‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசிய நூற்றாண்டு விழா குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசிய நூற்றாண்டு விழா குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் பங்கேற்பு

சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய 100–வது ஆண்டு விழாவில் குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

100 ஆண்டுகள் நிறைவு


முதலாம் உலகப்போரின்போது, ஜெர்மனி நாட்டின் ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய 100–வது ஆண்டு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையொட்டி அதன் நூற்றாண்டு நிறைவு விழாவும், அந்த கப்பலில் வந்த தமிழக வீரர் செண்பகராமனின் 123–வது பிறந்தநாள் விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயக்குனர் ஜெ.டி.சர்மா, கம்பத், வெங்கட் ராஜூலு, சிங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவுக்கு செண்பகராமனின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து அவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

‘ஜெய்ஹிந்த்’ என்று கூறியவர்


விழாவில் குமரிஅனந்தன் பேசியதாவது:–

செண்பகராமன், தனது 14–வது வயதிலேயே பள்ளியில் வருகை பதிவின்போது, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறுவதற்கு பதில் ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறிய பெருமைக்கு உரியவர். ஜெர்மனி சென்ற அவர் ஒரு கப்பலையே வழிநடத்தும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டார்.

முதல் உலக போரின்போது, ‘எம்டன்’ கப்பல் இந்தியாவை நோக்கி வந்தபோது, ‘‘நாட்டு மண்ணை தொட்டு வணங்குவேன். ஆங்கில அரசு நிர்வாகத்தை நோக்கி குண்டு வீச வேண்டுமே தவிர இந்தியர்களை நோக்கி குண்டு வீசக்கூடாது’’ என்ற உறுதிமொழிகளை பெற்றுக் கொண்டு தான் ‘எம்டன்’ கப்பலில் உதவி மாலுமியாக வந்தார்.

சென்னையில் ஐகோர்ட்டு, துறைமுகம், ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றை நோக்கி ‘எம்டன்’ கப்பல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

நேதாஜிக்கு விதைத்தவர்


வியன்னாவில் நேதாஜியை செண்பகராமன் சந்தித்தபோது, ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறியதன் மூலம், சுபாஷ் சந்திரபோசுக்கு ‘ஜெய்ஹிந்த்’ என்ற மூல விதையை விதைத்த பெருமையை பெற்றார்.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை கேடயமாக பயன்படுத்திய இடங்களுக்கெல்லாம் விமானத்தில் சென்று துண்டு பிரசுரங்களை பறக்கவிட்டு, வெள்ளையர்களின் ராணுவத்தில் இருந்து விலகி, ஜெர்மனிக்கு வாருங்கள் நாம் ஒன்றிணைந்து வெள்ளையனை வெளியேற்றுவோம் என்று இந்தியர்களை ஒருங்கிணைத்தார்.

ஹிட்லர் வாபஸ் பெற்றார்


ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், இந்தியர்கள் ஆளுமை தன்மை அற்றவர்கள் என்று கூறியதால், இதற்கு ஹிட்லர் மன்னிப்பு கேட்டால்தான் மீண்டும் பேசுவேன் என்று வலுக்கட்டாயமாக இருந்தார். அதைத் தொடர்ந்து ஹிட்லர் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

1934–ம் ஆண்டு மே 28–ந் தேதி உயிரிழந்த செண்பகராமனின் அஸ்தியை அவரது இறுதி ஆசைக்கு ஏற்ப, அவரது மனைவி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பாதுகாத்து, 1966–ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் கொடி பறந்த போர்க்கப்பலில் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வந்து கரமணை ஆற்றில் கரைத்தார். செண்பகராமனின் அஸ்தி குமரிக்கடல் மற்றும் நாஞ்சில் நாட்டு விவசாய நிலங்களிலும் வீசப்பட்டது.

நினைவுசின்னம் வேண்டும்


இத்தகைய பெருமைக்குரிய செண்பகராமனின் வரலாற்றை 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடபுத்தகத்தில் வைப்பதுடன், அவருக்கு சிலை அமைத்து தந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதே இடத்தில், நினைவு சின்னத்தையும் அமைத்துத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், செண்பகராமனின் தாய்வழி பேரன்கள் சேது சேஷன், ரமேஷ் பாபு சங்கர், தாய்வழி பேத்திகள் பால மீனாட்சி, சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. EMTAN TET 2013 First Year celebration Today

    ReplyDelete
  2. Important news
    watch
    http://kalvikaviyam.blogspot.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி