பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகத்துடன் சீருடை: பொறுப்புகளை பட்டியலிட்டது கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2015

பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகத்துடன் சீருடை: பொறுப்புகளை பட்டியலிட்டது கல்வித்துறை


வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்கும் முதல் நாள் அன்றே, மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடநூல், சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொறுப்புகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை பட்டியலிட்டுவெளியிட்டுள்ளது.வரும், 2015-16ம் கல்வி ஆண்டில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின்முக்கிய பணிகளும், பொறுப்புகளும் குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கை விபரம்:
பள்ளி திறக்கப்படும் முதல் நாள் அன்றே அனைத்து மாணவ, மாணவியருக்கும் விலையில்லா பாடநூல், சீருடை, நோட்டு புத்தகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழிப்பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையில்லா பஸ் பாஸ் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கு காலதாமதமின்றி பஸ் பாஸ் பெற்றுத்தர போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்வதுடன், இடைப்பட்ட நாட்களுக்கு, பழைய மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு அனுமதி பெற்றுத்தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர், டிவி, சிடி, கற்றல் துணைக்கருவிகள் ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி மாணவர்கள் பயன் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும்,அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் பள்ளி வளாகத்தில்திறந்தவெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின் கம்பிகள், பழுதடைந்த கட்டிடங்கள் போன்றவை இல்லாமல் இருப்பதையும், பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.தலைமையாசிரியர், ஆசிரியர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், தேவையில்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்தலை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும். அதேபோல், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமின்றி குறித்த நேரத்தில் வருகை தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முப்பருவ முறை, தொடர் மற்றும் முழுமையானமதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தியப் பின்னர், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைந்துள்ளதா என்பதை, அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும், குறைந்த பட்சம், இரண்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆய்வையும், இரண்டு தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பார்வையும் மேற்கொள்வதுடன், குறைந்த பட்சம், 12 பள்ளிகளை பார்வையிட வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், நிதி தொடர்பான செயல்பாடு, நீதிமன்ற வழக்கு, முதல்வரின் மனு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றில், முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. First teachers appoint panunga aprm students serunga pallikalvithuraiyae

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி