மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு..


குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின்கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது.

துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 1,164 அரசு பள்ளிகள் மற்றும் 62 அரசு உதவிபெறும் பள்ளிகள் என 1,226 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

இதில், 14 ஒன்றியங்களில் குறிப்பிட்ட பள்ளிகளை மட்டும் தேர்வுசெய்து நடத்தப்பட்ட இத்தேர்வில், 60 முதல் 70 சதவீதம் வரை, வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், போதிய பயிற்சி அளிக்க, திருப்பூர், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது.நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர். சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது.

எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி கூறுகையில்,"வாசிப்பு திறன் குறைந்த மாணவர்களுக்கு, பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையான ஈடுபாட்டுடனும், மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையோடும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

1 comment:

  1. ASIRIIYARGAL PADAVELAYIL SIRAPPAGA KARPIKKATHE POTHU MAALAI NERA VAGUPPU THEVAIYA? MAALAI NERA KALAIPPIL MAANAVARUM AASIRIYARUM THOONGATTHAAN SEIVER.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி