சாதிச்சான்று அளிப்பதில் தாமதம்: தொழில் படிப்பு சேர்க்கையில் பழங்குடியின மாணவி விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2015

சாதிச்சான்று அளிப்பதில் தாமதம்: தொழில் படிப்பு சேர்க்கையில் பழங்குடியின மாணவி விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

சாதிச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக மாணவியிடம் அந்த சான்றிதழைக் கேட்காமல் விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறியியல்,மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பி. அழகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மாலா, வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனு விவரம்: நான் தூத்துக்குடி விமான நிலையத்தில் உதவியாளராக உள்ளேன். பழங்குடியின மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகள் புவனேஸ்வரி பாளையங்கோட்டை பள்ளியில் படித்தார். பிளஸ் 2 தேர்வில் அவர் 1123 மதிப்பெண் பெற்றுள்ளார். பொறியியல், மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்துடன் சாதிச்சான்று இணைக்க வேண்டியுள்ளது. சாதிச்சான்று கோரி நெல்லை வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எனக்கு சாதிச்சான்று அளித்திருந்ததால், தூத்துக்குடி உதவி ஆட்சியரை அணுகும்படி கூறினார். அவ்வாறு மனு அளித்ததன்பேரில், சாதி குறித்து நேரடி விசாரணை நடத்தஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருக்கு தூத்துக்குடி உதவி ஆட்சியர் உத்தரவிட்டார். கடந்த 20ஆம் தேதி உதவி ஆட்சியருக்கு வட்டாட்சியர் பரிந்துரை செய்தார். அதன் பிறகும் சான்றிதழ் அளிக்க உதவி ஆட்சியர் தாமதித்ததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன்.
அதன் பின்பு மீண்டும் சாதி குறித்துவிசாரணை நடத்த உதவி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொறியியல், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க மே 29 ஆம் தேதி கடைசி நாளாகும். சாதிச்சான்று சமர்ப்பிக்காவிட்டால் எனது மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே எனது மகளின் விண்ணப்பத்தை சாதிச்சான்று இல்லாமல் பழங்குடியின இடஒதுக்கீடு அடிப்படையில் பரிசீலிக்க மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுவுக்கு உத்தரவிடவேண்டும். மேலும் தாற்காலிக சாதிச்சான்று வழங்க தூத்துக்குடி உதவிஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 12 ஆம் தேதிக்குள் சாதிச்சான்று அளிப்பதாக அரசுத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விண்ணப்பம் அனுப்ப வெள்ளிக்கிழமை கடைசிநாளாக உள்ளதால் அவரது விண்ணப்பத்தை சாதிச்சான்று இல்லாமல் ஏற்றுக்கொண்டு பழங்குடியின இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலர்கள் பரிசீலிக்க வேண்டும். ஜூன் 12 ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் சாதிச்சான்று அடிப்படையில் தேர்வுக் குழுவினர் உரிய மேல்நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி