தியாகராஜ பாகவதர் நினைவுதினம் இன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

தியாகராஜ பாகவதர் நினைவுதினம் இன்று

தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்!


தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று.

தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர். நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி.

திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் கெட்டு மனம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 1 ஆம் தேதி தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் ஏழிசை மன்னர் பாகவதர். காலம் அவரது நினைவை சிதைத்தாலும் அவரது புகழை சிதைக்க முடியவில்லை. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் எவரும் இல்லை.



தங்கத்தட்டில் உணவருந்திய அந்த ஏந்தல், இறுதிக்காலத்தில் அன்றாட உணவிற்கே அவதிப்பட்டதாக சொல்வார்கள். அந்த வகையில் அவரது வாழ்வு பலருக்கு பாடம். இன்று அவருக்கு 55வது நினைவு நாள். நினைவுதினமான இன்று தமிழ்த்திரையுலகின் முன்னோடி என்ற வகையில் கூட திரையுலகம் அவருக்கு இன்று மரியாதை செலுத்தவில்லை.

புகழின் உச்சத்தில் இருந்தபோது, தென்மாவட்டம் ஒன்றிற்கு ரயில் ஏற வந்த பாகவதரை மக்கள் அடையாளங்கண்டுகொள்ள, அவரை தரிசிக்க வந்த கூட்டத்தால் பாகவதர் 4 மணிநேரம் தாமதமாக சென்றதாக சொல்வார்கள். தனது காருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவரது கையை தொட்டு முத்தமிட சாரிசாரியாக மக்கள் திரண்டுவந்ததை ஆச்சர்யம் பொங்க சொல்வார்கள் அக்காலத்தில்.



ஆனால் திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓரிரு உறவினர்களைத்தவிர அவரை வணங்கிச் செல்ல இன்று எவரும் வரவில்லை.திருச்சி மாவட்ட விஸ்வகர்மா சங்கத்தினரும், அவரது உறவினர்களும் இன்று காலை வந்து தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.

"இதுதான் ஒரு முன்னோடிக் கலைஞனுக்கு திரையுலகம் காட்டும் மரியாதையா?" என அவரது உறவினர்கள் புலம்பியபடியே நகர்ந்தனர் அங்கிருந்து.

-சி.ஆனந்தகுமார்,
படம்: தே.தீக்‌ஷித்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி