புதிய சட்டம் அமலுக்கு வந்தால் சட்டவிரோத தத்து குழந்தைகள் பிரிக்கப்படுவர்:குழந்தைகள் நலப் பிரிவு துணை இயக்குநர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2015

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் சட்டவிரோத தத்து குழந்தைகள் பிரிக்கப்படுவர்:குழந்தைகள் நலப் பிரிவு துணை இயக்குநர் தகவல்


குழந்தைகள் தத்தெடுப்பு தொடர்பாக புதிய சட்டம் அமலுக்கு வந்தால் அனுமதி பெறாமல் தத்து எடுப்போரிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதுடன் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சமூக நல ஆணையரகத்தின் குழந்தை நலப் பிரிவு துணை இயக்குநர் நா.தமிழரசி கூறினார்.
குழந்தைகள் தத்தெடுத்தோர், பதிவு செய்துள்ளோருக்கான கலந்தாய்வு நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சமூக நல ஆணையகரத்தின் குழந்தை நலப் பிரிவு துணை இயக்குநர் நா.தமிழரசி செய்தியாளர்களிடம் கூறியது:

குழந்தைகளை சட்டத்துக்கு உட்பட்டு தத்தெடுப்பதில் தவறுகளை தடுக்க அரசு பல்வேறு மாற்றங்களை விரைவாக மேற்கொண்டு வருகிறது. இளைஞர் நீதிச் சட்டம் புதிய மாற்றங்களுடன் விரைவில் அமலாக உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் அனுமதியின்றி தத்து எடுப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், வளர்ப்போரிடமிருந்தும் குழந்தைகள் பிரிக்கப்படுவர். தற்போதுகுழந்தைகள் தத்து எடுக்க விரும்புவோர் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே குழந்தைகளை பெற முடியும். குழந்தைகளை தத்து வழங்கலாம் என அரசுத் துறை சான்றிதழ் அளித்தால் மட்டுமே பராமரிப்பு மையங்கள் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தத்து எடுக்கும் பெற்றோரின் கூட்டு வயது 90-க்கு மிகாமலும், 3 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோரின் கூட்டு வயது 105-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தமிழகத்தில் தத்து கேட்டு 600 பெற்றோர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால், தத்து வழங்க தயார் நிலையில் 400 குழந்தைகள் மட்டுமே உள்ளன. 1992 முதல் 2015 மார்ச் மாதம்வரை 3,874 பெண், 836 ஆண் குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெறப்பட்டுள்ளன. தற்போது பெறப்படும் குழந்தைகள் சுழற்சி முறையில் தமிழகத்திலுள்ள 15 தத்தெடுப்பு நிறுவனங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.

தத்தெடுப்பு நிறுவனங்கள் தொடங்கியதிலிருந்து கடந்த மார்ச் மாதம்வரை 3432 பெண், 1049 ஆண் குழந்தைகள் உள்நாட்டிலும், 71 ஆண், 317 பெண் குழந்தைகள் வெளிநாடுகளிலும் தத்து வழங்கப்பட்டுள்ளன. இத்தனை வயதில், இவ்வளவு நாட்களில் தத்து வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தி பெற முடியாது. தத்து எடுக்க வேண்டும் என்ற உறுதியான மனநிலையோடு காத்திருப்பவர்களுக்கு விரைவாக குழந்தை கிடைப்பது கடவுளின் அருளால் மட்டுமே சாத்தியம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி