திருவள்ளுவர் பல்கலை. ஆசிரியர்கள் நியமனம்: யுஜிசி எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

திருவள்ளுவர் பல்கலை. ஆசிரியர்கள் நியமனம்: யுஜிசி எச்சரிக்கை


திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் விதிமுறைகளின்படிஉதவிப்பேராசிரியர்களை நியமிக்கவில்லையெனில் பின் விளைவுகள் தொடரும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்தது.
வேலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஐ.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:கல்லூரிகளில் ஆசிரியர், உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கென கல்வித் தகுதிகளை நிர்ணயித்து பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுத்துள்ளது.இந்த நிலையில். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது.

இதில், 25 சதவீதம் பேர்தான் யுஜிசி விதிகளில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி உடையவர்கள்.இதையடுத்து, யுஜிசி நிர்ணயித்த கல்வித் தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள், இரண்டு ஆண்டுக்குள் தங்களது கல்வித் தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும் என, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானம் சட்ட விரோதமானது. இதன் மூலம் கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிக்கப்படும். ஆட்சிமன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர்அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போதே உரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என யுஜிசி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அதை பின்பற்றாமல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என வாதாடினார். யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கல்லூரிகளில் நடைபெற்ற நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சென்னைக்குக் கொண்டு வர வேண்டி உள்ளது. இதன் பிறகு, நியமனங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். யுஜிசி விதிப்படி நியமனங்கள் நடைபெறவில்லையெனில் அதற்கான விளைவுகள் பின்தொடரும் என வாதாடினார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த மனுவை இந்தக் கட்டத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், உதவிப் பேராசிரியர் நியமனங்கள் பரிசீலனையை யுஜிசியும், பல்கலைக்கழகமும் விரைவுபடுத்த வேண்டியுள்ளது.யுஜிசி வேண்டுகோளின்படி ஆய்வு செய்வதற்கான ஆவணங்களை பல்கலைக்கழகம் விரைந்து கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும்என நாங்கள் நம்புகிறோம். 6 மாதங்களுக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க யுஜிசிமுயற்சிகளை மேற்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி