அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது . எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி  இருட்டில்,துன்பத்தில்,அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த இந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் ,சாதிகள் எப்படி தோன்றின ,சாதியம் எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது

என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை .

எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக வரிக்கு வரி அவர் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும்ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது . வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல, பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்தார் அண்ணல்.

எப்படி கல்விக்கூடங்கள்,அரசின் கவுன்சில்கள்,வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது அட
போடுவீர்கள் நீங்கள் பலருக்கு தெரியாத தகவல் இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின்
வழிகாட்டுதலில் தான் .காந்தி தேசத்தின் விடுதலைக்கு பின் சமூகம் சார்ந்த விடுதலையை முன்னெடுப்பதை பார்ப்போம் என்ற பொழுது அவரோடு எண்ணற்ற உரையாடல்கள் நிகழ்த்திய அண்ணலின் பொறுமையை நாம் கற்க வேண்டும் .பூனா ஒப்பந்தத்தை காந்தி தன் உண்ணாநோன்பின் மூலம் மாற்ற முயன்ற பொழுது துயரத்தோடு விட்டு கொடுத்த அண்ணலின் கருணை பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாதது .

அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல்,புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர் .

இந்திய அரசியல் சட்டத்தை உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும்.அதற்கு பின்னும் ஒரு முன்கதை உண்டு .இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது அதில் அண்ணலின் பெயர் இல்லை ;"எங்கே அம்பேத்கர் அவர்களின் பெயர் ?"என காந்தி கண்களை குறுக்கி கேட்டார் .நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார் .

கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால் சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார் .அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கபெற்றது .அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும் .அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான் இந்த நாட்டை செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை .இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்திருப்பதற்கு அண்ணலின்
தொலைநோக்கு முக்கிய காரணம் .

பொதுவான இந்து சிவில் சட்டத்தை கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின .நேருஒத்துழைக்க வில்லை என எண்ணி அண்ணல் பதவி விலகினார் .அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார் அண்ணலிடம் இருந்து படிக்கவேண்டிய மிகமுக்கிய பாடம் உண்டு .எதையும் அறிவுப்பூர்வமாக அவர் கையாண்டார் .வெறுப்பால் எதையும் கட்டமைக்கவில்லை
அவர் .அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது .மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்தில் சிந்தனையில் தெரியும் .சமூக விடுதலைக்காக ஏன் இந்த நாட்டின் இயக்கத்துக்கான விதை
போட்ட அண்ணலை நினைவு கூர்வோம்.

பூ.கொ.சரவணன்.

அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?


எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
– டாக்டர் அம்பேத்கர்.

”அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான்இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள். அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?.

ஆனால் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். முன்பே சொன்னதுபோல் காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, வரலாறு குறித்த புதிய பார்வைகளை உருவாக்கியது மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.

அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார். ''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.

“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார். இத்தகைய இழிநிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

''மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள்” என்றார்.

எனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். ஆனால் அதே சமகாலத்தில் வாழ்ந்த காந்தி என்ற இன்னொரு ஆளுமையை எதிர்க்க வேண்டிய வரலாற்று அவசியம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் நிறைவேறியது. அதற்குப் பிறகு இறுதிவரை அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். காந்தி மிகப்பெரிய புனித பிம்பமாக நிலைத்து நின்ற காலத்தில் அம்பேத்கர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏனென்றால் அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால், ''அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்”

தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப்படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது.

பெண்களும் இப்படித்தான். “ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்” என்பதைப் பெரும்பாலான பெண்களே ஒப்புக்கொள்வதில்லை. இந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது. அம்பேத்கரும் பதவி விலகினார். பதவி விலகியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

அம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.

அம்பேத்கரை நினைவு கூர்வது என்பது நம் மனசாட்சியை நாமே பரிசீலிப்பதுதான்.

- சுகுணாதிவாகர்11 comments:

 1. வணக்கம் தலைவா!!!

  ReplyDelete
 2. sri only for u

  உங்கள் பதிவால் நான் உண்மையில் மிகப் பெரிய மகிழ்சி அடைகிறேன்

  மிக்க நன்றி

  எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்

  இவ்வாறு பொது சிந்தனை உங்களுக்கு ஏற்பட காரணமான உங்கள் தாய் தந்தையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  உங்கள் தாய் தந்தையின் முழு ஆசிர்வாதம் உங்களுக்கு முழுதாய் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  மிக்க நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தெரிந்த தகவல்களை சமூகத்தில் புறம் தள்ளப்பட்ட உங்கள் இன நண்பர்களுக்காக பதிவிடுகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள் நண்பரே தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்

   Delete
 3. Thalaivaa neengal saarntha samuthaayam innum than urimaikaaga poradi varugirathu.

  ReplyDelete
  Replies
  1. நீங்க என்ன ஏலியனோ?

   Delete
  2. Aamam yelian than .iya sema comedy.

   Delete
 4. அண்ணலே ! கஷ்டங்கள் பல கடந்தாய் அன்று .... காலம் உன் பெயர் சொல்கிறது இந்திய நாட்டின் சட்ட மாமேதை என்று............................................. தாழ்த்தபட்ட மக்களின் கடவுளுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலி ....

  ReplyDelete
 5. Arivu kadal, satta methai, porulathara nibunar, sirantha porali, opattra thalaivan ivarukku en idhayam kanintha anjali

  ReplyDelete
 6. Ealai makkalin kadavulae ningal ellaie enral enru neethi erukathu ulagin miga sirantha sinthanaiyalarae arivaligalin arivaaliyae vetri veangaiyae yarugum anjamal ealaie makkalin vaalvirgu poradiya maa maethayae ningal mattumae nithiyin thalaievan

  DR.AMBEDKAR onrum jathi thalaivar alla india naadil pirantha ulagathalaivar...
  neethikaka poradum thalaievar.....eppadi oru thalaievar pirakkavillai enral enru elai makkal vaala mutiyathu....ambedkar avargal mattumae gandigu nigaraga potrapatupavar

  DR.AMBEDKAR thalith enathil pirantha orae karanathirkaka entha maa maethayin unmayana varalarum pala sathanaigalyum MARAIKKA PADUKINRANA evar mattum thalithi pirakkamal vaeroru enathil piranthu erunthal gandiyaie vita melaga potri erupar....evar kel jathigu mattum poradavillaie PENGAL,KULANTHAIGAL,MUTHIYAVARGAL ena anaievarin urimaiekaka poradiya maga arivu jievi  Vaalga thalaivarin varalaru......  ENTHA VARIGALAI PATHINTHA NANPARGAL MATRUM KALVISETHI GUM EN MANAMARNTHA KOTANA KODI NANRIGAL..........VAALGA AMBEDKARIN VEERA VARALARU

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி