வருவாய்த் துறையில் சம்பளம் குறைவு, வேலை அதிகம் என்பதால் அங்கு பணியாற்றும் உதவியாளர்கள் வேறு அரசு வேலைக்கு முயற்சிக்கும் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
அரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த் துறை. சாதி, வருமான, இருப்பிடச் சான்றுகள், ரேஷன் கார்டு, வாரிசுதாரர் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் என அனைத்துக்கும் பொதுமக்கள் சார்ந்திருப்பது வருவாய்த் துறையைத்தான்.
இத்துறையில் வருவாய் உதவியாளர் பணி என்பது முக்கியமானது. இவர்கள் இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து பதவி உயர்வு மூலமாகவும், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வெழுதி நேரடியாக வும் இப்பணிக்கு வருகின்றனர். இவர்கள் பின்னர் துறைத் தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ), துணை தாசில்தார், தாசில்தார், கோட்டாட்சியர் (ஆர்டிஓ) என பதவி உயர்வு பெறலாம். குரூப்-2 தேர்வில் வெற்றி பெறும் பலரும், வருவாய்த் துறைக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தைப் பார்த்து, வருவாய் உதவியாளர் பணியைத் தேர்வு செய்கின்றனர்.பட்டப் படிப்பு தகுதியுடைய இந்த பணிக்கு சம்பளம் ரூ.17 ஆயிரம். அதேநேரத்தில் இதே கல்வித்தகுதி உடைய சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவிஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ.28 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது.
வருவாய் உதவியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800. ஆனால், குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று இதர பணிகளில் சேருபவர்கள் ஆரம்பத்திலேயே பெறும் அடிப்படைச் சம்பளம் ரூ.9,300. வருவாய் உதவியாளர்கள் படிப்படியாக துறைத் தேர்வு எழுதி ஏழெட்டு ஆண்டுகள் கழித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு வந்தால்தான் இந்த அடிப்படைச் சம்பளம் கிடைக்கும். அது மட்டுமின்றி, தொடக்கத்தில் தாலுகா அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் வருவாய் உதவியாளர்கள் பெரும்பாலும் வாரத்தில் 7 நாட்களும் பணியாற்ற வேண்டியுள்ளது. வேலையும் அதிகம் இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் இளம் வருவாய் உதவியாளர்கள் பணியில் சேர்ந்த ஒருசிலமாதங்களிலேயே வேறு அரசு வேலைக்கு முயற்சி செய்யத் தொடங்கிவிடுகின்றனர். மீண்டும் குரூப்-2 தேர்வு எழுதி அதிக சம்பளம் உள்ள மற்ற பணிகளில் சேரும்போக்கு வருவாய் உதவியாளர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளில் குரூப்-2 தேர்வு காலியிடங்களில் வருவாய் உதவியாளர் பணியிடங்கள்தான் அதிகம். விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-2தேர்வில்கூட 600-க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் தனலிங்கம் கூறும்போது, ‘‘வணிகவரி, பதிவுத்துறை உள்ளிட்ட இதர துறை சார்நிலைப் பணிகளைப் போல, வருவாய் உதவியாளர் பணிக்கான அடிப்படை சம்பளத்தையும் ரூ.9,300 ஆக உயர்த்தவேண்டும். அதேபோல, 5 ஆண்டு சிறப்புப் பயிற்சியை உரிய காலத்துக்குள் முடிக்கும் வகையில் அரசு முறைப்படுத்த வேண்டும். வருவாய்த் துறையில் வேலை அதிகம்தான். இருப்பினும் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினாலே ஊழியர்கள் உற்சாகமாக பணி செய்வார்கள்’’ என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி