உலகின் முதல் சோலார் விமானம் இந்தியா வந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

உலகின் முதல் சோலார் விமானம் இந்தியா வந்தது


உலகின் முதல் சோலார் விமானம், இந்தியாவில் தரையிறக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், 120 கோடி இந்திய மக்களிடம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவித்து அதன் மூலம், உலக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலுப்பெறச் செய்வதேயாகும் என, விமானிகள் தெரிவித்துள்ளனர்.

முதன்முதலாக, எரிபொருள் உதவியின்றி முற்றிலும் சூரிய ஒளியில் இயங்க கூடிய, 'சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்.ஐ., - 2)' விமானம், ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, சுவிட்சர்லாந்தை சேர்ந்த, பெர்ட்ரண்ட் பிக்கர்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த சோலார் விமானம், அபுதாபியிலிருந்து, 5 மாதம் கால இடைவெளியில் உலகம் முழுவதும் சுற்றி வர உள்ளது. கடந்த திங்களன்று அபுதாபியிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், ஓமன், மஸ்கட்டை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட விமானம், அரபிக்கடலின் மேல், 1,465 கி.மீ., பயணம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள் போர்ஸ்பெர்க் மற்றும் பிக்கர்டு ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிக்கர்டு கூறியதாவது:

'சோலார் இம்பல்ஸ் 2' விமானத்தின் இறக்கைகளில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, விமானத்தின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த விமானம் உலகம் முழுவதும் ஓட்டிச் செல்லப்பட உள்ளது. அடுத்தகட்டமாக, இந்த சோலார் விமானம் வாரணாசி செல்ல உள்ளது. பசிபிக் பெருங்கடலை தாண்டும் முன்பாக, 35 ஆயிரம் கி.மீ., பயண தூரத்தில், சீனா மற்றும் மியான்மர் உள்ளிட்ட, 12 நகரங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. வறுமை ஒழிப்பு, மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இதில் அடங்கும். இவை குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, எஸ்.ஐ., - 2 விமான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்கென, தனி இணையதளம் ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது. இந்த பயண திட்டம் வெற்றிகரமாக அமைய, இந்தியாவில் உள்ள, 120 கோடி மக்களும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பருவநிலை மாற்றம் என்ற விஸ்வரூப பிரச்னைக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி