வருமான வரியை சேமிப்பது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

வருமான வரியை சேமிப்பது எப்படி?


வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில்
அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு.

80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)

இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.

2. ஆயுள் காப்பீடு

இதிலேயும் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

3. வீட்டுக்கடன் அசல்

நாம் வீட்டுக்கடன் வாங்குபோது மாதா மாதம் EMI கட்டவேண்டும். இதை இரண்டாக பிரிப்பார்கள் 1. அசல் 2. வட்டி. ஆரம்பத்தில் அசலை குறைவாக எடுப்பார்கள், வட்டி அதிகம் எடுக்கப்படும். ஒருவர் கட்டக்கூடிய அசலை இந்த வருமான வரி விலக்கில் காண்பிக்க முடியும்.

4. தேசிய சேமிப்புத் திட்டம் (NSC)

இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.

5. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பாதுகாப்பு அதிகம் விரும்புவர்கள் இதில் முதலீடு செய்வார்கள். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். 8.7% தற்போதைய வட்டி. ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது. இந்த கணக்கை தபால் நிலையம் மற்றும் வங்கியில் தொடரலாம்.

6. தபால் நிலைய வைப்பு நிதி

இதற்கு ஒருவர் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும், அத்துடன் 8.5% வட்டி கிடைக்கும், இதிலும் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். இது ஒரே ஒரு தடவை செய்யக்கூடிய முதலீடு.

7. முதியோர் சேமிப்பு திட்டம் (SENIOR CITIZEN SAVINGS SCHEME)

இதில் முதலீடு செய்பவர்களுக்கு வயது குறைந்தது 60 வருடம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 55 வருடம். ஒவ்வொரு காலாண்டும் வட்டி கிடைக்கும், வருடத்திற்கு 9.2% இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். வருமான வரி விலக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குதான். இதில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து ஆண்டு வரை எடுக்க முடியாது.

8. 5 வருட வங்கி டிபாசிட்

பாதுகாப்பு கருதுபவர்கள் ஐந்து வருடம் இதில் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒரு லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.

9. கல்விக் கட்டணம் (TUITION FEES)

ஒருவர் தன் குழந்தைக்கு செலவிடும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகும் கல்வி பயிற்றுக் கட்டணத்தை (டியூஷன் பீஸ்) இந்த பிரிவில் எடுத்துகொள்ளலாம். இது வருடா வருடம் வேறுபட வாய்ப்புள்ளது. நாம் செலவிடும் கல்விக் கட்டணம் எல்லாவற்றையும் இதில் காண்பிக்கமுடியும்.

10. முத்திரைத் தாள் பதிவு கட்டணம்

ஒருவர் நிலம்,வீடு வாங்கும்போது, இந்த செலவுகள் இன்றியமையாதவை. அதற்கு ஆகக்கூடிய செலவுகளான ஸ்டாம்ப் டூட்டி, பதிவு கட்டணம் ஆகியவற்றை இந்த 80c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கில் (1 லட்சம் வரை) காண்பிக்கமுடியும்.

11. மியூச்சுவல் ஃபண்ட் (ELSS)

இதில் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம்(லாக் இன் காலம்) குறைவு.

சாராம்சம்

மேலே சொன்ன 11 வகையான திட்டத்தில் அந்த ஒரு லட்ச ரூபாயை ஒரே திட்டத்திலோ, பல திட்டத்திலோ சேர்ந்து சேமிக்கலாம். வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் இதை திட்டமிட்டு சேமித்தால், நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும்.

இதில் சில நாம் செய்யக்கூடிய செலவுகளை காண்பிக்கவும், சில பிரிவுகள் மேலும் நாம் சேமிக்கவும் உதவுகிறது. அவ்வாறு சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். இதை ஒரு தொல்லையாக கருதாமல் நமக்கு சேமிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து செயல்படுவது நல்லது.

வேலைக்கு சேர்ந்தவுடன் பெரும்பாலோர் சொல்லும் சொல், எனக்கு வருமானம் போதவில்லை, அதுவே சில வருடங்களுக்கு பிறகு, என்னுடைய வருமானத்தில் பெரும் பங்கு வருமான வரியிலேயே போய் விடுகிறது என்கிறார்கள். இதைப்பற்றி நான் படித்த ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது, அது ஆங்கிலத்தில் சொல்வது எளிது, நான் தமிழிலும் முயற்சித்திருக்கிறேன்.

“A fine is a tax for doing wrong. A tax is a fine for doing well.”

நகைச்சுவையாக சொன்னால் "அபராதம் என்பது ஒருவர் செய்யும் தவறுக்கான வரி, அதே சமயம் வரி என்பது ஒருவர் நன்றாக செயல்பட்டால் அரசாங்கம் நமக்கு விதிக்கும் அபராதம்”


எப்படி பணம் சம்பாதிப்பது நம்முடைய கடமை என்று நினைக்கிறோமோ அதே மாதிரி சம்பாதித்த பணத்தை சரியாக சேமிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இதற்கு சோம்பல்பட்டு தேவையற்றவைகளை முதலீடு செய்து அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்தவித பிரோயோஜனமும் இல்லை. சேமிப்போம், நன்கு பயன் பெறுவோம்.

2 comments:

  1. Who is to pay e-filing charges?
    Whether shared by all teachers?
    Whether by the TAN number holder i.e. HM with official fund as Government offices

    ReplyDelete
  2. sir 80 c il 1.5lakhs varai varisalugai ullathu.1lakhs entru thavaraga kurippidapattulullathu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி