அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2014

அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி

அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.

வேலையை உதறிவிட்டு...:அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 500 பேர், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று அரைநாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பணி என்பதால், ஒருசில ஆண்டுகளில் பணி நிரந்தரமாகி விடும் என நினைத்து, நல்ல சம்பளத்தில் இருந்த பலரும் அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்தனர்.

மத்திய அரசு நிதி:உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசைஆசிரியர் உள்ளிட்டோரும், இந்தப் பகுதிநேர பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு நிதியில் இருந்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் வழங்கி வருகிறது. பணியில் சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், பணி நிரந்தரமாவதற்கான அறிகுறி தெரியாததால், பலரும் விரக்தி அடைந்தனர். பகுதிநேர ஆசிரியர் அமைப்புகள், தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும், அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்த விரக்தியால், இதுவரை, 2,000 பேர், வேலையை ராஜினாமா செய்து விட்டு, பழைய வேலைக்கு திரும்பி உள்ளனர். நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெற வழி உள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு அதுவும் இல்லை. இதனால், நீண்ட தொலைவு பயண பிரச்னையாலும், பலர் வேலையை விட்டுள்ளனர்.

இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த உஷா கூறியதாவது:சொந்த ஊர், திருச்சி; புகுந்த இடம், கோவை. ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அரசு வேலையாக இருக்கிறதே பணி நிரந்தரமாகும் என்ற ஆவலில், வேலையில் சேர்ந்தேன்.

உடலும், மனமும்...:திருச்சி, முட்டத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர் வேலை. வாரத்தில், மூன்று நாள் திருச்சியில் தங்குவதும், பின், கோவை செல்வதுமாக இருந்தேன்; முடியவில்லை. இரண்டாவது முறையாக, கர்ப்பம் ஆன நிலையில், நீண்ட துார பயணத்தால், 'அபார்ஷன்' ஆகிவிட்டது.இதனால் உடலும், மனமும் பாதிக்கப்பட்டு, கடைசியில் வேலையை உதறினேன்.இவ்வாறு, உஷா கூறினார்.

வாய்ப்பு இல்லை:அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே, 2,000 பணியிடம் காலியாக உள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர், வேலையை ராஜினாமா செய்தது உண்மையே. பகுதிநேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்வதற்கு, வாய்ப்பு இல்லை' என்றார்.

1 comment:

  1. இந்த வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி