குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு: மத்திய அரசு திட்டம் ஜனவரியில் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு: மத்திய அரசு திட்டம் ஜனவரியில் அமல்


இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார். குறிப்பாக குறைந்த செலவில் அனைத்து வகைசிகிச்சைகளையும் ஒவ்வொரு இந்தியரும் பெற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் மருத்துவ திட்டமாகும்.

தற்போது மத்திய அரசு ‘‘ராஷ்டீரிய சுவஸ்திய பீமா யோஜனா’’ என்ற மருத்துவத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இன்சூரன்ஸ் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.இந்த திட்டத்தை மாற்றி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தர விட்டார்.இதையடுத்து அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை கொண்டுவர பிரதமர் அலுவலகம் தீவிர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.புதிய மருத்துவத் திட்டத்துக்கு ‘‘தேசிய சுகாதார உறுதி இயக்கம்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு வசதியாக தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதிதாக வர உள்ள திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.ஒரே கொள்கையின் கீழ் கொண்டு வரப்படும் இந்த இரு திட்டங்களும் ‘‘அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு’’ என்ற இலக்குடன் அமல் படுத்தப்படும். வரும் ஜனவரி மாதம் முதல் இந்த புதிய மருத்துவ இன்சூரன்ஸ்திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்சை எப்படி வழங்குவது என்பது பற்றி கடந்த வாரம் பிரதமர் அலுவலக அதிகாரிகள், சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்கள். அப்போது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் என்னென்ன அம்சங்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.அதன்படி புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு குடி மகனுக்கும் வாய்ப்பளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 50 அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை பொதுமக்கள் வாங்கி பயன் அடையலாம்.வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை–எளிய மக்கள், எந்த வகை நோயாக இருந்தாலும், அதற்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளும் முழுக்க, முழுக்க இலவசமாக கிடைக்கும்.மற்றவர்களுக்கு மிகவும் குறைந்த செலவில் சிகிச்சைகள் அளிக்கப்படும். வயது மற்றும் வருமானத்தின் அடிப்படையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பயன் பெறலாம்.தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி ஏழை தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த திட்டத்துக்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.புதிய திட்டம் மூலம் எல்லா பிரிவினருக்கும் ஸ்மார்ட் கார்டு தரப்படும்.

இந்த புதிய திட்டம் மூலம் விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை குறைந்த விலைக்குப் பெற முடியும்.உதாரணமாக இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்களுக்கு தற்போது சில லட்சம் செலவாகிறது. மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் சில ஆயிரம் ரூபாயில் ஸ்டென்ட்கள் பெற முடியும்.அதுபோல உயிர் காக்கும் மருந்துகளையும் குறைந்த விலையில் பெற முடியும். எனவே புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் பிரயோஜனமான மிகவும் பயன் தருவதான ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி