திறன்மிக்க ஆசான்கள் தான், துணைவேந்தர்கள் ஆகவேண்டும். அதற்கான தேர்வு நடைமுறைகளும் வந்தால், நம் நாட்டின் பல்கலைக் கழகங்கள், உலகத் தரத்திற்கு உயரும். அதற்கான வழிகாட்டுதலாக, இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது என்றே கருதலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி