தமிழக அரசின் நிதி நிலைமை
பெரும் கவலைக்குரியதாகவும் அதன் கடன் சுமை
பற்றிய விவரங்களோ அதிர்ச்சிக்குரியதாகவும் உள்ளன. தற்போதைய நிலையில்,
ரூ.1.80 லட்சம் கோடி கடனில்
மூழ்கிக் கிடக்கிறது தமிழக அரசு. நிதிநிலை
அறிக்கையில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கினால் ரூ.2
லட்சம் கோடியை எட்டும். இது,
அரசு வாங்கிய கடன் தொகை
மட்டுமே.. மின்சார வாரியம் உள்ளிட்ட
பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களை எல்லாம்
சேர்த்தால் மொத்த கடன் ரூ.4
லட்சம் கோடியைத் தாண்டிவிடும்.
சாதாரணமாக
ஒரு குடும்பம் கடன் வாங்கி வாழ்க்கையை
நகர்த்தும்போது ஓர் அரசாங்கம் கடன்
வாங்குவதில் என்ன பிரச்னை என்ற
கேள்வி எழலாம். சாமானிய மக்கள்,
கடனை அடைப்பதற்கு வருவாயைத் தேடுகிறார்கள். ஆனால் தமிழக அரசு
கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளை தேடுவதில்லை என்பதுதான் பிரச்னை. கடனை திருப்பிச் செலுத்தும்
ஆட்சித் திறன் இல்லை என்பது
அரசின் மீது பொருளாதார நிபுணர்கள்
வைக்கும் குற்றச்சாட்டு.
‘ஒரு மாநில அரசு, மாநிலத்தின்
மொத்த உற்பத்தி
மதிப்பில்
(GSDP) ஆண்டுக்கு மூன்று சதவிகிதத்துக்கு மேல்
கடன் வாங்க முடியாது. அதே
சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக
25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது’ என்கிறது
நிதி வருவாய் தொடர்பான சட்டம்..
அதன்படி பார்த்தால், தமிழக அரசு இன்னும்
அதிகமாக கடன் வாங்கும் தகுதியைப்
பெறுகிறது. இப்படி தொடர்ந்து கடனை
வாங்கிக்கொண்டே போனால் தமிழக அரசு திவாலாகிவிடாது
என்றாலும்கூட, அது பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். அதனால்
மிக மோசமானதொரு நிலைமையை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
‘தமிழ்நாடு
தொலைநோக்குத் திட்டம் – 2023’ என்ற ஆவண வெளியீட்டு
விழாவில் பேசிய ஜெயலலிதா, ”அமெரிக்கா
குறித்து மார்ட்டின் லூதர் கிங்குக்கு பெரும்
கனவு ஒன்று உண்டு. அதைப்போல
சிறந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கும்
உண்டு. வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலை,
முற்றிலுமாக வறுமை ஒழிப்பு, கல்வி,
குடிநீர், துப்புரவு ஆகியவற்றுடன் பாதுகாப்பு, வளம், அமைதி ஆகியவற்றை
மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது
எனது லட்சியமாகும். வரும் நூற்றாண்டில் தமிழகம்
முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என்று
நான் கனவு காண்கிறேன். தலைவர்கள்
தாங்கள் காணும் கனவுகளை நனவாக்கும்
திறன் பெற்றிருக்க வேண்டும். எங்கு தொலைநோக்கு பார்வை
இல்லையோ அங்கு நம்பிக்கைக்கு இடமில்லை”
என்று தன்னம்பிக்கையோடு பேசினார்..
ஆனால்,
இன்றைய நிலை என்ன? ஜெயலலிதா
மட்டுமல்ல, அவருடைய கனவும் இப்போது
முடங்கிப் போய் கிடக்கிறது. கவலைக்கிடமாக
இருக்கும் அரசின் நிதிநிலையால் தொழில்துறை
அதளபாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. நிதியோடு தொடர்புடைய
தொழில்துறை, நிதி இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை
ரூ.25,714.32 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இது, அடுத்த நிதியாண்டில் ரூ.28,578.77
கோடியாகவும் அதற்கு அடுத்த 20162017 நிதியாண்டில்
ரூ.31,879.45 கோடியாகவும் உயரப்போகிறது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க
கடன் வாங்குவதைத் தவிர தமிழக அரசுக்கு
வேறு வழியில்லை.
‘’தமிழகத்தில்
அடுத்த 11 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை
எடுக்கப்படும். குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். தனி நபர் வருமானம்
6 மடங்கு உயர்த்தப்படும். ஏற்றத் தாழ்வற்ற, வறுமையற்ற
சமுதாயத்தை அமைப்போம்..உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சாலைகள்,
உலகத்தரம் வாய்ந்த நகரங்கள், தங்குத்தடையற்ற
மின்சாரம் ஆகியவற்றை கிடைக்கச் செய்வது எமது லட்சியம்’
என்பதெல்லாம் ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் – 2023’-ல் சொல்லப்பட்ட லட்சியங்கள்.
அவை எல்லாம் புஸ்வானம்தான்போல… காரணம்
தமிழக அரசின் கடன் சுமை.
இந்தியாவில்
தொழில் வளர்ச்சி அதிகமுள்ள மாநிலங்கள் என்று பட்டியலிட்டால், முதல்
5 இடங்களில் தமிழகம் இடம்பெற்றுவிடும். ஆனால்,
2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த
பிறகு, நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த
மூன்று ஆண்டுகளில், தொழில் துறையில் முன்னேறிய
மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு
இருக்கிறது தமிழகம்.
கவலைக்குரிய
இந்த நிலைக்கு பல காரணங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்கள்
தொழில் துறை வல்லுநர்கள். தொழில்
வளர்ச்சியில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கான
முக்கியக் காரணங்களில் மின்வெட்டு முக்கியமானது என்கிறார்கள்.
‘தமிழக
முதல்வர் மற்றும் அரசாங்கத்தில் முக்கிய
முடிவுகளை எடுப்பவர்களை தொழில் துறையினரால் எளிதில்
சந்திக்க முடியவில்லை’ என்பது மிகப்பெரிய புகாராக
உள்ளது. 2012 – 2013-ம் ஆண்டிற்கான நாட்டின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் மாநிலங்கள் வாரியான
வளர்ச்சி ஆகியவை தொடர்பான புள்ளிவிவரங்களை,
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், 18 மாநிலங்களின் தொழில் உற்பத்தி வளர்ச்சி
தொடர்பான பட்டியல் இடம்பெற்றது. அதில், தமிழகத்துக்குக் கிடைத்து
இருப்பது கட்டக்கடைசியான 18வது இடம்.
இந்த நிலைக்கு என்ன காரணம்? தமிழகத்தின்
தொழில் துறை வளர்ச்சி மற்றும்
அதன் பிரச்னைகள் என்ன என்பது குறித்து
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அளவியல் துறை இணைப்
பேராசிரியர் ஆர்.சீனுவாசனிடம் பேசினோம்.
‘தொழில்
துறையில் தமிழகத்தின் தற்போதைய நிலையை பொருளாதாரத் துறை
பேராசிரியர் என்ற முறையில் எப்படி
பார்க்கிறீர்கள்?’
‘கடந்த
மூன்று ஆண்டு கால நிலைமையைப்
பார்க்கும்போது, தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியில் சற்று
சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. தேசிய தொழில் உற்பத்தியில்
தமிழகத்தின் பங்கு சற்று குறையத்
தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக தொழில் வளர்ச்சியில் முன்னேறி
வரும் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில்,
அந்த மாநிலத்துக்கும் தமிழ்நாட்டுக்குமான இடைவெளி அதிகரிப்பது தெரிகிறது.
இதனை உடனடியாக சரிசெய்தாக வேண்டும். மின்சாரம், சாலை கட்டமைப்பு போன்றவற்றில்
அலட்சியம் காட்டக் கூடாது. மூன்று
பெரிய துறைமுகங்களைக் கொண்ட தமிழகம், நீண்டகாலமாக
பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் பெரிய
தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுத்த மாநிலம். தமிழகம் அளவுக்கு தொழில்
துறையில் பாரம்பர்யம் இல்லாத குஜராத்தைவிட, தமிழகம்
பின்தங்குவது நம்முடைய மெத்தனப் போக்கையே காட்டுகிறது.’
”குஜராத்தைவிட
பல அம்சங்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறதே?’
‘கல்வியறிவு
விஷயத்தில் தமிழகத்தைக் காட்டிலும் பின்தங்கிய நிலையிலேயே குஜராத் உள்ளது. தமிழகத்துடன்
ஒப்பிடுகையில், படித்த தொழிலாளர்களின் எண்ணிக்கை
அங்கு குறைவு. தொழில் துறையில் முன்னேறிய
குஜராத் போன்ற மாநிலங்களைக் காட்டிலும்
சாதகமான பல அம்சங்கள் தமிழகத்துக்கு
இருந்தபோதிலும், தொழில் வளர்ச்சியில் குஜராத்தை
தமிழகத்தால் ஏனோ மிஞ்ச முடியவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பொறியாளர்களை
உற்பத்தி செய்தபோதிலும் தமிழகத்தால் தொழில் துறையில் ஏன்
முன்னேற முடியவில்லை? கடந்த ஐந்து வருடங்களாகப்
பார்த்தால், தமிழகத்துக்கு அருகில் உள்ள ஆந்திராவும்
தொழில் துறையில் தீவிர ஆர்வம் காட்டுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் ஆந்திர எல்லையில்
ஸ்ரீசிட்டி என்கிற பெயரில் தொழில்
நகரம் ஒன்றை ஆந்திர அரசு
வளர்த்து வருகிறது. அங்கிருந்து மூன்று மணி நேரத்தில்
சென்னையை அடைந்துவிட முடியும். துறைமுகம், விமான நிலையம் போன்ற
வசதிகள் சென்னையில் உள்ளன. ஆனாலும், இங்கு
கால் வைப்பதற்கு தொழில் அதிபர்கள் ஆர்வம்
காட்டவில்லை. தொழில் சலுகைகளைப் பெறுவதற்காக
சிட்டிக்குத்தான் ஆர்வத்துடன் செல்கிறார்கள். ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு வந்த பிறகு
சென்னை, எண்ணூர் துறைமுகங்களுக்குப் போட்டியாக
அங்கே ஒரு துறைமுகத்தைக் கொண்டுவரும்
திட்டத்தில் இருக்கிறார். அது வந்துவிட்டால், தமிழகத்தில்
தொழில் தொடங்க வரும் தொழில்
அதிபர்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்துவிடும்.’
‘இது தவிர வேறு பிரச்னைகள்
என்ன?’
”சென்னை
துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி அளவு முந்தைய ஆண்டுகளைவிட
கடந்த ஆண்டு திடீரென குறைந்துவிட்டதாக
துறைமுகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், தமிழகத்தில் உற்பத்தி குறைந்துவிட்டதாக தெரிகிறது. ஹுண்டாய் போன்ற முக்கிய நிறுவனங்கள்
உற்பத்தி செய்கிற பொருட்களை விரைவாக
கொண்டு செல்வதற்கு வசதியாக, மதுரவாயல் துறைமுகம் இடையே உயர்மட்ட பறக்கும்
சாலை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏனோ
அது பாதியில் நின்றுவிட்டது. இந்த மாதிரியான கட்டமைப்பு
பிரச்னைகளை தீர்த்தால்தானே, தொழில் முனைவோர் இங்கே
வருவார்கள்? அதேபோல், சென்னை பெங்களூரு இடையே ஆறு வழிச்சாலை
அமைத்தனர். தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள தொழில் முனைவோரை
கவர்வதுதான் அதன் நோக்கம். ஆனால்,
கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தின்
மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி
ஆகிய மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அது மட்டுமல்ல, திருவண்ணாமலை போன்ற சில மாவட்டங்களைச்
சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து கர்நாடகாவை
ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் குடியேறி இருக்கிறார்கள். அவர்கள், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளுக்குத் தினமும் வேலைக்குச் சென்று
வருகிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில்
தொழிற்சாலைகள் தொடங்குபவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் பயங்கரமானவை. தொழிற்சாலைகள் தொடர்பான விவகாரங்கள், தொழிலாளர் இடையேயான பிரச்னைகள், இவற்றில் உள்ளூர் ரௌடிகள் மற்றும்
கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளின் தலையீடுகள் என பல பிரச்னைகள்
உள்ளன. தொழில் செய்கிறவர்கள் அவர்களிடம்
சிக்கி விழி பிதுங்குகிறார்கள்.

தமிழகத்தில்
குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே
தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது. தொழில்
வளர்ச்சி அனைத்துப் பகுதிகளிலும் ஏன் சீராக இல்லை?
தலைநகர்
சென்னை மற்றும் அதன் அருகில்
உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில்
அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் உள்ளன. அதைப்போல கோவை,
திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை,
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமான
தொழிற்சாலைகள் உள்ளன. திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும்
ஓரளவு இருக்கின்றன. புவியியல் ரீதியாக தமிழகத்தில் தொழிற்சாலைகள்
பரவாதது சரியல்ல. டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள்
இல்லை. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற சில பின்தங்கிய
மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இல்லை. இதுமாதிரியான புவியியல்
ரீதியான ஏற்றத்தாழ்வுதான் எதிர்காலத்தில் பெரிய பிரச்னைகளை உருவாக்கும்.
உதாரணமாக, தெலங்கானா பிரச்னை. ராயலசீமா, தெலங்கானா வறண்ட பூமி. ஆந்திரப்
பிரதேச பகுதிகள் செழிப்பானவை. இந்த ஏற்றத்தாழ்வுதான் மக்களை
கொந்தளிக்க வைத்தன. வட மாவட்டங்களில்
பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை.
விவசாயமும் இல்லை. அதனால், மக்கள் மத்தியில்
முன்னேற்றம் இல்லை. இதே பிரச்னை
தான் தென் மாவட்டங்களிலும். தொழிற்சாலை
பரவலாக்கலை கொண்டுவராவிட்டால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய
அரசியல் பிரச்னையாக மாறலாம். அந்தந்தப் பகுதி மக்களின் உணர்வுகளைப்
புரிந்துகொண்டு தமிழக அரசுதான் தொழிற்சாலைகளை
பரவலாக்க வேண்டும்’ என்று முடித்தார் பேராசிரியர்
சீனுவாசன்.
தொழில்
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி
என்பதையும் தாண்டி, சமூக அமைதி,
நல்லிணக்கம் ஆகியவற்றோடும் தொடர்புடையது. தென் மாவட்டங்களில் தொழில்
வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படாததற்கும் அங்கு அவ்வப்போது
சாதிக்கலவரங்கள் போன்ற பிரச்னைகள் தலைதூக்குவதற்கும்
சம்பந்தம் இருப்பதாக பல அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நன்றி-விகடன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி