'திராவிடமா... தமிழ்த் தேசியமா...’ என்ற தலைப்பில் கடந்த 16-ம் தேதி சங்கம்4 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'திராவிடம்’ என்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், 'தமிழன்’ என்றும் வாதங்களை வைத்தார்கள். சிந்தனையைத் தூண்டும் அந்த விவாதத்தின் ஒரு பகுதி...
சுப.வீரபாண்டியன்: ''திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல். எப்படியாவது திராவிடத்தை வேரறுத்துவிட வேண்டும் என்று சில தமிழ்த் தேசிய நண்பர்கள் கருதுகிறார்கள். தமிழ்த் தேசிய உணர்வை எப்படியாவது இந்த மண்ணில் தழைக்கவைக்க வேண்டும் என்று திராவிட இயக்கத்தினர் கருதுகின்றனர். ஒருதலைக் காதலைப்போன்று இது ஒருதலை மோதல். 'திராவிடம்’ ஒரு சொல் அல்ல; கோட்பாடு. வரலாற்று நிகழ்வுகளின் அடையாளம் திராவிடம்.
அது, தமிழ் சமூகத்தின் மீது ஏற்றப்பட்ட ஆதிக்கத்தின் எதிர்ப்புச் சொல் என்பதை முதலில் சொல்லியவர் அயோத்திதாச பண்டிதர். தமிழர்களை அவர் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். 1913-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் மறைமலை அடிகள் எடுத்துக்கொண்ட தலைப்பு 'திராவிட நாகரிகம்’. பாவாணர் எழுதியிருக்கும் நூல் 'திராவிடத் தாய்’. ஆக, திராவிடத்துக்கும், தமிழுக்கும் எந்த முரண்பாடுகளும் இல்லை. சென்னை ராஜ்ஜியம் என்பதை சகித்துக்கொள்ள முடியாது. தமிழ்நாடு என்றுதான் பெயர் வைக்க வேண்டும், என்பதை முதலில் வலியுறுத்தியவர் பெரியார். அதன்பிறகு தான் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார். பெயர் மாற்றம் குறித்து மாநிலங்களவையில் அண்ணாவின் பேச்சு வரலாற்று சிறப்புமிக்கது. எங்கள் மண்ணுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். 'நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், எட்டாவது அட்டவணை ஏற்றுக்கொண்டிருக்கிற 16 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்’ என்றார் அண்ணா. அப்போது இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் முன்வைக்கப்பட்டதே தவிர, தமிழுக்கு மாற்றாக அல்ல. 67-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 'இருமொழித் திட்டம் எங்கள் நோக்கமில்லை. தமிழ் என்ற ஒரு மொழித் திட்டத்தை நோக்கி நடப்போம். ஐந்து ஆண்டுகளுக்குள் பயிற்று மொழி ஆட்சி மொழியாக தமிழ் வரவேண்டும்’ என்று அண்ணா சொன்னார். அதை கலைஞர் நடைமுறைப்படுத்தினார். 1970 நவம்பர் 30-ம் நாள் கல்லூரிகளில் தமிழே பயிற்று மொழி என்ற சட்டத்தை முன்மொழிந்தவர் கலைஞர். அதனை வழிமொழிந்தவர்
ம.பொ.சி. அதை ஆதரித்து விடுதலையில் எழுதியவர் பெரியார். 'கருணாநிதி கொண்டு வந்துள்ள திட்டத்தை நாடும் இளைஞர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். காமராஜர், கட்சி வேறுபாடு பார்க்காமல் இனத்தின் நலன் கருது இதனை ஏற்க வேண்டும்’ என்று பெரியார் எழுதினார். முனைவர் சிவத்தம்பி எழுதிய கட்டுரையில் திராவிட இயக்கத்தின் பெரும் பேருதான் தமிழ்த் தேசிய உணர்வு என்று எழுதி இருக்கிறார். தமிழுக்கும், திராவிடத்துக்கும் மோதல் வருவதால் எதிரிகளுக்குத்தான் நன்மை. அந்த எதிரிகள்தான் இந்த மோதலை உருவாக்கினார்கள். இந்தப் போலி மோதலை நிறுத்துவதுதான் எங்கள் நோக்கம்'' என்றார்.
பெ.மணியரசன்: ''இந்திய அரசு என்பது தமிழ் இனப்பகை அரசு. இந்தியாவிலிருந்து தமிழகம் விடுபட்டால்தான் தமிழ்த் தேசிய இனம் வாழும் என்பதை பகிரங்கமாக நாங்கள் சொல்வோம். எந்தத் திராவிட இயக்கமாவது அப்படிச் சொல்ல முடியுமா? தேர்தலில் நிற்காத திராவிட இயக்கமாவது சொன்னதா? திராவிடம் என்பது இனப் பெயரா, மொழிப் பெயரா, இடப் பெயரா? தி.க சொல்லும் திராவிடம் வேறு. தி.மு.க சொல்லும் திராவிடம் வேறு. 'நான் இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன். நாட்டால் இந்தியன்’ என்று சொல்கிறார் கலைஞர். இப்படி ஓர் இனக் கொள்கை சமூக அறிவியலில் எந்த விஞ்ஞானத்தில் இருக்கிறது?
காவிரி நீர் பறிபோய்விட்டது. பாலாற்றுக்கு வந்துகொண்டிருக்கும் தண்ணீரை அணைக் கட்டி தடுக்கிறார்கள். முல்லை பெரியாறு தீர்ப்பு வந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. தேனி மாவட்டத்துப் பெண்கள் கேரளாவில் துன்புறுத்தப்பட்டனர். அப்போதெல்லாம் இந்தத் திராவிடம் வேலை செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக திராவிடம் என்பதே கற்பனையாகிப் போன ஒன்று.
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்களே... அவர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளாவிலோ ஏன் போடவில்லை? தமிழின உணர்ச்சிக்கு உளவியல் ஊனத்தை உண்டாக்கியது திராவிட இயக்கம். அந்தக் கோட்பாட்டை வரைந்தவர் வேறுயாருமல்ல, பெரியார்.
தமிழ் இலக்கியத்தில் திராவிடம் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தமிழின மறுப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு இதுதான் பெரியாரிடம் நான் கண்டுபிடித்தது. 69ல் தமிழை விட்டொழித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்கிறார். தனது அரசியலுக்கு ஏற்ப எதிர்வினை ஆற்றக் கூடியவர் பெரியார். எனது தேசிய இனம், தேசிய மொழி தமிழ் மட்டுமே. இறையாண்மையுள்ள தமிழ்த் தேச குடியரசு அமைப்பது எமது இலக்கு'' என்று நிறைவு செய்தார்.
இந்த பழமையான வாதங்கள் மரத்தடி - திண்ணை வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு, காலத்தை வீண்டிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும். இப்போதுள்ள மணிதர்களின் இயந்திர வாழ்க்கைக்கு இது தேவையா எனபது கேள்விக்குறியே???
ReplyDeleteநன்றி திரு மணியரசன். இது வெட்டிப்பேச்சு அல்ல.. நாம் யார். நம் முன்னோர்களின் பன்பாட்டு நாகரீகம் என்ன ? வாழ்க்கை நெறி மற்றும் பேசிய மொழி என்ன என்பதை அறிய ஒவ்வொரு மனிதனும் விரும்புவது இயற்கையே ... வேறு யாராவது எதையாவது பதிவிட்டு விடுவதற்குள் இப் பதிவைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி விடலாம் என நினைப்பது முற்றிலும் தவறு.
ReplyDeleteதமிழ் மொழிக்காக வாழ்நாள் முழுவதும் வறுமையிலும் அயராது பாடுபட்ட .. 174 பட்டங்களுக்கு சொந்தக்காரர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அய்யா அவர்களை எத்தனை பேருக்கு தெரியும். மதத்தை கடந்து தமிழினத்தின் உண்மை வரலாற்றை உலகறியச் செய்தவர்.
ReplyDeleteDhevaneaya phavanar thountou valka
ReplyDeleteமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தமிழுக்கு ஆற்றிய பணி சிறப்பானது. "தமிழ் தேசியம் வாழ்க"
ReplyDelete