GST வரிவிதிப்பு நன்மையா?தீமையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

GST வரிவிதிப்பு நன்மையா?தீமையா?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான மசோதா கடந்த டிசம்பர் 19-ம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் இந்த மசோதாவை வரும் மார்ச் 2016-க்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா
எப்படிப்பட்டது, இந்த மசோதாவைக் கொண்டுவருவதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், இதனால் தொழில் துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன லாபம் கிடைக்கும், இந்தியாவின் ஜிடிபியில் இந்த மசோதா என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்த கேள்விகளுக் கான பதிலைப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி என்றால்..?
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு என்பது புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் சிக்கலானது. தற்போது ஒரு பொருளையோ அல்லது சேவையையோ தயாரித்து விற்கும்போது, அதற்கு கலால் வரி, சேவை வரி, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல நுழைவு வரி, மாநில அரசுக்கு கட்டவேண்டிய வாட் வரி என பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரே பொருளுக்கு பல இடங்களில் பலவகையான வரிகளைக் கட்டுவது சிரமம் தரும் விஷயமாகவே இருந்து வருகிறது. இப்படி பல இடங்களில் வரி கட்டுவதைவிட, இந்த அனைத்து வரிகளையும் ஒன்று சேர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்துவதுதான் ஜிஎஸ்டி.
நாடாளுமன்ற ஒப்புதலுக்குப்பின் நடைமுறைக்கு வரத் தயாராக இருக்கும் இந்த ஜிஎஸ்டி குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வரி ஆலோசகரான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். இதுகுறித்து தெளிவாக எடுத்துச் சொன்னார்.
‘‘சரக்கு மற்றும் சேவை வரி என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த வரி என்றுதான் சொல்ல வேண்டும். இதனைச் செலுத்துவதன் மூலம் பொருள் அல்லது சேவையைத் தரும் நிறுவனத்தின் செலவு கணிசமாகக் குறையும். தனித்தனியாக அனைத்து வரிகளையும் கட்டும்போது  ஒவ்வொரு வரியும் மாறுபட்டு இருப்பதால், சரக்கு மற்றும் சேவைகளின் விலை அதிகமாக உள்ளது. ஆனால், ஜிஎஸ்டியை அமல்படுத்தும் போது ஒருங்கிணைக்கப்பட்ட வரி என்பதால், ஒரே மாதிரியான வரியை அனைவரும் கட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகும். இதனால் பொருட்களின் விலை குறையும்.
உதாரணமாக, ஒருவர் 1000 ரூபாய் மதிப்புள்ள பொருளைத் தயாரித்து, அதில் ஜிஎஸ்டியை சேர்த்து 1,200 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதனை வாங்கும் டீலர், ஜிஎஸ்டியைத் தவிர்த்து வாங்கிய விலைக்கும்  விற்ற விலைக்கும் இருக்கும் வித்தியாசத்துக்கு மட்டும் வரிச் செலுத்தினால் போதும் என்பதே ஜிஎஸ்டி வரி விதிப்பின்  சிறப்பாகும்.
இந்த வரி விதிப்புக்கு ஏறக்குறைய அனைவருமே ஆதரவைத்தான் தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு, தொழிற்துறையினர், பொதுமக்கள் என அனைவருமே ஆதரவைத் தெரிவிப்பதால், இது அமலுக்கு வருவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்ரல் 1, 2016-ல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்ய இதுவே சரியான தருணம். இதற்கு நான்கில் மூன்று பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலும், 50% சட்டமன்றங்களின் ஆதரவும் அவசியம். அப்படி நடக்கும்பட்சத்தில் இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வரும்.
யாருக்கு என்ன நன்மை?
1. மத்திய/மாநில அரசு:
மத்திய அரசுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து மட்டும் வந்த வரி என்பது தற்போது உற்பத்தி யாளர் துவங்கி டீலர், மொத்த விற்பனையாளர், அந்தப் பொருளை கடையில் விற்கும் சிறு கடைக்காரர் வரை அனைவரிடமிருந்தும் வரி கிடைக்கும். இதனால் மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும். ஒரு சில துறைகள் தவிர அனைத்துத் துறைகளுக்கும் இது பொருந்தும் என்பதால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு அதிக அளவில் இருக்கும்.
மாநில அரசுகளைப் பொறுத்தமட்டில், இதுவரை சரக்குகளுக்கான வரியை மட்டுமே வருமானமாக கொண்டிருந்தன. ஜிஎஸ்டி மூலம் சரக்கு மற்றும் சேவை இரண்டுக்குமே மாநில அரசுக்கு வரி மூலம் வருவாய் கிடைக்கும். இதில் சிலர், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கின்றனர். அது தவறான கருத்து. தவிர, ஆல்கஹால் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு இன்னமும் மாநில அரசிடம் தான் உள்ளது. அதனால் மாநில அரசுக்கு எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்கு மற்றும் சேவை வரி) மூலம் வருவாய் அதிகரிக்கும்.
2. தொழிற்துறை:
தொழில்துறையினர் நீண்ட காலமாகவே இதனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தொழில் துறையினரைப் பொறுத்தமட்டில், இந்த வரி விதிப்பு என்பது அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடியதாகவே இருக்கும். நிறைய வரிகளுக்காக தனித்தனியே அதிக தொகையை வரியாகச் செலுத்த வேண்டிய சூழலில் இருந்து ஒரே வரியாகச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளதை நிச்சயம் வரவேற்பார்கள்.
இதனை ஒருங்கிணைப்பதில் குழப்பங்கள் இருந்தாலும், அதனை சரியாக ஒருங்கிணைத்து வரி விதிப்பை அறிமுகம் செய்யும்போது அவர்களது உற்பத்தித் துவங்கி அனைத்து நிலை களிலும் செலவுகள் குறையும். செலவுகள் குறையும்போது அந்தப் பணம் திரும்பவும் தொழிலில் முதலீடாக மாறுவதற்கு வாய்ப்பிருப் பதால், அவர்களது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அப்போது உற்பத்தி அதிகரித்து பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் சூழல் உருவாகும்.
3. பொதுமக்கள்:
இந்த வரி விதிப்பின் மூலம் நிறுவனங்களின் செலவு குறைவதால், அவர்கள் குறைந்த விலை யில்தான் பொருட்களை விற்பார்கள். அதற்கான வரியும் குறைவாகவே இருக்கும். எனவே, பொதுமக்களும் குறைந்த விலையில் அந்தப் பொருளை வாங்க முடியும். இதனால் பொருட்களை வாங்குபவரது எண்ணிக்கை அதிகமாகும்.
4.ஜிடிபி:
இந்த ஜிஎஸ்டி மூலம் பெரும்பாலானோரை வரி கட்டவைக்க முடியும். வரி ஏய்ப்பு செய்வது குறையும். வரி மூலம் வரும் வருவாய் கணிசமான அளவு உயரும். இதனை அறிமுகம் செய்தால், ஜிடிபியில் 2 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று கூறாவிட் டாலும் தற்போது உள்ளதைவிட நல்ல வளர்ச்சி இருக்கும் என்று கூறலாம்.
தற்போதுள்ள நிலவரப்படி, மத்திய, மாநில ஜிஎஸ்டி சேர்த்து 27 சதவிகிதமாக இதனை நிர்ணயிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை, மத்திய, மாநில ஜிஎஸ்டியை சேர்த்து 12 – 14 சதவிகிதம் வரி விதிப்பு என்பது சிறந்த விகிதமாக இருக்கும். தற்போதுள்ள மத்திய அரசின் 12%, மாநில அரசின் 14.5% ஆகிவற்றை சேர்த்து 27 சதவிகிதம் என்று வரி விதிக்காமல் மொத்த வருவாயைப் பொறுத்து 12-14 சதவிகிதமாக விதித்தாலே தற்போது உள்ளதைவிட அதிக வருவாயை அரசு ஈட்ட முடியும்.
சிறிய கடைக்காரர்களுக்குப் பாதிப்பா?
ஜிஎஸ்டி வரிவிதிப்பு சிறிய கடைக்காரர்களைப் பாதிக்குமா எனில், இல்லை என்றுதான் கூற வேண்டும். அவர்கள் பாதிப்பாக நினைப்பது செலவைதான். இதுவரை அமைப்பற்ற முறையில் தங்களது கணக்குகளை வைத்திருப்பவர்கள், கணினி உட்பட்ட அமைப்புகள், இந்தக் கணக்குகளை சரிபார்க்க ஒருவர் என நியமிப்பதால் செலவு சிறிது அதிகமாகலாமே தவிர, இதனால் எந்த பாதிப்பும் வராது. அரசு இன்னும் எந்த அளவில் வரம்பை நிர்ணயிக்கும் என தெரியாததால், சிறிய கடைக்காரர்கள் கவலைப்பட தேவை இல்லை’’ என பல விஷயங்களைத் தெளிவாகச் சொல்லி முடித்தார் வரி ஆலோசகர் வைத்தீஸ்வரன்.
ஒற்றை வரி விதிப்பு முறையாக வரவிருக்கும் ஜிஎஸ்டி வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், இதிலும் வரி ஏய்ப்பு இல்லாமல் சரியான விகிதத்தில் அமலுக்கு வரும்போது ஜிஎஸ்டி அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை!


7 comments:

  1. Hi dear friends all of you, happy pongal. My Hearty wishes. Jan.14th. Today I am celebrating my birthday.

    ReplyDelete
    Replies
    1. WISH YOU HAPPY BIRTHDAY RED FIRE SIR.......... ABOVE 90 NALLATHU NADAKUM SIR.....

      Delete
    2. Many more happy returns of the day Mr Red Fire. Wish you all the same for Pongal too

      Delete
    3. Thank you Alex sir and Prabhakaran sir. Thank you very much.

      Delete
  2. Thank you Mr Suruli vel,
    Nice information. During VAT introduced by Central Government, the States apposed to accommodate same because of income for States will be shrunk and avoiding double decker tax for people. In one point of view GST is also one and same as VAT which reduces the people burden. Let us all welcome GST with pleasure

    ReplyDelete
    Replies
    1. The hearing of 10,323 terminated teachers will now held on 15 January in Supreme Court. This was informed by the standing counsel of the state government from New Delhi on Wednesday. Earlier, the date of hearing was fixed on 9th January.

      The Supreme Court on December last stayed a Tripura High Court order to terminate the jobs of 10,323 government teachers and allowed them to continue beyond Dec 31 and until the final disposal of the case.

      A division bench of the high court, comprising Chief Justice Deepak Gupta and Justice Swapan Chandra Das, passed an order May 7 terminating the jobs of 10,323 school teachers after Dec 31, citing irregularities in recruitment.The Supreme Court would hear Jan 9 the three separate Special Leave Petitions (SLPs) filed against the high court judgment ordering the termination of the jobs.

      The SLPs were filed by the Tripura government and the teachers affected by the high court order.

      The high court also asked the state government to start a fresh recruitment process by December 2014 and frame a new employment policy within two months.

      Delete
    2. Thank you Mr Gopi. Please update as soon as get the information.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி