சிறந்த சிற்பக் கலை நகரமாகத் தேர்வு செய்ய 12-இல் யுனெஸ்கோ குழு மாமல்லபுரம் வருகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2015

சிறந்த சிற்பக் கலை நகரமாகத் தேர்வு செய்ய 12-இல் யுனெஸ்கோ குழு மாமல்லபுரம் வருகை

சிறந்த சிற்பக்கலை நகரமாக மாமல்லபுரத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக, யுனெஸ்கோ குழு வரும் 12-ஆம் தேதி வருகிறது.

பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள பஞ்ச பாண்டவ ரதம் எனப்படும் 5 ரதங்கள், பிடாரி ரதம், வலையன்குட்டை ரதங்கள் எனப்படும் 2 ரதங்கள், கணேச ரதம், தர்மராச மண்டபம்

மகிஷாசுர மர்த்தினி மண்டபம், வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், ராமானுஜ மண்டபம், திரிமூர்த்தி மண்டபம், கோடிக்கல் மண்டபம், கோனேரி மண்டபம், கட்டுமான கோயிலாக கடற்கரை கோயில் ஆகியன மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்குகின்றன.

இந்தச் சிற்பக்கலை அற்புதங்களை ரசிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-இல் யுனெஸ்கோ அறிவித்தது.

உலக அளவில் சிறந்த சிற்பக்கலை நகரங்களாக இந்தியா, சீனா, வங்கதேசம், குவைத் ஆகிய 4 நாடுகளில் உள்ள சிறந்த நகரங்களை யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக 4 நாடுகளில் உள்ள சிறந்த சிற்பக்கலை நகரங்களில் ஒன்றை யுனெஸ்கோ சிறந்த சிற்பக்கலை நகரமாக இறுதி செய்ய உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு கைவினைப் பொருள் மேம்பாட்டு நிறுவனத் தலைவரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் சந்தோஷ்பாபு ஒருங்கிணைப்பில் யுனெஸ்கோ குழு வரும் மார்ச் 12, 13-ஆம் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளது.

இதேபோன்ற ஆய்வு மற்ற நாடுகளிலும் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகுதான் மாமல்லபுரம் தேர்வு செய்யப்படுமா என்பது தெரியவரும்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது.

இதில் நகரம் முழுவதையும் சுத்தம் செய்வது, ஆக்ரமிப்புகளை அகற்றி நேர்த்தி செய்வது உள்ளிட்ட பணிகளை புதன்கிழமைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி