இடைநிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் :அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் :அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியம், சிறப்பு தரஊதியம் ஆகியவை வழங்கி கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அவர்களுக்கு வழங்கும் தேர்வு நிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவை பெறுவதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது.
நாங்கள் பணியில் சேர்ந்து, 10, 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.எனவே, எங்களுக்கும் அந்த சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஈஸ்வரன், நாகேஸ்வரி உள்பட 27 இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்து இதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு சலுகை ஊதியங்களை தங்களுக்கும் வழங்கக் கோரியும் 27 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் வி.தனபாலன், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, வாதாடினார்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 1993ம் ஆண்டு அரசாணையின் படி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்வுநிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகிய பயன்களை உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பெற உரிமை உள்ளது.இதை உயர் நீதிமன்ற அமர்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால், இது தொடர்பாக முன் தேதியிட்டு நிலுவைத் தொகையை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது. அது அரசின் நிதி நிலையைப் பொறுத்தது. அது குறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்.

அரசு இது போன்று கொள்கை முடிவெடுக்கும் போது, தகுதியான நபர்களுக்கும் வழங்கவேண்டும். அரசு தானாகவே அவ்வாறு செய்யவில்லையெனில், பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறுகின்றனர்.எனவே, 1993ம் ஆண்டு அரசாணையின் பயன்களை 10, 20 ஆண்டுகள் நிறைவு செய்த உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுநிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி