பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2014

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. தர்மன், உமா உள்பட 6 பேர் 10-ஆம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயற்சி பெற்றனர். அதன் பிறகு, கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டுகளில் ஓவிய ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.

இதன் பிறகு, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி, பி.லிட்., பட்டப் படிப்பில் சேர்ந்தனர். அதன் பிறகு, பி.எட். பட்டம் பெற்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை தமிழ் ஆசிரியர்களுக்கானப் பதவி உயர்வு வழங்கி 131- பேர் அடங்கிய பெயர் பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வெளியிட்டது. அதில், இவர்கள் 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித் துறையிடம் கேட்ட போது, பிளஸ் 2 முடிக்காமல், பட்டப் படிப்பு பெற்றதால், பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியில்லை எனக் கூறப்பட்டது.

இதை எதிர்த்து 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், " பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வின் விதிப்படி பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதியே நாங்கள் பட்டம் பெற்றோம். ஆனால், நாங்கள் பிளஸ் 2 படிக்காமல் பட்டம் பெற்றதால் பதவி உயர் பெறுவதற்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் பெற்ற பட்டம் செல்லும் என அறிவித்து, எங்களுக்குப் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பிறகே பட்டப் படிப்பு பயின்றுள்ளனர். யுஜிசி விதிப்படி பிளஸ் 2 முடித்து விட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ் 2 படிக்காதவர்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றும் பட்டம் பயிலலாம்.

மனுதாரர்கள் இரண்டாவது முறையில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் பிறகு அவர்கள் பிளஸ் 2-விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். யுஜிசி முறைப்படியே இவர்கள் பயின்றுள்ளனர். இவர்களது பட்டங்களை பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

எனவே, மனுதாரர்கள் பெற்ற பட்டம் செல்லும். அதனால், மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள். எனவே, பதவி உயர்வு பெற மனுதாரர்களுக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறைப் பிறப்பித்த உத்தரவு, உச்ச நீதிமன்றம், யுஜிசி விதிமுறைகள், தமிழ்நாடு கல்வித்துறை பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது.எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி