அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2015

அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

கோடை வெயில் கொளுத்தி வருவதால், அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதா? என்று பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, அதற்குவாய்ப்பில்லை என்றும், திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்என்று பதில் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 110 டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இந்த நிலை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.சுட்டெரிக்கும் வெயிலைக் கருத்தில் கொண்டு ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படவிருந்த புதுவை மாநிலப் பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில அரசு  அறிவித்துள்ளது. புதுவை மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்னும் 100 டிகிரி ஃபாரண்ஹீட்டை (38 டிகிரி செல்சியஸ்) தாண்டவில்லை.
அத்தகைய சூழலிலேயே புதுவை மாநில குழந்தைகளின் நலன் கருதி  அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட கூடுதலான வெப்பம் தகிக்கும் தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குழந்தைகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது.கோடை வெயிலும், அனல் காற்றும் வறுத்தெடுக்கும் நிலையில், பள்ளிக்கூடங்களை முன்கூட்டியே திறந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக 5 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பதை பள்ளிக்கல்வித்துறை சிந்திக்க வேண்டும்.பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அரசு பள்ளிகள்  திறக்கப்படுவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
எனவே, மாணவச் செல்வங்களின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் திறப்பை ஜூன் பிற்பகுதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி