உங்களை தலைவனாக்கும் தகுதிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2014

உங்களை தலைவனாக்கும் தகுதிகள்!

எல்லாருக்கும் அவரவர் துறையில் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் தலைவனாக இருப்பார்கள். காரணம் அவர்களிடம் உள்ள ஒரு சில தகுதிகள்தான். அப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ளும்போது தலைவன் என்ற அங்கீகாரம் தானாகவே கிடைக்கும்.

சில பள்ளிக்கூடங்களில் முதல் மதிப்பெண் பெறும் மாணவன் வகுப்பு தலைவனாக இருக்க மாட்டான். சிறந்த ஆளுமை திறனும், அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனோடும் இருக்கும் வேறு ஒரு மாணவனை ஆசிரியர் வகுப்பு தலைவனாக்கி இருப்பார்.

இதேபோன்று 'சக்தே இந்தியா' படத்தில் ஒரு காட்சியில் அணி தேர்வு நடக்கும். அப்போது அவர்களை அறிமுகப்படுத்தி கொள்ள கோச் கூறும்போது, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா என அறிமுகப்படுத்தி கொள்வார்கள். ஆனால் ஒருவர் மட்டும் இந்தியா என அறிமுகப்படுத்திக் கொள்வார். அவர்தான் அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார். காரணம், மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டி கொண்டதும், நாடு என்று குழுவாக யோசித்ததும்தான் காரணம். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீஙகளும் தலைவன் ஆகலாம்.

உங்களை தலைவனாக்கும் தகுதிகள் இதோ...

முடிவெடுப்பதில் உங்களின் பங்கு என்ன?

உங்கள் அலுவலகத்திலோ அல்லது கிரிக்கெட் போட்டியிலோ தலைவர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும். சிஇஓக்கள் எடுக்கும் முடிவில் தோல்வியிலிருந்து தலைகீழாக மாறி வெற்றிப்பாதைக்கு செல்ல வழிவகை செய்துள்ளது. உங்கள் குழுவில் உள்ள சிலர் ஒரு நல்ல முடிவை எதிர்ப்பார்கள். சிலர் தவறான முடிவை ஆதரிப்பார்கள். ஆனால், தலைவர் என்பவர் எது சரியோ அதனை மட்டுமே செய்ய வேண்டும். அப்படி செய்வதில் உள்ள சிரமங்களை எவ்வளவு சிறப்பாக கையாளுகிறோம் என்பதுதான் முக்கியம். உதாரணமாக, இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் தோனி உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் யுவராஜ் சிங் களமிறங்குவார் என எதிர்பார்த்தபோது, தோனியே களமிறங்கி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். சில முடிவுகளை யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் முடிவெடுப்பது சிறந்த தலைவனின் அடையாளம்.

புதிய உத்திகளை வகுப்பவராகுங்கள்!

எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக எதாவது ஒன்றை செய்து அதன் மூலம் தன்னை தனித்துக் காட்டி கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில் இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.

சில புதிய உத்திகளை நிறுவனங்கள் கையாண்டதற்கு பின்னால் ஒரு தனி மனிதனின் பங்கு அதிகமாக இருந்துள்ளது. ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், கேஎஃப்சியின் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் ஆகியோர் எடுத்த புதிய உத்திகள் தான் அவர்களை தலைவர்கள் ஆக்கியுள்ளது. நீங்கள் புதிய உத்திகளை கையாண்டால் நீங்கள் நிச்சயம் தலைவனாக முடியும்.அப்டேட் ஆகுங்கள்!

உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது அந்தப் போட்டியை சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில் உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களை கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களை விட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாக தங்களை மேம்படுத்தி கொள்கின்றனர்.

கடைகளே இல்லாமல் பொருட்களை விற்க முடியும், உங்களுக்கு என்ன தேவையோ அதனை என்னால் இல்லை என்று கூறாமல் தர முடியும் என்று ஆனலைனில் பொருள் விற்ற அலிபாவின் ஜாக் மா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் உங்களை இன்றைய காலகட்டத்திற்கு அப்டேட் செய்து கொண்டால் நீங்கள் தான் தலைவன்.


ரிஸ்க் எடுங்கள்!

சில விஷயங்களில் உங்களை சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால் அதனை பற்றி கவலைப்பாடாமல் உங்களுக்கு சரி என்று பட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதனை செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமை பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம் அனைவரும் இண்டெர்நெட் என்ற விஷயத்தை தேடலுக்கு பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்திற்கு பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற பண்புகளும் செயல்களும் உங்களை தலைவனாக்கும். நீங்கள் முடிவெடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் தலைவனாக இருக்கும்போது, நிஜத்திலும் நீங்கள் உங்களை ஆளுமை பண்போடு தலைவனாக காட்டிக்கொள்ள முடியும். இதுபோன்ற தகுதிகளை வளர்த்துக் கொண்டு நீங்களும் தலைவனாகுங்கள்.

ச.ஸ்ரீராம்

7 comments:

 1. இக்கட்டுரையின் பகுதி 'எங்கிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது'(நூல்?) என்று குறிப்பிட்டால் - இக்கட்டுரையின் நோக்கம் முழுமைடையும்.

  ReplyDelete
  Replies
  1. விகடனில் தற்போதும்... தினமணியில் சில நாட்களுக்கு முன்பும் வெளிவந்தது...

   Delete
  2. நன்றி நண்பரே...

   மிக உபயோகமான வரிகள்.

   (ஒரு கருத்தை நாமே பதிவு செய்தால் மட்டுமே பின்குறிப்பு எதுவும் தேவையில்லை.

   யாரேனும் மேற்கோள் கூறியவை அல்லது யாரோ ஒரு புத்தக ஆசிரியர் குறிப்பிட்டது என்றால் - அக்கட்டுரையின் இறுதியாக குறிப்பிட வேண்டும். அப்போது தான் அக்குறி்ப்பை நாம் வேறு இ்டத்தில் மேற்கோள் காட்ட இயலும்.)

   Delete
 2. Fine, thanks and expecting such notes

  ReplyDelete
 3. Sir,
  We can understand the inner meaning of this article. All r selfish. But for their vision that this justice. Any way there is no one person supporting for us.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி